BJP Annamalai Explained About Nainar Naganthiran Speech : அதிமுக குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறி கருத்து பாஜகவின் நிலைபாடு இல்லை என்றும், அவரின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
தஞ்சையில் பள்ளி மாணவி ஒருவர் விஷயம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி தமிழக பாஜக சார்பில், தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மூத்த தலைவர் எச்.ராஜா எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்ட இந்த இந்த போராட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தில், ஆண்மையுடன் தைரியமாக முதுகெலும்புடன் பேசும் அதிமுகவினர் ஒருவர் கூட இல்லை என்று கடுமையான விமர்சனம் செய்திருந்தார். இந்த கருத்து அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆனால உடனடியாக இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்த நயினார் நாகேந்திரன், இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது, அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளபட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம் என்று கூறியிருந்தார்.
இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்!!#Justiceforlavanaya @news7tamil pic.twitter.com/fYCGJo2ebc
— Nainar Nagenthiran (@NainarBJP) January 25, 2022
இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
அவர் வேறு எதோ பேச வந்தார். அந்த வார்த்தைகளில் நயினார் அண்ணனுக்கு கூட உடன்பாடு இல்லை. அந்த வார்த்த கொஞ்சம் தவறாக வந்துவிட்டது. அதன்பிறகு மேலும் தவறாக திரிக்கப்பட்டுவிட்டது. இதனால் இன்று காலையிலேயே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைபாளர் .இபிஎஸ் ஒபிஎஸ் அவர்களிடம் பேச முயற்சித்தேன். இதில் ஒபிஎஸ் அவர்களிடம் பேச முடியவில்லை. இபிஎஸ் அவர்களிடம் பேசும்போது. வருத்தம் தெரிவித்தேன்.
மேலும் பாஜகவின் நிலைபாடு அதுவல்ல, அதேபோல் நயினார் நாகேந்திரன் அவர்களின் நிலைபாடும் அது கிடையாது. சொன்ன ஒரு வார்த்தை தவறாக வந்துவிட்டது. அதிமுக வலுவான எதிர்கட்சியாக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “