முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை கூடவிருக்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது.

சட்டமன்ற கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். இதையடுத்து சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூன் 14-ந் தேதி தொடங்கி ஜூலை 19-ந் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 24 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறுகின்றன.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக நேற்று வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக, மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் தனியார் தொலைக்காட்சியில் தெரிவித்த கருத்து தமிழக அரசியலில் பெரும் பரப்பப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே டிடிவி தினகரன் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் அவரை ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கள் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. டிடிவி தினகரனுக்கு எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்ததால், அதிமுக மூன்றாக பிளவு பட்டது என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூடுகிறது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை நடைபெற இருக்கும் நிலையில், எதிர்கட்சிகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 8-ந் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது நில வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆனால், பத்திரப்பதிவு கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close