Tamil Nadu News Updates: அகமதாபாத் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் தவான் , கெய்க்வாட், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.மேலும், நெட் பவுலர் நவ்தீப் சைனி, பீல்டிங் கோச் திலீப், பாதுகாப்பு அதிகாரி லோகேஷ் உள்பட மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர்.
நானும் தமிழன் தான் – ராகுல் காந்தி
மக்களவை உரையில் அதிகம் தமிழ்நாடு பற்றியே குறிப்பிட்டு கொண்டிருக்கிறீர்களே என்ற செய்தியாளர் கேள்விக்கு நான் தமிழன்தான் என்ற ராகுல் காந்தியின் பதில் வைரலாகியுள்ளது.
ஜூனியர் உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா
ஜூனியர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா . பிப்.5ல் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதல்வுள்ளன.
பெட்ரோல், டீசல் அப்டேட்
சென்னையில் 91வது நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு
பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஜனவரி 31ம் தேதி வரை பூங்கா மூடப்பட்டது. இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இன்று( பிப்ரவரி 3) முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
நீட் விவகாரம் தொடர்பான சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கக்கூடாது என்பதே எனது எண்ணம் என்று பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வரும் 7ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநரால் திரும்ப அனுப்பப்பட்டது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி திமுக எம்.பி. திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
அவதூறு பரப்புரைகளைக் கைவிட்டு தமிழ்நாட்டு மண்ணின் சமூகநீதி உணர்வினை பெற்றிட வேண்டும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மீது அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில் இன்று தெலுங்கு டைடன்ஸ் அணியை எதிர்கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 43 – 25 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி வெற்றி பெற்றது.
ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை நேரில் சந்திக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அண்ணாமலை நன்றி தெரிவிக்கிறார்
உத்தர பிரதேசம், மீரட்டின் கிதாவுரில் தேர்தல் பிரசாரம் முடித்து புறப்பட்டபோது எனது காரின் மீது 4 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி கூறியுள்ளார்.
நீட் விலக்கு மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வா ஸ்டாலின், பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், “ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?” என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில், நீட் விலக்கு மசோதாவை திரும்ப அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூ. உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஒரு மசோதாவை திரும்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்று மக்களவையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில் அளித்துள்ளார்.
ஆளுநர் அர்.என். ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பியது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 4 மாதங்களில் 4,717 சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. 2016-2021ல் சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தது தொடர்பாக 10,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை தொடர்பான வழக்குகளின் விசாரணையை ஐகோர்ட் பிப்ரவரி 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: நீட் தேர்வு விலக்கு பெறுவது என்பது சட்டப் பிரச்சினை. அதிமுக அரசு கையாண்ட விதத்தில்தான், திமுக அரசு நீட் விவகாரத்தை கையாண்டு வருகிறது. நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமைதான் வெளிப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நீட் மசோதாவை திருப்பி அனுப்பியது தமிழக மக்களை புறக்கணிக்கும் செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டது. மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். பள்ளிகளுக்கு குழந்தைகள் நேரடியாக வருவது தொடர்பாக பெற்றோரின் ஒப்புதல் தேவையா என்பதை மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ரவி சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார். நீட் தேர்வு விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு சபாநாயகருக்கு ஆளுநர் ரவி அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. சென்னை, திருப்பூர், மதுரை, கும்பகோணம், தூத்துக்குடி, ஈரோடு, சேலம், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
நிலவை ஆராய்ச்சி செய்ய தயாரிக்கப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் விண்வெளி திட்டமாக ‘ரிசாட்-1ஏ’ என்று அழைக்கப்படும் பூமியை பார்வையிடும் செயற்கைக்கோள், பிப்ரவரி 2வது வாரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது என்று அறிவியல் மற்ரும் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டில், மேலும் இதுபோன்ற 19 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியை பெண்களுக்கு ஒதுக்கியதை எதிர்த்த வழக்க்கில், அரசியல் சாசனத்தின்படி வார்டு மறுவரையறையை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என சென்னை மாநகராட்சி தரப்பும், சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட வார்டு மறுவரையறை அடிப்படையில் தேர்தல் அறிவிப்பு வெளியீடு என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை பிப்.14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னை, மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கில் திருச்சியில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேரை விக்கிரவாண்டி காவல்துறை கைது செய்துள்ளது. விக்னேஷ்வர், கிஷோர் குமார், நவீன், புவனேஷ்வர், சஞ்சய் ஆகிய 5 பேர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், உயர்நீதிமன்ற கிளை உத்தரவு தவறானது, இடைக்கால தடை விதிக்க வேண்டும் தமிழக அரசு அந்த அரசு மேல்முறையிட்டு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது.
“நம் நாட்டின் மற்ற எல்லா மாநில மக்களைபோன்று, தமிழர்களும் என் சகோதர சகோதரிகளே. உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. இந்தியாவின் பன்மைத்துவ, கூட்டாட்சி மற்றும் கூட்டுறவு வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 10ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை திமுக இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, நாகர்கோவில், திண்டுக்கல் மாநகராட்சிகளுக்கும், நாகை, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, புதுக்கோட்டை உள்ளிட்ட நகராட்சிகளுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவித்துள்ளது.
37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுவதை விடுத்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 9 மாதகால திமுக அரசின் தோல்வியை மறைக்க சமூக நீதிக் கூட்டமைப்பு என நாடகம் ஆடுகிறாரா முதல்வர் ஸ்டாலின்? என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழகத்தை பாஜக ஆட்சி செய்ய முடியாது என்ற ராகுல்காந்தியின் கருத்து குழப்பத்தின் விளைவு. நானும் தமிழர் என்று அரசியல் லாபத்திற்காக ராகுல்காந்தி சொல்கிறார் என பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பாஜக ஆட்சி செய்ய முடியாது என்ற ராகுல்காந்தியின் கருத்து குழப்பத்தின் விளைவு. நானும் தமிழர் என்று அரசியல் லாபத்திற்காக ராகுல்காந்தி சொல்கிறார் என பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் தொடர்புடைய வழக்கில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்தது.
“தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன் அணையை பலப்படுத்த தேவையான ஒத்துழைப்பை அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். கடந்த ஆண்டு நவம்பரில் 142 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டதால், அணை பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய வேண்டிய தேவையில்லை.” என மத்திய அரசின் நிலை அறிக்கைக்கு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக ஆந்திரப் பிரதேச அரசு ஊழியர்கள் இன்று ‘சலோ விஜயவாடா’ என்ற மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தினர். இந்த போராட்டத்தில் ஊழியர்கள் கலந்து கொள்வதை தடுக்க, நகரின் புறநகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
போராட்டக்காரர்களை கைது செய்ய ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் சிறப்பு போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இருந்தபோதும் லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பேரணியில் பங்கேற்றதால் பரபரப்பு நிலவியது. அந்த பேரணியில் முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், ஆந்திர அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் பணிக்கு வயதில்லை என்ற சொல்லிற்கேற்ப சென்னை மாநகராட்சி தேர்தலில் 94 வயது மூதாட்டி காமாட்சி என்பவர் ஆர்வமுடன் போட்டியிடுகிறார். நடைபெறவிருக்கும் சென்னை மாநகராட்சி தேர்தலில் அடையாறு மண்டலம் பெசன்ட்நகர் 174வது வார்டில் சுயேட்சையாக மூதாட்டி காமாட்சி போட்டியிடுகிறார். தற்போதைக்கு தமிழ்நாட்டிலேயே அதிக வயதுடைய வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச மாநில தேர்தலை முன்னிட்டு அம்மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. மாநிலத்தின் அடுத்த 25 ஆண்டுகால தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தல்” என்று பேசியுள்ளார்
ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி எவ்வித மோசடியும் நடைபெறவில்லை என மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி, “மாநில அளவில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தேவை; நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தேவை' என்று பேசினார்.
தொடர்ந்து, “ஒரு காலத்தில் மருத்துவத்துறையில் 95% பேர் உயர் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இட ஒதுக்கீட்டுக்காக தமிழ்நாடு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே முதன்முதலில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.” என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
இதனையடுத்து பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு இதுவரை இயற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் வரும் 10ஆம் தேதி நடத்தும் போராட்டத்துக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்த 9 மருத்துவர்களுக்கும் மத்திய அரசு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது; தமிழக அரசின் ரூ.25 லட்சம் நிவாரணம் எங்கே எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு காலத்தில் மருத்துவத்துறையில் 95 சதவீதம் பேர் உயர் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இட ஒதுக்கீட்டுக்காக தமிழகம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் முதன்முதலில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது என மாநிலங்களவையில் எம்.பி.ஆர்.எஸ்.பாரதி பேசினார். மேலும், பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு இதுவரை இயற்றாதது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மக்களிடையே’ வெறுப்புணர்வை தூண்டுவதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில்’ தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வத்தை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டில் 127 புலிகள் உயிரிழந்துள்ளன. தமிழகத்தில் 4 புலிகள் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
சென்னை புத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை இல்லாமல், இதுவரை 77 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 14 லட்சம் பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டதாக கூறி, 25,368 சமூக வலைதள கணக்குகளை மத்திய அரசு முடக்கியது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 9ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டது. கடையநல்லூர், செங்கோட்டை, புளியங்குடி மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேட்டு இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்பிக்க இந்துசமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை டி.டி.கே. சாலையில் நீட்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் முதல்வருக்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் சதீஷ் நன்றி கூறியுள்ளார். 'CM SIR HELP ME' என்ற பதாகையுடன் முதல்வரை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டு வர வேண்டும் என்று முதல்வரிடம் அந்த மாணவர் கோரிக்கை
நீதிபதி நியமனங்களில் பெண்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க அரசின் நடவடிக்கைகள் என்ன? என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊரக பகுதியை சேர்ந்த மாணவர்களை நீட் தேர்வு கடுமையாக பாதித்துள்ளது என்பதால் தமிழகத்திற்கு நீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் எம்.பி. தம்பிதுரை பேச்சு
ராகுல்காந்தி தமிழன் என்று சொல்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட தஞ்சை பள்ளி மாணவியின் தந்தை, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், தனது தரப்பு கருத்தை கேட்காமல் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 96 குறைந்து ரூ36,288க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ12 உயர்ந்து ரூ4,536க்கு விற்பனையாகிறது.
தமிழகம் முழுவதும் 600 மையங்களில் கொரோனா பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. சென்னையில் 160 மையங்களில் பூஸ்டர் டோஸ் முகாம் செயல்படுகிறது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,72,433 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,59,107 பேர் குணமடைந்துள்ளனர் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர்.