scorecardresearch
Live

Tamil News Today : விரும்பிய நேரத்தில் குழந்தை பிறக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் – அமைச்சர் மா.சு

Latest Tamil News : மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகள் வெளியீடு.

Tamil News Live : 4 நாள் அரசு முறை பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்படுகிறார் பிரதமர் மோடி. ஐ.நா. பொது சபைக் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி இன்று அமெரிக்கா செல்கிறார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கெனவே அமெரிக்காவில் இருக்கும் நிலையில் பிரதமருடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லாவும் செல்கின்றனர்.

விடிய விடிய கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.

வேட்பு மனுத்தாக்கலுக்கான கடைசி நாள்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 64,299 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விதிமீறல்களைப் பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
22:33 (IST) 22 Sep 2021
நினைத்த நேரத்தில் குழந்தை பிறக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் – அமைச்சர் மா.சு வேண்டுகோள்

நினைத்த நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களை நிர்பந்திக்க வேண்டாம் ஒரு அண்ணனாக கேட்டுகொள்கிறேன் என்று அமைச்சர் மா.சுப்பிரயணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

20:29 (IST) 22 Sep 2021
பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; ஐ.நா.வில் பேச்சு

நான்கு நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பின்னர் ஐ.நா கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். இன்று அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி குவாட் தலைவர்களை தனித் தனியாகவும் பின்னர், ஒன்றாகவும் சந்திக்கவும் உள்ளார். பிரதமர் விடுத்துள்ள செய்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் செல்வதாகவும் 22-25ம் தேதி வரை 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பின்னர், ஐ.நா.வில் பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

20:16 (IST) 22 Sep 2021
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,682 பேருக்கு கொரோனா; 21 பேர் பலி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,682 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் பலனின்றி இன்று 21 பேர் உயிரிழந்தனர். மேலும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 1,627 பேர் குணமடைந்தனர்.

20:11 (IST) 22 Sep 2021
நாகாலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் பேச்சுவார்த்தை குழுவிலிருந்து விலகினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

நாகாலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட ஒன்றிய குழுவில் இருந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விலகினார்.

18:39 (IST) 22 Sep 2021
பட்டியலினத்தவர் குறித்து அவதூறு பேச்சு: நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமின் நீதிமன்றம் உத்தரவு

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

18:17 (IST) 22 Sep 2021
விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும்; அனைவரும் தயாராக இருக்க வேண்டும் – இ.பி.எஸ்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி: “ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் 2024ல் விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும். அனைவரும் தயாராக இருக்க வேண்டும். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் தேனீக்கள் போல செயல்பட்டு தேர்தல் பணியாற்ற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

17:44 (IST) 22 Sep 2021
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் நேரம் அதிகரிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில், தற்போது கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.

17:17 (IST) 22 Sep 2021
உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நேற்று வரை 64,299 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 25 ஆகும்.9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ளது. 27,003 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிட சுமார் 1 லட்சம் பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

17:03 (IST) 22 Sep 2021
அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

குத்தகைக்கு விடப்பட்டுள்ள கோயில் நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகையை மாற்றியமைக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையை அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

16:51 (IST) 22 Sep 2021
புதுச்சேரி மாநிலங்களவை தேர்தல்: செல்வகணபதி போட்டியின்றி தேர்வு

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் செல்வகணபதி போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

16:22 (IST) 22 Sep 2021
வைகோவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

திராவிட இயக்கத்தின் போர்வாளாகவும் – நாடாளுமன்றத்தில் தனது விவாதங்களால் நடுங்க வைக்கும் அனலாகவும் – கொண்ட கொள்கைக்காக இடைவிடாத போராளியாகவும் வலம்வரும் என் ஆருயிர்ச் சகோதரர் வைகோ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! அவரது சொல்லும் செயலும் நூறாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்!

15:52 (IST) 22 Sep 2021
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நாளை டெல்லி பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக நாளை டெல்லி செல்கிறார் அங்கு அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

15:51 (IST) 22 Sep 2021
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15:10 (IST) 22 Sep 2021
திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின் போது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

14:44 (IST) 22 Sep 2021
உ.பி மடாதிபதி நரேந்திர கிரி மரணத்திற்கு காரணம் என்ன?

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த பாகம்பரி மடத்தை நிர்வகித்து வந்த நரேந்திர கிரி கடந்த திங்கட்கிழமை தன்னுடைய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் நரேந்திர கிரியின் சீடர்களான ஆனந்த கிரி, ஆத்ய திவாரி, சந்தீப் திவாரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே உயிரிழந்த மடாதிபதி கைப்பட எழுதி வைத்துள்ள கடித்த்தில், தன்னை அவமானப்படுத்தும் நோக்கில் பெண் ஒருவருடன் தன் போட்டோவை மார்பிங் செய்த ஆனந்த கிரியின் செயலால் மனம் நொந்து தற்கொலை முடிவை எடுத்ததாக எழுதி வைத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

13:45 (IST) 22 Sep 2021
பிராந்திய மொழிகளில் சுற்றுச்சூழல் அறிக்கை வெளியிடப்படும் – மத்திய அரசு தகவல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை, அனைத்து பிராந்திய மொழிகளிலும் அக்டோபர் 21-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது

13:20 (IST) 22 Sep 2021
தமிழ்நாட்டில் கோவளம் கடற்கரைக்கு புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ்

தமிழ்நாட்டில் கோவளம் கடற்கரைக்கு புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி ஈடன் கடற்கரைக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

12:52 (IST) 22 Sep 2021
உலகம் முழுவதும் Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

Made in India போல், உலகம் முழுவதும் Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும், இதுவே தமிழக அரசின் லட்சியம் என முதல்வர் ஸ்டாலின் ஏற்றுமதி மாநாட்டில் பேசியுள்ளார்

12:28 (IST) 22 Sep 2021
புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்

புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

12:23 (IST) 22 Sep 2021
சென்னையில் ஏற்றுமதி மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி – முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் ஏற்றுமதி மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் அம்மாநாட்டில் பேசியுள்ளார். மேலும், தொழில் வளர்ச்சி என்பது அனைத்து துறைகளின் வளர்ச்சியை குறிக்கும், அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மாநாடு நடைபெற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

12:17 (IST) 22 Sep 2021
ஜெயங்கொண்டம் அருகே பெண் குழந்தை விற்பனை: 5 பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 3 மாத பெண் குழந்தையை விற்ற பெற்ரோர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12:06 (IST) 22 Sep 2021
ஐ.நா.வில் பேச அனுமதிக்க வேண்டும் – தலிபான்கள் கோரிக்கை

ஐ.நா.வின் 76-வது கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுக் குழுக்கூட்டத்தில் பேச அனுமதிக்குமாறு தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

12:00 (IST) 22 Sep 2021
சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு

நீட் தேர்வு நீடிக்குமானால் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு சிதையும் எனக் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன். மேலும், உண்மைகளை வெளிக்கொணர்ந்து சட்டப் போராட்டத்திற்கான வழிவகைகளையும் ஆராய்ந்து சொன்ன ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினருக்கு மக்கள் நீதி மய்யம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

11:57 (IST) 22 Sep 2021
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

10:06 (IST) 22 Sep 2021
பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம்

குழந்தைப் பருவக்கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க, கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது மத்திய கல்வி அமைச்சகம். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கருத்துக்களையும் கேட்டு புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

09:23 (IST) 22 Sep 2021
23 கோடியைக் கடந்தது கொரோனா பாதிப்பு

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் அதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 கோடியைக் கடந்துள்ளது.

09:21 (IST) 22 Sep 2021
‘ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு’ மாநாடு

ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு என்ற மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி கையேட்டை முதலமைச்சர் வெளியிடுகிறார்.

Web Title: Tamil news today live tamilnadu stalin modi rainfall election