அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதால், சர்ச்சை வெடித்த நிலையில், அவரது வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கோவை அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவில் விவசாய சங்கங்கள் சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் அதிமுகவின் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்ற நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மட்டும் விழாவில் பங்கேற்கவில்லை.
3 நாட்களுக்கு முன்பாக செங்கோட்டையனுக்கு, அழைப்பிதழ் வழக்கப்பட்ட நிலையில், விழா மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் படங்கள் இல்லை என்பதால், இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. மேலும், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்காக நிதி உதவி வழங்கியதோடு, அதற்கு அடித்தளமாக இருந்த ஜெயலலிதாவின் படம் வைக்கப்படவில்லை என்று செங்கோட்டையன் கூறியிருந்தார்.
மேற்கு மாவட்ட அதிமுக முக்கிய தலைவராக இருக்கு செங்கோட்டையன் விழாவை புறக்கணித்தது தற்போது அதிமுக வட்டாரத்தில் பெரும் சர்ச்சயைாக வெடித்தள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக 2 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது 4 காவலர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின், அதிமுகவில் இருந்து ஒ.பன்னீர்செல்வம் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் நீக்கப்பட்ட நிலையில், இவர்கள் அனைவரையும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று அவ்வப்போது ஒற்றுமை குரல்கள் எழுப்பப்ட்டு வருகிறது. அதில் முக்கியமானவராக இருக்கும் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்திலேயே மாவட்ட தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். அதேபோல் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்துள்ளார்.
தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது ஒரு பக்கம் பெரிய சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், கட்சியில் எந்த மோதலும் இல்லை என்று சொல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து மோதல் ஏற்பட்டு இருப்பதால், செங்கோட்டையனை சமரசம் செய்ய கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.