எஸ்.வி.சேகருக்கு இனி எந்த கட்சிப் பொறுப்பும் கிடையாது! - தமிழிசை

அவருக்கு எந்தவித பொறுப்போ, பணிகளோ தரமாட்டோம்

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் சில வாரங்களுக்கு முன்னர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அநாகரீகமான கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிந்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததுடன் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க : ‘நண்பரின் கருத்தை தவறுதலாக ஷேர் செய்துவிட்டேன்; என்னை மன்னியுங்கள்’! – எஸ்.வி.சேகர்

இந்த பதிவு தொடர்பாக அளித்த புகாரில் எஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யதனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்தார். அதில் அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோதும் முன் ஜாமீன் மறுக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் வரை சென்ற எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதுவரை அவரை கைது செய்யாத சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் ஆய்வாளருக்கு எதிராக பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சமீபத்தில் தொடர்ந்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜனிடம், எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாமல் இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர், “எஸ்.வி.சேகர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது, அவருக்கு எந்தவித பொறுப்போ, பணிகளோ தரமாட்டோம். பெண்களை இழிவுபடுத்தியது பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகராக இருந்தாலும் அது தவறுதான் . சட்டம் தன் கடமையை செய்யட்டும்” என்றார்.

முன்னதாக, எஸ்.வி.சேகரின் அவதூறு ஃபேஸ்புக் பதிவு வெளியான உடனேயே தமிழிசை கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close