Vanniyar Reservation Issue : தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வரும் நிலையில், வன்னியர்களுக்கு 20 % இடஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 20% உள்ஒதுக்கீடாக வன்னியர்களுக்கு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில், பாமகவினர் பலர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த போராட்டத்தினால் அன்றைய தினம் சென்னையில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த போராட்டம் குறித்து டாக்டர் ராமதாஸ் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலம் ஆட்சி செய்தவர்களும், தற்போது ஆட்சியில் இருப்பவர்களும் எங்களது கோரிக்கையை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த இடஒதுக்கீட்டுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் பலர் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர்.
ஆனாலும் இந்த போராட்டத்திற்கு இன்னும் முடிவு கிடைக்கவில்லை. அதனால் வரும் தேர்தலில் நாங்கள் கேட்ட இடஒதுக்கீடு கிடைத்தால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ள ராமதாஸ், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறைந்தாலும் பரவாயில்லை, நாங்கள் கேட்ட இடஒதுக்கீடு கட்டாயம் வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் கூட்டணி குறித்து பேச சென்ற அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர் திரும்பிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாமக சிறப்பு நிர்வாக குழுவுடன் ஆலோசனை நடத்திய டாக்டர் ராமதாஸ், இந்த இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசுடன் வரும் 3-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேச்சுவார்த்தையின் முடிவை பொறுத்தே அரசியல் கூட்டணி முடிவு செய்யப்படும் என்ற நிலையில். இந்த பேச்சுவார்த்தை பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு கிடைக்கவில்லை என்றால், பாமக அதிமுகவுடன் கூட்டணியில் இருக்குமா? அல்லது வேறு கூட்டணி நோக்கி நகருமா என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே கடந்த 1987-ம் ஆண்டு நடைபெற்ற வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த போராட்டத்தில் பங்கேற்ற பலர் உயிரிழந்த நிலையில், அப்போதைய முதல்வர் எம்.ஜிஆர், வன்னியர் சமூகத்தினரின் முக்கிய பிரமுகர்கள் அழைத்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து வன்னியர் சமுதாயத்திற்கு 20 % இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
ஆனால் அதன்பிறகு முதல்வராக வந்த கலைஞர் கருணாநிதி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மேலும் 108 சமுதாயங்களை சேர்த்ததால், அவர்கள் அனைவருக்கும் 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"