கோவையில் இரண்டாவது நாளாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு!

கோவையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால், அங்கு பின்பற்றப்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்தார்

கோவையில் 2-வது நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டார். தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றையும் ஆய்வு செய்தார்.

நேற்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இதன் பின்னர், கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் கோவை இடம்பெற்றுள்ள நிலையில், கோவையின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அமைச்சர்கள் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.

பாஜக.வின் எஸ்.ஆர்.சேகர் ட்வீட்..

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் உள்ள பயோ-டாய்லெட், தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து 20 நிமிடங்கள் ஆய்வு செய்தார். மேலும், துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மைப் பணியிலும் ஆளுநர் ஈடுபட்டார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, கோவை சவுரிபாளையத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால், அங்கு பின்பற்றப்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்தார். அதன்பின்னர், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தன்னார்வலர்களுடன் ஆளுநர் மற்றும் அமைச்சர் வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காலை வேளையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த குடும்பங்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்யத் தொடங்கியிருந்தனர். பலர் தூக்கக் கலக்கத்திலேயே இருந்தனர். அந்த காலை நேரத்தில் தமிழக ஆளுநர் தங்கள் குடியிருப்புக்கு வருவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.  திடீரென, ஆளுநர் வந்திருக்கும் செய்தியறிந்த குடியிருப்பு வாசிகள் அனைவரும் அதிர்ச்சியுடன் வெளியே வந்து அவரை பார்த்தனர். அந்த குடியிருப்பில் இருந்த சிலருக்கு இதுகுறித்த தகவல் முன்பே தெரிந்திருந்தாலும், பலருக்கும் ஆளுநரின் வருகை குறித்து எதுவும் சொல்லப்படாமல் இருந்தது.

ஆளுநரின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மக்கள் மத்தியில் இதற்கு ஆதரவு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழகத்தின் கிரண்பேடி ஆகிறாரா ஆளுநர் பன்வாரிலால்? அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையால் சர்ச்சை – படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

×Close
×Close