Advertisment

‘மீம்ஸ் தம்பிகளுக்கு எனது ஒரே வேண்டுகோள்’ -தமிழிசை ஸ்பெஷல் பேட்டி

Tamilisai Soundararajan Interview: 'தாமரை தமிழகத்தில் நிச்சயம் மலர்ந்தே தீரும்!’என உறுதி குறையாமல் பேசுகிறார் தமிழிசை.

author-image
Janardhan koushik
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

Telangana New Governor Tamilisai Soundararajan Interview: மீம் கிரியேட்டர்கள் என் உருவத்தை கேலி செய்தனர், ஆனால் அவை தான் என் வளர்ச்சிக்கு உதவியாக இருந்துள்ளது - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

Advertisment

தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இ.எஸ்.எல். நரசிம்மனுக்குப் பதிலாக தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநராக அவர் அதிகாரபூர்வமாக செப்டம்பர் 8-ல் பொறுப்பேற்கிறார்.

மருத்துவராக தனது வாழ்க்கையை தொடங்கிய தமிழிசை, பாஜகவின் மாநில தலைவராக ஐந்து வருடம் பணி ஆற்றியுள்ளார். ஒருபுறம் கட்சி தொண்டர்கள், மறுபுறம் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொலைபேசி மூலம் தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் இருக்க, பாஜகவின் சென்னை தலைமை செயலகமான கமலாலயம் திருவிழா காட்சி கொண்டிருந்தது. இத்தனை பரபரப்புகளுக்கு இடையே, தமிழிசை சௌந்தர்ராஜன் நம்மிடம் பேசினார்

தெலுங்கானாவின் ஆளுநராக அறிவிக்கப்பட்டிருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

உண்மையில் நான் இந்த அறிவிப்பை எதிர்பார்க்கவில்லை. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் நான் இந்த கட்சிக்காக பாடுபட்டிருக்கிறேன்.

ஒரு சாதாரண தொண்டனான என்னை அங்கீகரித்து இத்தனை உயர் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளது எங்கள் கட்சி. வருகின்ற ஜனவரி மாதத்துடன் பாஜகவின் மாநில தலைவராக எனது பதவி காலம் நிறைவுபெறுகிறது, கட்சியின் விதிமுறை படி நான் மீண்டும் அந்த பதவிக்கு போட்டி போட முடியாது. நான் ஏற்கனவே பாஜகவின் தேசிய செயலாளராக பணி ஆற்றியிருக்கிறேன், ஆதலால் மக்கள் சேவை ஆற்ற என்னை ஒரு உயரிய பொறுப்பிற்கு என் கட்சி பரிந்துரைசெய்துள்ளது. நான் அதற்கு இன்னும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் உங்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கொள்கை ரீதியாக எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் எங்கள் அனைவரின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே ஆகும். அவர்கள் மாநிலத்தின் பெண்ணிற்கு இத்தகைய உயரிய பதவி கிடைத்திருப்பது நிச்சயம் அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும். இந்த கெளரவம் தமிழிசைக்கு கிடைத்தது அல்ல, தமிழ்நாட்டிற்கு கிடைத்தது. கமலாலயத்தையும், இந்த மண்ணையும் நிச்சயமாக என்னால் மறக்கமுடியாது.

சமூக வலைதளத்தில் உங்களை கேலி கிண்டல் செய்தவர்கள் பலபேர்- அவர்களுக்கு உங்களுடைய பதில் என்ன?

முதலில் அவர்களுடைய திறமையை நான் பாராட்டி ஆகவேண்டும். நான் தொலைக்காட்சியில் பேசிய சில நிமிடங்களில் அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வந்துவிடும். வடிவேலு அல்லது கவுண்டமணியை எடுப்பார்கள், நான் சொன்ன கருத்தை நடுவில் வைத்து கச்சிதமாக ஒரு மீம் செய்து விடுவார்கள். நான் அதை ரசிப்பேன். இந்த எடிட்டிங் செய்வதற்கு நிச்சயம் திறமை வேண்டும். என் முடியை கிண்டல் செய்தார்கள், என் நிறத்தை கிண்டல் செய்தார்கள், என் உருவத்தை கிண்டல் செய்தார்கள். அவர்கள் என் உருவத்தை கிண்டல் செய்யலாம், ஆனால் அவர்களால் என் உழைப்பையோ, என் ஆற்றலையோ அல்லது கரம் படியாத எனது அரசியல் பயணத்தையோ ஒரு பொழுதும் கிண்டல் செய்ய முடியாது, நான் எந்த விதத்திலும் அதில் சளைத்தவள் அல்ல.

அவர்களின் நோக்கம் இத்தனையும் செய்து என்னை காயப்படுத்த வேண்டும், என் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதாகும், அனால் அவர்களுக்கு தெரியாது, அவர்கள் செய்த அனைத்தும் நான் முன்னேறுவதற்கு ஊன்று கோலாக இருந்துள்ளது என்று. நான் அந்த தம்பிகளுக்கு ஒன்று தான் கூறி கொள்ள ஆசைப்படுகிறேன், தனிமனித தாக்குதல் செய்யாமல் யாரை வேண்டுமானாலும் கேலி செய்யுங்கள்.

காங்கிரஸின் மூத்த தலைவரான உங்கள் அப்பா உங்கள் நியமனத்திற்கு என்ன கூறினார்?

நிச்சயமாக அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த நியமனம் எங்களுக்குள் இருந்த நீண்ட வடுவிற்கு மருந்தாக இருக்கும் என நம்புகிறேன். நானும் அப்பாவும் அத்தனை பாசமாக இருந்தோம். சூழ்நிலை, கொள்கை வேறுபாடு எங்களை பிரித்து விட்டது. அவரது கோவத்தில் நியாயம் இருந்தது. அத்தனை வருடமாக காங்கிரஸ் கட்சியில் அவர் இருக்கும் பொழுது நான் பாஜகவில் இணைந்தேன். அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் போதெல்லாம் யாரையாவது காங்கிரஸில் இணையுங்கள் என்று அவர் கூறினால் உடனே உங்கள் மகளை முதலில் அதை செய்ய சொல்லுங்கள் என்று அவர்கள் கூறியிருப்பார்கள். இதுபோன்று அத்தனை அவமானங்களை அவர் சந்தித்து இருக்கிறார்.

அதேபோல், அவரது பிறந்த நாள் அன்று கூட நான் அவரை சந்தித்து வாழ்த்து கூற முடியாது. அவரை சுற்றி காங்கிரஸ் தொண்டர்கள் இருப்பார்கள், ஒரு பாஜக தொண்டனாக என்னால் அங்கு செல்ல முடியாது. ஆனால் என் அப்பாவிற்கு என்னுடைய உழைப்பு பற்றியும், ஒழுக்கத்தை பற்றியும் தெரியும், அவர் இப்பொழுது கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருப்பார். என் உறவினர்கள் நான் பாஜகவில் சேர்ந்த பின்பு என்னுடன் பேசுவதை தவிர்த்தனர், ஆனால் இப்பொழுது என் சித்தப்பா உட்பட அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர், தமிழக அரசியல் வரலாற்றை எழுதினால் அதில் எங்கள் குடும்பத்தை கண்டிப்பாக சேர்க்காமல் இருக்க முடியாது.

உங்களின் கணவரை பற்றி சொல்லுங்கள்.. உங்கள் அரசியல் வாழ்வில் அவருடைய பங்கு எத்தகையது?

என் கணவர் தான் என் வாழ்கை. நான் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு பயிலும் பொழுது எனக்கு திருமணம் நடந்து விட்டது, நான் படித்த அதே கல்லூரியில் என் கணவர் Nephrology படித்துக் கொண்டிருந்தார். அனைவரும் காதலித்து திருமணம் செய்வார்கள், நாங்கள் திருமணம் செய்த பிறகு காதலித்தோம். கேன்டீனில் ஒன்றாக உணவு உண்பது, ஒன்றாக மருத்துவமனைக்கு செல்வது என்று சென்றது எங்கள் காதல் வாழ்க்கை. நான் கல்யாணத்திற்கு முன்பே என் கணவரிடம் சொன்னேன், நான் படிக்க வேண்டும் என்று! எந்த மறுப்பும் சொல்லாமல் அவர் அதற்கு சம்மதித்து எனக்கு உறுதுணையாக இருந்தார். அவர் ஒரு நல்ல மனிதர்.

பாஜகவின் கட்சி தலைவராக ஐந்து வருடம் பணியாற்றி இருக்கிறீர்கள்.. இந்த பயணத்தில் உங்களுடைய அனுபவம் என்ன?

பாஜவின் தலைவராக மிக நீண்ட நாட்கள் நான் தான் இருந்துள்ளேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ அதை 90 சதவீதம் செய்து முடித்துவிட்டேன். கட்சி மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிவது, பூத் கமிட்டி உறுப்பினர்களை சேர்ப்பது, பிரதமர் மற்றும் கட்சி தலைவர் பங்கேற்கும் கூட்டங்களை ஏற்பாடு செய்வது, தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து பிரச்சாரம் செய்வது, பாஜகவின் கொள்கைகளை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்ப்பது என அத்தனையையும் நேர்மையுடன் முழு அர்ப்பணிப்புடன் செய்தேன். என்னுடைய தலைமைக்கு கீழ், 44.5 லட்சம் உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

ஒருவரை பற்றி குறை கூறுவது மிகச்சுலபம். ஒரு தலைவர் தன்னுடைய பொது வாழக்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும், அதை நான் ஆரம்பம் முதல் கடைபிடிக்க நினைத்தேன். எனது தந்தையை போல் ஊழல் இல்லாத அரசியல் தலைவராக திகழ வேண்டும் என்று உறுதி எடுத்தேன்.

அதேபோல் ஹிந்து/மற்ற சாதியினர் என்று நான் ஒரு நாளும் பாகுபாடு பார்த்தது கிடையாது. வெளி ஊர்களுக்கு பிரச்சாரத்திற்கு செல்லும்பொழுது காலை அல்லது இரவு உணவு ஒரு சிறுபான்மையினர் வீட்டில் உண்ண வேண்டும் என்பதை நான் வழக்கமாக கொண்டிருந்தேன். என்னை பெருமைப்படுத்தி கொள்ள நான் இதை சொல்லவில்லை, நான் அவர்கள் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்காக அதை செய்தேன். மத்தியில் இருந்து எனக்கு இதற்காக பாராட்டும் கிடைத்தது.

தந்தி டி.வி. நேர்காணல்

ஒரு பெண் தலைவராக நான் துணிச்சலாகவும், நம்பிக்கையுடனும் செயல்பட்டேன். வாழ்க்கை என்பது முட்கள் நிறைந்த பாதை. இதை தான் வருகின்ற சமுதாயத்திற்கு சொல்ல விரும்புகிறேன். நிறைவேறாத ஆசை என்று ஒன்று இருக்குமானால் அது தமிழக மக்களின் பிரதிநிதியாக எம்.எல்.ஏ அல்லது எம்.பி. ஆக வாய்ப்பு கிடைக்காமல் போனது தான்.

தெலுங்கானாவிற்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

நான் சட்டத்தை மதிக்கும் ஒரு நேர்மையான நபர். எனது கடமைகளை சட்டத்தின் எல்லைக்குள் செயல்படுத்துவேன். தெலுங்கானா முதல்வர் திரு சந்திரசேகர ராவ் அவர்ளுக்கு ஒத்துழைப்பு தந்து அவருடன் இணைந்து மக்கள் பணியாற்ற காத்திருக்கிறேன். தெலுங்கானா வளர்ச்சி அடைய வேண்டும், அதற்காக பாடுபடுவேன்.

சந்திரயான் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில்

கடைசியாக... தாமரை தமிழகத்தில் மலருமா?

என் தலைமயில் பாஜக சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை எதிர்கொண்டது. நாங்கள் கடுமையாக போட்டியிட்டோம். ஆனால் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். நாங்கள் விதைகளை விதைத்துள்ளோம், அது நிச்சயமாக வளர்ந்து பயன் தரும். தாமரை தமிழகத்தில் நிச்சயம் மலர்ந்தே தீரும்!’என உறுதி குறையாமல் பேசுகிறார் தமிழிசை.

 

Bjp Telangana Tamilisai Soundararajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment