இந்த மாத மின் கட்டண கணக்கீடு எப்படி? ‘3 சான்ஸ் தருவதாக’ செந்தில் பாலாஜி பேட்டி

Tamilnadu Electric Board : தமிழகத்தில் மின்சார கட்டணம் செலுத்த 3 வாய்ப்புகள் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், வரும் ஜூன் 14-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலையில், வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மக்களுக்கு கொரோனா நிதி தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் புதிய சலுகைககள் அறிமுகம் செய்துள்ளது.

அந்த வகையில் மின்கட்டணம் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள மீட்டரில் உள்ள அளவை செல்போனில் படம் பிடித்து மின்கட்டண மையத்தில் காண்பித்து தங்களது மின்கட்டண தொகையை செலுத்தலாம் என்ற புதிய சலுகையை மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மேலும் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளார். சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைந்துள்ள 2-வது கொரோனா சிறப்பு மையத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை திறந்து வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வீடுகளில் மின் கணக்கிடும் முறையை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மின் கட்டணம் செலுத்த முதல் முறையாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மே மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணத்திற்கு 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சலுகையை 85 சதவீதம் பேர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கு தீர்வு காணும் வகையில்,

மே மாதத்திற்கு முந்தைய ஏப்ரல் மாத மின் கட்டணத்தை மே மாதத்திற்கான கட்டணமாக செலுத்தலாம். அல்லது வீடுகளில் உள்ள மின் மீட்டரில் பதிவாகி இருக்கும் மின்பதிவு அளவீட்டை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து அதை மின் அலுவலகத்திற்கு சென்று காண்பித்தால் அதை கணக்கீடு செய்து தொகையை செலுத்தி கொள்ளலாம்.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் பொதுமக்கள் எதை விரும்புகிறார்களோ? அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் டெபாசிட் எனப்படும் கூடுதல் வைப்பு தொகையும் பொதுமக்களிடம் வாங்கக்கூடாது என்று கூறியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu electric board minister senthil balaji give three chances to pay eb bill

Next Story
டிவி விவாதங்களை புறக்கணிக்க தமிழக பாஜக முடிவு… காரணம் இதுதான்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com