"நான் ஆய்வு செய்தால் தானே அரசை பாராட்ட முடியும்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் கலகல!

கோவையில் நடந்த தூய்மை இந்தியா திட்டம் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்....

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவையில் 2-வது நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்டார். கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பயோ-டாய்லெட், தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து 20 நிமிடங்கள் ஆய்வு செய்தார். மேலும், துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மைப் பணியிலும் ஆளுநர் ஈடுபட்டார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அப்போது உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, கோவை சவுரிப்பாளையத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தன்னார்வலர்களுடன் ஆளுநர் மற்றும் அமைச்சர் வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த ஆய்வுகளுக்கு பிறகு, கோவையில் நடந்த தூய்மை இந்தியா திட்டம் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்மார்ட் நகர திட்டத்தில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த நகரம் மேலும் வளர்ச்சியடையும். கோவை மாவட்டம் 89.23% கல்வியறிவு பெற்றுள்ளது, இது தேசிய சராசரியை விட அதிகமாகும். வளர்ச்சியில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலையில் இருப்பதாக முன்பு தெரிவித்தேன். ஆனால், தமிழகத்தை பார்த்த பிறகு, எனது முடிவை மாற்றிக் கொண்டேன். இப்போது மகாராஷ்டிராவை பார்த்து சொல்கிறேன், தமிழகம் தான் வளர்ச்சிப் பாதையில் மிக வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு பாராட்டு. கோவை நகர பேருந்து நிலையத்தில் கழிப்பறை மற்றும் சுகாதாரப் பணிகள் சிறப்பாக உள்ளன. கொங்கு தமிழுடன் கோவை நகரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். பலரும், ஆளுநர் எதற்கு ஆய்வு செய்கிறார் என கேட்கிறார்கள்? நான் நேரில் சென்று பார்த்தால் தானே, அரசின் செயல்பாடுகள் குறித்து கண்டறிந்து பாராட்ட முடியும்” என்று தெரிவித்தார். தனது உரையை தமிழில் ‘வணக்கம்’ என்று கூறி ஆளுநர் பேசத் தொடங்கினார்.

ஆளுநருக்கு பிறகு பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அனைத்து வீடுகளிலும் நிச்சயம் கழிப்பறை வசதி இருக்க வேண்டும் என்றார்.

அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை, ஆய்வு என சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஆய்வு செய்தால் தான் அரசின் செயல்பாடுகள் குறித்து பாராட்ட முடியும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close