Advertisment

செப்டம்பர் 11 ’மகாகவி நாளாக’ அரசு சார்பில் கடைப்பிடிக்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Tamilnadu CM Stalin announce September 11 on Mahakavi Day: பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 மகாகவி நாளாக அரசு சார்பில் கடைப்பிடிக்கப்படும்; தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
செப்டம்பர் 11 ’மகாகவி நாளாக’ அரசு சார்பில் கடைப்பிடிக்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசின் சார்பில், ஆண்டுதோறும் செப்டம்பர் 11 அன்று ‘மகாகவி நாள்’ கடைப்பிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’பாட்டுக்கொரு புலவன் பாரதி’ என கவிமணியை பாடவைத்த பெரும்புலவன் பாரதியின் பெருமைகளைப் போற்றும் அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

கடந்த ஆகஸ்ட் 15 அன்று தேசிய கொடியை ஏற்றி விட்டு உரையாற்றும்போது, மகாகவி மறைந்து 100 ஆண்டுகள் ஆனதை குறிப்பிட்டேன். நூற்றாண்டுகள் கழித்து மட்டுமன்று ஆயிரமாண்டுகள் கழித்தும் உயிரோட்டமுள்ள கவிதைகளை, பாடல்களை தமிழ் சமுதாயத்திற்கு விட்டுச் சென்றவர்தான் மகாகவி என போற்றப்படும் பாரதி.

தேசப்பற்று, தமிழ்ப்பற்று, தெய்வப்பற்று, மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதி. நாட்டு விடுதலைக்காக மட்டுமல்லாமல், சமூக பொருளாதார உரிமைகளுக்காக எழுதியதால்தான் பாரதியார் கவிதைகளாக உலாவி வருகிறார்.

மகாகவி பாரதியாரின் நினைவுநாளான செப்டம்பர் 11 அன்று அரசின் சார்பில் ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைபிடிக்கப்படும். 

இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தி,'பாரதி இளங்கவிஞர் விருது' ஒரு மாணவர் மற்றும் மாணவிக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியாரின் பாடல்கள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து 'மனதில் உறுதி வேண்டும்' என்று புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும்.

பாரதியாரின் வாழ்க்கை மற்றும் அவரின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்த அறிஞர்களான மறைந்த பெ.தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்திற்கும் மற்றும் மூத்த அறிஞர் சீனி. விசுவநாதன், பேராசிரியர் மணிகண்டன் ஆகியோருக்கும் தலா ரூ.3 லட்சம் ரூபாய், விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும்.

பாரதியின் உருவ சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்களை பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொது மக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

பாரதியின் கையெழுத்து பிரதிகள் தேடி தொகுக்கப்பட்டு, அவை வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும்.

பாரதியாரின் நினைவு இல்லங்கள் மற்றும் நூலகங்களில் பாரதியின் படைப்புகள் ’பாரதியியல்’ என்ற தனிப்பிரிவில் வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

உலக தமிழ்ச் சங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள், ’பார் எங்கும் பாரதி’ என்ற தலைப்பில் நடத்தப்படும்.

பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித்துறை சார்பில் நடத்தப்படும்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.

உத்தரபிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும். 

பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும் வலியுறுத்திய பாரதியின் பெயர், ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவிற்கு ‘மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா’ எனப் பெயர் சூட்டப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment