Advertisment

தமிழக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு : ஒ.பி.எஸ்.ஸுக்கு எதிராக மத்திய அரசு

தமிழக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் ஓ.பி.எஸ். தரப்புக்கு எதிரான நிலைப்பாடை மத்திய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு : ஒ.பி.எஸ்.ஸுக்கு எதிராக மத்திய அரசு

Chennai: Tamil Nadu Chief Minister O Pannerselvam arrives to pay his last respects to political commentator Cho Ramaswamy at his residence in Chennai on Wednesday. PTI Photo (PTI12_7_2016_000269A)

தமிழக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் ஓ.பி.எஸ். தரப்புக்கு எதிரான நிலைப்பாடை மத்திய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

Advertisment

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கடந்த பிப்ரவரி 18-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது தி.மு.க.வும், ஓ.பி.எஸ். அணியும் ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்தின. ஆனால் சபாநாயகர் தனபால், ‘சட்டமன்ற விதிகளில் அதற்கு இடமில்லை’ என அறிவித்தார். இதை எதிர்த்து தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

பிறகு டிவிஷன் வாரியாக உறுப்பினர்கள் கைகளை உயர்த்தி வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இதில் ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

‘கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து அழைத்து வந்து நடத்திய இந்த வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கவேண்டும். வாக்கெடுப்பு நேர்மையாக நடக்கவில்லை. மீண்டும் ஒருமுறை ரகசிய முறையில் வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடவேண்டும்’ என கேட்டு, ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ. மாபாய் பாண்டியராஜன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. இதில் நீதிமன்றத்திற்கு உதவியாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான (அட்டர்னி ஜெனரல்) கே.கே.வேணுகோபால் ஆஜராகவேண்டும் என நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் கே.கே.வேணுகோபால் அட்டர்னி ஜெனரலாக நியமனம் செய்யப்படும் முன்பு இதே விவகாரங்களில் ஓ.பி.எஸ்.ஸுக்கு சட்ட ஆலோசனை வழங்கியிருந்தார். அதை நீதிமன்றத்தில் தெரிவித்த கே.கே.வேணுகோபால், ‘அந்த காரணத்தால் இந்த வழக்கில் தன்னால் நீதிமன்றத்திற்கு உதவி செய்ய முடியாது’ என தெளிவுபடுத்தினார். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமாரை ஆஜராக வேண்டுகோள் வைத்து, விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தது.

அதன்படி ஜூலை 11-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ரஞ்சித்குமார் ஆஜரானார். அப்போது அரசியல் சட்டப்பிரிவு 212-ஐ சுட்டிக்காட்டி வாதாடிய ரஞ்சித்குமார், ‘தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக விசாரிக்கும் அதிகார வரம்பு நீதித்துறைக்கு இல்லை. தவிர, சட்டமன்ற சபாநாயகர் இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்திற்கு பதிலளிக்க கடமைப்பட்டவர் இல்லை.’ என பதிலளித்தார்.

ரகசிய வாக்கெடுப்பு தொடர்பான முன்மாதிரிகள் மற்றும் அதன் தேவை குறித்து வாதிட, ஓ.பி.எஸ். தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அட்டர்னி ஜெனரல் தரப்பிலும் விரிவான பதிலுக்கு அவகாசம் கேட்டார். இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

டெல்லியின் செல்லப்பிள்ளையாக தன்னை அடையாளப்படுத்தி வரும் ஓ.பி.எஸ்.ஸுக்கு இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பு எடுத்திருக்கும் நிலைப்பாடு ஷாக்!

Ops Tamilnadu Assembly Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment