படிக்கும் போதே தொழில் முனைவராக பயிற்சி! இறையன்பு ஐ.ஏ.எஸ் தகவல்

தமிழ்நாடு அரசு சார்பில் தன்னார்வ நிறுவனமாக சென்னையில் இயங்கி வருகிறது ‘தமிழ்நாடு தொழில்முனைவோர் மற்றும் மேம்பாடு நிறுவனம்’. வங்கி கடனில் மானிய உதவியுடன் தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகளை இந்நிறுவனம் மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழக அரசு.

தொழில் தொடங்க நினைக்கும் பலருக்கு பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய சேவையை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்நிறுவன இயக்குநர் இறையன்பு ஐஏஎஸ் தெரிவிக்கிறார். தொழில் தொடங்கும் முக்கியத்துவம் மற்றும் சுய தொழில் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்த ஒரு சிறப்பு வகுப்பு கல்லூரி மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுய தொழில் பற்றி கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு பயிற்சி:

தொழில் தொடங்கும் அம்சங்களை உணர்த்தும் வண்ணம் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க AIEDP என்ற பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள், சுமார் 44 லட்சம் 90 ஆயிரம் செலவில், 88 அரசு கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. மாண்வர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தொழில்முனைவு பற்றிய முக்கியத்துவத்தை கொண்டு சேர்க்கும் நோக்கில் இது தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில்முனைவோர் மற்றும் மேம்பாடு நிறுவனம் இந்த பயிற்சிகளை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

88 அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இந்த பயிற்சிகள் நடைபெறும். சென்னையில் மட்டுமே 9 கல்லூரிகளில் மாணவர்களுக்கு இந்த பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் தொழில் தொடங்குவது குறித்த இந்த பயிற்சியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எளிமையான வழியாக அந்தந்த கல்லூரியிலேயே நடத்த உள்ளனர்.

ஒரு நாள் வகுப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியில், சுய தொழில் முக்கியதுவம், எப்படி தொடங்குவது, சுய தொழில் தொடங்க ஆகச் சிறந்த வழிகள், எந்த தொழிலை தேர்வு செய்யலாம்? எப்போது தொடங்கலாம்? எவ்வாறு வங்கிக் கடன் பெறலாம்? உட்பட பல்வேறு பிரிவுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தொழில்முனைவோர் மற்றும் மேம்பாடு நிறுவனம் இயக்குநர் இறையன்பு அவர்கள் கூறுகையில், “கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் மற்ற துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து அறிந்துக்கொள்வது அவசியம். அதிலும் சுய தொழில் தொடங்குவது பற்றிய முக்கியத்துவத்தை மாணவர்கள் நிச்சயம் அறிந்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த சுய தொழில்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த விழிப்புணர்வு மற்றும் தொழில் முனைவு பற்றி அறிந்துக்கொள்ள, அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிற்சி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இதன் முன்னோட்டமாக, தமிழகம் முழுவதும் 88 அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மாணவர்களுக்கு அவர்களின் தொழில் வளம் மற்றும் தொழில் சார்ந்த மேம்பாடுகளை அதிகரிக்க உதவியாக இருக்கும்” என்றார்.

×Close
×Close