Advertisment

கே டி ராகவன் சர்ச்சை வீடியோ : பெண் நிர்வாகி தலைமையில் விசாரணைக் குழு - அண்ணாமலை அறிவிப்பு

Tamilnadu BJP Leader Annamalai Tweet about K T Ragavan Video தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு இங்கு இருக்கும் ஒரு சிலர்தான் காரணம் என்று மதன் கூறியதற்கு பாஜக எப்படிப் பொறுப்பேற்க முடியும்?

author-image
WebDesk
New Update
Tamilnadu BJP Leader Annamalai Tweet about K T Ragavan Video Tamil News

இன்று காலை முதல் சமூக ஊடகங்களில் மிகவும் பரபரப்பாகப் பகிரப்பட்டு வந்த தமிழக பாஜக தலைவர் கே.டி.ராகவன் காணொளிக்கு எதிரொலியாக, தன்னுடைய பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து, பாஜக நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

Advertisment

இதுத் தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் நீண்ட செய்தி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அண்ணாமலை. அதில், திரு கே டி ராகவன் தொடர்பான வீடியோவை வெளியிட்ட யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் தன்னை சந்தித்தது உண்மை என்றும் முதல் முறையாக அவர் தன்னை சந்தித்துப் பேசியபோது, கட்சி பொறுப்பில் இருக்கும் சிலரைப் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு, ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்கள் காரணமாக மட்டும் அவர்களுக்கு தண்டனை வழங்கக்கூடாது என்கிற நோக்கத்தில், அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பிறகே முடிவெடுக்கவேண்டும், அதன்பிறகே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணாமலை மதனுக்கு உறுதி அளித்துள்ளார். மேலும், உண்மைத்தன்மையை ஆராய அவரிடம் இருக்கும் ஆதாரங்களை தங்களிடம் காட்சிப்படுத்தவும் கோரியிருக்கிறார் அண்ணாமலை. ஆனால், அதனைக் கொடுக்க மதன் மறுத்துவிட்டதாகவும் மேலும், அடுத்தநாள் மீண்டும் தன்னை சந்தித்து அதே கோரிக்கையை முன் வைத்ததாகவும் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மூன்றாவது முறையாக அண்ணாமலைக்கு குறுஞ்செய்தி அனுப்பி, உடனடியாக தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தனக்கு நியாயம் கிடைக்குமா என்றும் கேட்டிருக்கிறார் மதன். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், தன்னிடம் இருக்கும் வீடியோ ஆதாரங்களை வெளியிடப்போவதாகவும் குறுஞ்செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

ஆதாரங்களைப் பார்க்காமல் எந்தவித முடிவும் எடுக்கமுடியாது என்பதால், அவருடைய அந்த குறுஞ்செய்திக்குச் சுருக்கமாக, 'செய்து கொள்ளுங்கள்' என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று காலை அண்ணாமலையிடம் பேசிய ராகவன், 30 ஆண்டுக்கு மேலாகக் கட்சிக்காக உண்மையாக பணியாற்றிய தன் மீது உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தி தனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு இது என்றும் இவற்றை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் மாண்பைக் கருதி, ராகவன் கட்சி பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

ராகவன் இந்தப் பிரச்சினையை சட்டரீதியாக முறைப்படி எதிர்கொள்வார் என்ற நம்பிக்கையில் அண்ணாமலை அவருடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மதன் ரவிச்சந்திரன், வேறு சிலரின் பதிவுகளும் வெளிவரும் என்று குறிப்பிட்டிருந்தது ஏதேனும் உள்நோக்கத்துடன் இருக்குமோ என்கிற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார் அண்ணாமலை. மேலும், தான் மூன்று முறை வலியுறுத்தியும் அவரிடம் இருக்கும் ஆதாரங்களைக் காண்பிக்காமல், தன்னுடைய சொல்லை மட்டும் வைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியதை எப்படி தன்னால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு இங்கு இருக்கும் ஒரு சிலர்தான் காரணம் என்று மதன் கூறியதற்கு பாஜக எப்படிப் பொறுப்பேற்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

மேலும், கட்சியின் மாண்பு கருதி இதுபோல குற்றம் சுமத்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த, பாஜக செயலாளர் மலர்க்கொடி தலைமையில் விசாரணைக்குக் குழு அமைத்து, இதுபோல சாட்டப்படும் குற்றங்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment