சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதிகள்; முழு விவரம் வெளியீடு

மொத்தம் 24 நாட்கள் கூட்டத்தொடர் நடக்கும்...

சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த ஆய்வுக் கூட்டத்தில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் நாட்கள் மற்றும் மானியக் கோரிக்கைகளுக்கான தேதிகள் குறித்து முடிவு செய்யப்பட்டது. பின், செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், ‘ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூலை 19 ஆம் தேதி வரை சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும். மொத்தம் 24 நாட்கள் கூட்டத்தொடர் நடக்கும்.

மேலும், ஜூன் 14 ஆம் தேதி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த மானியக் கோரிக்கை நடைபெறும். ஜூன் 16 ஆம் தேதி, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானியக் கோரிக்கைகளும், 19ஆம் தேதி, எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறைகுறித்த மானியக் கோரிக்கைகளும், 20, 21ஆம் தேதிகளில், உள்ளாட்சி, நகராட்சி குறித்த மானியக் கோரிக்கைகளும் நடைபெறும்.

ஜூலை 10ஆம் தேதி, முதல்வரின் பதிலுரை நடைபெறும். எதிர்க்கட்சியான தி.மு.க-வுடன் ஒன்றிணைந்தே இந்த கூட்டத் தொடர் குறித்த தேதிகள் முடிவுசெய்யப்பட்டது’ என்றார்.

முன்னதாக,டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘ஜிஎஸ்டி மசோதா தமிழக சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும்’ என்றார். எனவே, இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

×Close
×Close