Advertisment

கலைஞருக்கு அன்று கேட்ட இடம் கொடுத்தீர்களா? இ.பி.எஸ் தரப்புக்கு அப்பாவு கேள்வி

எதிர்கட்சி தலைவர் பதவியை மட்டுமே அங்கீகரிக்க முடியும்; சட்டப்பேரவைத் தலைவர் முடிவில் யாரும் தலையிட முடியாது; கலைஞருக்கு அன்று கேட்ட இடம் கொடுத்தீர்களா? இ.பி.எஸ் தரப்பிடம் அப்பாவு கேள்வி

author-image
WebDesk
New Update
TN Speaker M Appavu

சபாநாயகர் மு. அப்பாவு

எதிர்கட்சி தலைவர் பதவியை மட்டுமே அங்கீகரிக்க முடியும் என தெரிவித்துள்ள சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, கலைஞருக்கு அன்று கேட்ட இடம் கொடுத்தீர்களா? என இ.பி.எஸ் தரப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2 ஆம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அருகருகே அமர்ந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயக்குமாரை அங்கீகரிக்கக் கோரி அ.தி.மு.க இ.பி.எஸ் தரப்பு உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பினர். ஆனால் சபாநாயகர் அங்கீகரிக்க மறுத்த நிலையில், இருக்கை விவகாரத்தில் பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்படவில்லை எனக் கூறி அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள்: எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்; அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

அவையில் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டவர்களை சபாநாயகர் அவைக் காவலர்களைக் கொண்டு வெளியேற்ற உத்தரவிட்டார். அப்போது, “1988-89-ல் ஜானகி பதவிப் பிரமாணத்தின்போதும் இதேபோல் பிரச்னை செய்தீர்கள். நீங்கள் கலகம் செய்யவே வந்திருப்பது போல் தெரிகிறது. இந்தித் திணிப்பை எதிர்க்கக்கூடாது என்று முடிவு செய்து தான் வந்திருக்கிறீர்கள்” எனக் கூறி அப்பாவு வெளியேற்ற உத்தரவிட்டார்.

பின்னர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, ”இன்று காலை எனது அறைக்கு வந்து கோரிக்கை வைத்த இ.பி.எஸ் தரப்பிடம், நடந்து முடித்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என லெட்டர்பேடில் எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒப்புதலோடு, எதிர்கட்சி பதவிகள் அடங்கிய பட்டியல் அளிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் தான் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற விதி 6-ன்படி எதிர்க்கட்சித் தலைவர் என்பது தான் அங்கீகரிக்கப்பட்ட பதவி. மற்ற பதவிகள் எல்லாம் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களைத் திருப்திப்படுத்துவதற்குக் கொடுக்கின்ற பதவிகள். அவர்கள் யாரை விரும்பிகளோ முன்வரிசையில் எப்படிக் கொடுக்க வேண்டும், ஒரு உறுப்பினர் இருந்தாலும் கூட அவர்களுக்கு மரியாதையைக் கொடுக்கும் விதமாகச் சபை மரபுப்படி இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. இதில் முழுவதுமே பேரவைத் தலைவரின் விருப்பம்தான். அதில் யாரும் தலையிட முடியாது.

அதேபோன்று அலுவல்மொழி ஆய்வுக் குழுவில் உறுப்பினராக ஓ.பி.எஸ்-க்கு பதிலாக ஆர்.பி உதயகுமாரைச் சேர்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆய்வுக் குழுவில் யாரையெல்லாம் சேர்க்க வேண்டும் என்பது சட்டப்பேரவை தலைவரின் முழு உரிமை. அதில் நீங்கள் இவரைச் சேருங்கள், இவரை நீக்குங்கள் என்று சொல்வதற்கு எந்த அதிகாரமும் எந்த உறுப்பினருக்கும் கிடையாது.

ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை குறிப்பிட்டு அவர்கள் தரப்பு கோரிக்கைகளை அளித்துள்ளனர். அதில் முடிவெடுக்க வேண்டியது பேரவைத் தலைவரின் முழு உரிமை. 38 ஆண்டுகளுக்குப் பின் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான், இந்த அவை ஜனநாயகத்தோடும், நாகரீகத்தோடும், அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற அளவில் நடைபெறுகிறது.

ஒரு உறுப்பினர் தனக்கு இந்த இடம் செளகரியம் இல்லை என மாற்றித் தர கோரலாம், ஆனால் யாரையும், இங்கு அமர வையுங்கள், இங்கு அமர வைக்கக் கூடாது என்று சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது.

மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு, அவர் வந்துச் செல்ல வசதியான இருக்கை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது எடுத்த முடிவை நான் அவைக்குறிப்பில் பார்த்தேன். அதில் இப்போது இருக்கின்ற இடமே போதுமானது என்றுச் சொல்லிருக்கிறார்கள்,” எனக் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment