திமுக வேட்பாளரை வெற்றி பெற்றதாக மாற்றி அறிவித்ததை அதிகாரி ஒப்புக் கொண்ட அதிகாரியை மாநிலத் தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்ததது.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மாதம் 22ஆம் தேதி எண்ணப்பட்டன. பேரூராட்சியின் 10-ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேச்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகள் பெற்றனர். இதனால் குலுக்கல் முறையில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரி பழனிச்செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வு, குலுக்கல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை பார்வையிட்டு, தேர்தல் முடிவை சம்பந்தப்பட்ட அதிகாரி மாற்றி அறிவித்திருப்பது நிரூபணமாகியுள்ளது. எனவே அந்த அதிகாரி மீது மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையும் படியுங்கள்: இந்திய ராணுவத்தில் சேர முடியாத ஏக்கம்; உக்ரைனுக்காக ஆயுதம் ஏந்திய தமிழக இளைஞர்
தேர்தல் அதிகாரியை நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. இந்த சூழலில் இந்த வழக்கு நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி முன்னிலையில் திங்கள்கிழமை (பிப்.7) விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரியை இடைநீக்கம் செய்ததாகவும் சுயேச்சை வேட்பாளர் பழனிச்செல்வி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஆஜரான தேர்தல் அதிகாரி திமுக வேட்பாளர் தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே முடிவை மாற்றி அறிவித்ததாக தெரிவித்தார். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் தேர்தல் அதிகாரியின் பதிலை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளி வைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil