Tamil News Update : தண்டனைக்காலம் முடிந்தும் வெளியில் விடாத நிலையில், இது தொடர்பாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பலனளிக்காததால் இலங்கை அகதிகள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பாடுத்தியுள்ளர்.
திருச்சி ஏர்ப்போர்ட் அருகே சுப்பிரமணியபுரத்தில் பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு அகதிகள் முகாம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. குற்ற வழக்குகளில் சிக்கும், இலங்கைத் தமிழர்கள், வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த கைதிகள் இங்கு அடைக்கப்படுவது வழக்கும். இதில தற்போது 80 இலங்கை அகதிகள் உட்பட சுமார் 1200-க்கு மேற்பட்ட வெளியாட்டு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை போல் இல்லாமல் அனைத்து வசதிகளும் உள்ள இந்த வளாகத்தில். பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தண்டனைக்காலம் முடிந்தும் தங்களை தங்கள் நாட்டிற்கு அனுப்பாமல் சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பதாக கூறி கைதிகள் பலரும் அவ்வப்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சமீபத்தில் எங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று அரசுக்குக் கோரிக்கை வைத்து பல கட்டத்தில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற அரசு முதற்கட்டமாக கடந்த மாதம் 12 கைதிகளை அகதிகள் முகாமிலிருந்து வெளியிட்டது. இதனால் தங்களையும் விடுவிக்க வேண்டும் என்று கூறி 10-க்கும் மேற்பட்ட கைதிகள் கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதனால் விரக்தியடைந்த போராட்டகார்ர்களில் ஒருவர், வயிற்றைக் கிழித்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். மற்றொருவர் மரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.
மேலும் ஆறு பேர் அதிக அளவிலான தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
இது தொடர்பாக தமிழ்ப் பேரரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் வ.கௌதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காலம் கடந்தும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவில்லை என்பதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனளிக்காத சூழலில் திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமிலிருக்கும் 18 ஈழத் தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும், ஒருவர் கடுமையாக வயிற்றை கிழித்துக்கொண்டும், இருவர் தூக்கிட்டுக்கொண்டும் தற்கொலை முயற்சி மேற்கொண்டிருப்பது பெரும் கவலைக்கும் வேதனைக்கும் உரிய விடயம்.
நேரடியாகவும் அறிக்கையின் மூலமாகவும் இன்னும் எத்தனை முறைதான் நாங்கள் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் அவலங்களை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது? தமிழ்நாடு கூடுதல் காவல் துறை இயக்குனர் அவர்களிடம் நேரில் சென்றும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கும், திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் அகதிகள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் மஸ்தான் அவர்களின் பார்வைக்கும் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.
அரசின் சார்பாக அகதிகள் மறுவாழ்வுத் துறை ஆணையர் அவர்கள் சென்னையிலிருந்து திருச்சி சிறப்பு முகாமிற்கு நேரில் சென்று அங்கே போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எம் ஈழத் தமிழர்களை சந்தித்து 20 நாட்களில் விடுதலை செய்கிறோம் என்று வாக்குறுதி தந்துவிட்டு 30 நாட்கள் கடந்த பிறகும் கூட அவர்களை விடுதலை செய்வதற்கான முகாந்திரமே ஏற்படுத்தப்படவில்லை என்கிற நிலையில்தான் கசப்புணர்வோடு, கனத்த மனதோடு அவர்கள் இந்த உயிர் கொடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். ஒருபோதும் இதுமாதிரியான போராட்ட வடிவத்தை யாம் ஆதரிக்க முடியாது. வாழ்வதற்குத்தான் போராட வேண்டுமே தவிர சாவதற்காக போராடுவதை மனிதகுலம் ஏற்காது. என்றாலும் கூட வாக்குறுதி கொடுத்த அரசு மீண்டும் மீண்டும் காலம் தாழ்த்துவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
அது நேர்மையற்றது. சில உயிர்களை காவு வாங்கிய பிறகுதான் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால் ரத்தவெறி பிடித்த ராஜபக்சேவின் கொடூர குணத்திற்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டுவதாகத்தான் அது அமையும். காலம் தாழ்த்தப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதிதான். ஆகையினால் இனியும் காலம் தாழ்த்தாமல் கருணை மனதோடு விடுதலைக்கு தகுதியான எம் ஈழத்தமிழர்களை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக தமிழ்நாடு அரசினை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil