மாநில அதிகாரத்திற்கு எதிராக பா.ஜ.க செயல்படுகிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடனான சந்திப்புக்குப் பின் தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டெல்லி அரசில் நிர்வாக அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த மசோதாவை மாநிலங்களவையில் தோற்கடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். அந்தவகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து ஆதரவு கோரினார்.
இதையும் படியுங்கள்: மத்திய அரசு, நிதி அமைச்சகம் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில்லை: நீதிபதிகள் காட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சந்தித்து பேசினர். அப்போது, முதல்வர் ஸ்டாலின் உடன் தி.மு.க எம்.பி.-க்கள் கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோரும் இருந்தனர்.
இந்த நிலையில் சந்திப்புக்கு பின் 3 முதலமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, டெல்லி துணை நிலை ஆளுநரால் ஆளும் அரசுக்கு தொடர்ந்து தொல்லைகள் தரப்பட்டு வருகின்றன. மாநில அதிகாரத்திற்கு எதிராக பா.ஜ.க செயல் படுகிறது. மத்திய அரசு டெல்லி அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது, என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil