Advertisment

அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை, குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம்; சட்டமன்ற ஹைலைட்ஸ்

Tamilnadu assembly highlights karunanidhi statue, slum clearance board: அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை, குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம், பட்டினப்பாக்கத்தில் மிகப் பெரிய வணிக வளாகம்; சட்டமன்றத்தில் இன்று...

author-image
WebDesk
New Update
அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை, குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம்; சட்டமன்ற ஹைலைட்ஸ்

அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை, குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம், பட்டினப்பாக்கத்தில் மிகப் பெரிய வணிக வளாகம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் இடம்பெற்றன.

Advertisment

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. 

அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை

சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில்  அறிவித்துள்ளார். மேலும், அண்ணா சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு சிலை அமைக்கப்படும். மேலும், சட்டவல்லுனர்களை ஆலோசித்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், இந்த சிலை நிறுவப்படும், என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

குடிசை மாற்று வாரியம் இனி "தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் " என பெயர் மாற்றம் செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் குடிசை மாற்று வாரியம், ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட்டது. இந்த வாரியத்தின் மூலம், குடிசையில் வாழ்ந்து வந்த மக்களுக்காக பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

பட்டினப்பாக்கத்தில் மிகப் பெரிய வணிக வளாகம்

சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியுடன் 25 ஏக்கரில், பட்டினப்பாக்கத்தில் மிகப் பெரிய வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் முத்துச்சாமி அறிவிப்பு

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அறிவிப்புகள்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் அமைச்சர் முத்துச்சாமி வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு…

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, தேனி, தென்காசி, திண்டுக்கல், நாமக்கல், சேலம் ஆகிய 9 இடங்களில் ரூ.950 கோடியில் மொத்தம் 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இனி, புதிதாகக் கட்டப்படும் 2 மாடிகளுக்கு மேல் இருக்கும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக கட்டாயம் மின்தூக்கி (லிஃப்ட்) வசதி, சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை உள்ளிட்ட வசதிகளையும் செய்ய வேண்டும். பார்வையற்றோருக்கான அறிவிப்புப் பலகை, தனி வாகன நிறுத்துமிடம் ஆகியவை கட்டாயம் கட்டப்பட வேண்டும்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, தென் தமிழகத்திற்கு செல்லும் பேருந்துகளுக்காக கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியில்  புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இது, அடுத்தாண்டு மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும்.

இதேபோல், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் 336 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் செயல்பாட்டுக்கு வரும்.

தொழிற்சாலை, சுகாதாரம், போக்குவரத்து , சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து மாநிலத்திலுள்ள பெரிய நகரங்களில் நெரிசலை தவிர்க்க முக்கிய நகரங்களைச் சுற்றி துணை நகரங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற ஏழை மற்றும் குடிசைப் பகுதி வாழ் குடும்பங்களுக்கு 9.53 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பொதுமக்கள் வாங்கத்தக்க விலையில் சுயநிதி திட்டத்தின் கீழ் பாடிக்குப்பம், அயனாவரம், ஈரோடு ஆகிய இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

அரசுப் பணியாளர்கள் வீடுகட்டவும், கட்டிய குடியிருப்புகளை வாங்குவதற்கும் தமிழக அரசு முன்பணம் வழங்கும்.

பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளைப் பெற தவணை முறை திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் சாலைகளை இணைக்க பக்கிங்காம் கால்வாய் மீது ரூ.180 கோடி செலவில் உயர்மட்ட சுழற்ச்சாலை வகை மேம்பாலம் கட்டப்படும்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவிப்புகள்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு…

தமிழ்நாட்டில் முதியோர்களின் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் வகையில் “மாநில மூத்த குடிமக்கள் கொள்கை” உருவாக்கப்படும்.

பெண்கள் உரிமை மற்றும் முன்னேற்றத்திற்கான “தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை” உருவாக்கப்படும்.



தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக “கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்” அமைக்கப்படும்.

சத்துணவு திட்டத்தில் 1291 சத்துணவு மையங்களுக்கு 69 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் வைப்பறையுடன் கூடிய சமையலறைக் கட்டிடங்கள் கட்டப்படும்.

சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் 1000 சத்துணவு மையங்களில், மையம் ஒன்றுக்கு தோராயமாக ரூ.8000 வீதம், மொத்தம் ரூ.80 இலட்சம் செலவில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்படும்.

யூனிசெப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்பு பயிற்சி மையம் (Tamil Nadu State Child Protection Academy) சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் உருவாக்கப்படும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment