பஸ் ஊழியர்கள் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் : 22 முறை பேச்சு நடத்தியும் தோல்வி

தமிழ்நாடு முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். அரசுடன் 22 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். அரசுடன் 22 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் ஒன்றேகால் லட்சம் போக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை ஏற்கனவே 21 முறை நடந்தது. 22-வது முறையாக நேற்று தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது.

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான 2.57 மடங்கு காரணை அடிப்படையிலான ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. எனவே திமுக, இடதுசாரி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையை புறக்கணித்து வெளியேறின. இதைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு மேல் தமிழகம் முழுவதும் பல இடங்களில் அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கையை ஏற்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என்றும் மேற்படி தொழிற்சங்கள் அறிவித்தன. இதனால் இன்றும் (ஜனவரி 5) தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து 30 சதவிகித பேருந்துகளே கிளம்பிச் சென்றன. ஆளும்கட்சி தொழிற்சங்கத்தினர் மட்டுமே பஸ்களை இயக்குவதாக தெரிகிறது.

கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாநிலத்தின் இதர பகுதிகளிலும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக இந்த வேலை நிறுத்தம் குறித்து தி.மு.க.வின் தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யு. தலைவர் சவுந்தரராஜன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு 2.57 காரணி கொண்டு அடிப்படை ஊதியத்தில் பெருக்கி, ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் 19 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும். 1.4.2003-ல் இருந்து பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் இணைக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.7 ஆயிரம் கோடியை எப்போது அரசு வழங்கும் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பிடித்தம் செய்யும் தொகையை தொழிலாளர் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையின் போது கோரிக்கை வைத்தோம். அவர்கள் 2.57 காரணியை ஏற்றுக்கொள்ளவில்லை.

குறைந்தபட்ச ஊதியம் 17 ஆயிரத்து 700 ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்கள். ஊதிய விகிதம் 2.57 காரணி மற்றும் 2.44 காரணி என இரு தரப்பாக கணக்கிட்டு, குழப்பமான கணக்கீடுகளை தெரிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது 1 லட்சத்து 40 ஆயிரம் ஊழியர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வரும். ஆகவே எங்களின் கோரிக்கையை ஏற்கும் வரையில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்தோம். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை திட்டமிட்டபடி போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

நாங்கள் மகிழ்ச்சியாக இந்த போராட்டத்தை அறிவிக்கவில்லை. அரசு எங்களை முறையாக எதிர்கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். அரசு எப்போது அழைத்தாலும், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும். மேலும் பல சங்கங்களும், எங்களுக்கு ஆதரவாக வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக இன்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றம் தலையிட்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.

 

×Close
×Close