Advertisment

நானும் டெல்டாகாரன் தான்… நிலக்கரி சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம்; ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டின் முதலமைச்சர் அனுப்பிய கடிதத்திற்கு நாங்கள் மதிப்பளிப்போம். கவலைப்பட வேண்டாம் என்ற ஒரு உத்தரவாதத்தை மத்திய அமைச்சர் அளித்துள்ளார்; டெல்டாவில் நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

author-image
WebDesk
New Update
stalin

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

நானும் டெல்டாகாரன் தான். டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு நிச்சயமாக அனுமதி அளிக்காது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

Advertisment

நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதையும் படியுங்கள்: இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு; தமிழிசை சௌந்தரராஜன் நெகிழ்ச்சி

அப்போது பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.காமராஜ், ”நிலக்கரி எடுப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.

பின்னர் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, ”நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. நிலக்கரி சுரங்கம் டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை ஏலம் விடும் செயல். டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது” என்று கூறினார்.

காங்கிரஸ் சார்பில் பேசிய காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, ”நிலக்கரி சுரங்கம் அமைக்கும் டெண்டரை உடனடியாக நிறுத்த தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது. மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் செய்வது கண்டனத்துக்குரியது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் புதிய திட்டம் செயல்படுத்தக்கூடாது” என்று கூறினார்.

பின்னர் நிலக்கரி சுரங்கம் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், “இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். எனவே நான் நீண்ட நேரம் விளக்கமளிக்க அவசியமில்லை. இந்த செய்தி வந்தபோது நீங்கள் எல்லாம் எப்படி அதிர்ச்சிக்கு ஆளானீர்களோ, அப்படியே நானும் அதிர்ச்சிக்கு ஆளானேன். செய்தியை பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, அதற்கு பிறகு உடனே பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.

அந்த கடிதத்தின் நகலை, டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் நடந்துகொண்டிருப்பதால், தி.மு.க.,வின் நாடாளுமன்ற தலைவர் டி.ஆர் பாலு அவர்களுக்கு அனுப்பி, உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து நமது எதிர்ப்பையும், பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் வழங்க வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன். அவரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

தமிழக தொழிற்துறை அமைச்சர் சொல்வதைபோல் சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சர், வெளியூரில் இருக்கும் காரணத்தால் அவரை நேரடியாக சந்திக்க முடியவில்லை. எனவே டி.ஆர் பாலு அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி இருக்கிறார். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் அனுப்பிய கடிதத்திற்கு நாங்கள் மதிப்பளிப்போம். கவலைப்பட வேண்டாம் என்ற ஒரு உத்தரவாதத்தை மத்திய அமைச்சர் அளித்ததாக டி.ஆர் பாலு அவர்களிடம் செய்தியை சொல்லி இருக்கிறார்கள்.

ஆகவே, நிச்சயமாக சொல்கிறேன் முதலமைச்சராக மட்டுமல்ல.. நானும் டெல்டாகாரன். எனவே இதில் உறுதியாக நான் இருப்பேன். நீங்கள் எல்லாம் எப்படி இதில் உறுதியாக இருக்கிறீர்களோ அதைவிட அதிகமாக நான் உறுதியாக இருப்பேன். எந்த காரணத்தை கொண்டும் நிச்சயமாக நமது தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி அளிக்காது," என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment