Advertisment

அரசு கஜானாவை தூர் வாரும் இரட்டையர்கள்... ரூ.5000 கோடிக்கு பதிலளிக்கும் கட்டாயம் வந்தே தீரும்: துரைமுருகன்

ஈபிஎஸ், ஓபிஎஸ் 5000 கோடி ரூபாய் வரிப்பணத்திற்கு விரைவில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தே தீரும்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today

Tamil Nadu news today :துரைமுருகன் பேட்டி.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், 5000 கோடி ரூபாய் வரிப்பணத்திற்கு விரைவில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தே தீரும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு மாவட்டமாக அரசு பணத்தை செலவு செய்து, 'ஏதோ கனவு பலிக்காது. கானல் நீர் ஆகும்' என்றெல்லாம் எங்களுடைய செயல் தலைவர் ஸ்டாலினைப் பார்த்து விமர்சித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

ஸ்டாலின் குறிப்பிட்டது போல், 'ஊழலிலும் கமிஷனிலும் இரட்டைக்குழல் துப்பாக்கி'யாக செயல்பட்டு, அரசு கஜானாவை தூர் வாரிக் கொண்டிருக்கும் இந்த இரட்டையர்கள் அரசு விழாக்களின் மேடை நாகரீகம் கூட தெரியாமல் பேசியிருப்பது அரசியல் தரம் தாழ்ந்த செயல்.

அதிமுக என்ற சொந்தக் கட்சிக்குள் நடத்திக் கொண்டிருக்கும் மோசடிகளை பொதுமேடையில் பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், சந்தனத்துடன் தங்களை உரசிக் கொண்டால் அந்த வாசனை தங்களுக்கும் வரும் என்று கருதி ஸ்டாலினுடன் உரசிப் பார்க்க இரட்டையர்கள் கனவு காணுவது கதைக்கு உதவாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு குடும்பத்திடம் சரணாகதி அடைந்து, இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவை கைகூப்பி வணங்கி, காலில் விழுந்ததோடு மட்டுமின்றி, அந்தக் குடும்பத்தில் உள்ள கடைக்கோடி வாரிசுகளிடம் கூட கைகட்டி நின்று சேவகம் பார்த்து தங்களுடைய பதவிகளை தக்க வைத்துக் கொண்ட இந்த இரட்டையர்கள், திடீரென்று 'ஒரு குடும்பத்திற்காக செய்கின்ற ஆட்சி இந்த ஆட்சியல்ல' என்றும், 'நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு' என்றும் நாகூசாமல் திருநெல்வேலியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசியிருப்பது கேலிக்குரியது மட்டுமல்ல, நான்கு சுவர்களும் வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய அளவுக்கு மிகப்பெரிய நகைச்சுவை பேச்சாக இருக்கிறது.

ஓரிரு நாள் மழையைத் தாங்க முடியாமல் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வாழும் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பட்ட இன்னல்களில் இருந்து இன்னும் மக்கள் மீள முடியவில்லை. எந்தவொரு ஆக்கபூர்வமான திட்டங்களை நிறைவேற்றவும் நிர்வாகத் திறமையில்லாத இந்த 'இரட்டையர்கள்' பொதுப்பணித்துறைக்கு பொறுப்பேற்று இருந்த காலம் தான் அந்தத் துறையின் இருண்ட காலம் என்று இன்றைக்கு பொறியாளர்கள் எல்லாம் வேதனைப் படுகிறார்கள். பல பொறியாளர்கள் என்னிடமே நேரில் வந்து புகார் கூறுகிறார்கள்.

பொதுப்பணித்துறை அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த காலத்தில் கால்வாய்கள் அமைப்பது, தூர்வாருவது, தடுப்பணைகள் கட்டுவது, குளங்கள், ஏரிகள், வெள்ளத் தடுப்பு பணிகள், வெள்ள மேலாண்மைப் பணிகள், கடலோர மாவட்ட பாதிப்புகளை தடுக்கும் பணிகள் என்று ஏறக்குறைய 3500 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக கணக்கு காட்டியிருக்கிறார்.

இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக கணக்குக் காட்டியும், வடகிழக்குப் பருவமழையால் கிடைத்த நீரை சேமித்து வைக்கவும் முடியாமல், மக்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்பை தடுக்கவும் இயலாத மோசமான நிர்வாகத்தை அளித்திருக்கிறார் இந்த ஓ.பி.எஸ். சேகர் ரெட்டியின் 'மணல் சாம்ராஜ்யம்' ஒன்றை உருவாக்கியது மட்டுமே ஓ.பி.எஸ் காலத்தின் ஒரே சாதனை.

முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, முதலில் 100 கோடி ரூபாயும், அடுத்து 300 கோடி ரூபாயும் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து ஏரிகளை தூர் வாருவதாக அறிவித்தார். அந்த 400 கோடிக்கான பணிகளை இதுவரை கண்ணால் பாக்க முடியவில்லை. '400 கோடி என்ன ஆச்சு என்று ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்' என்று ஸ்டாலின் பலமுறை கேட்டு விட்டார்.

ஆனால் இதுவரை அது பற்றி வாய் திறக்க இயலாத எடப்பாடி பழனிசாமி, இப்போது புதிதாக ஏரிகளை தூர் வார 300 கோடியும், தடுப்பணைகள் கட்ட 1000 கோடியும் நிதி ஒதுக்கப்போவதாகவும் நெல்லை பொதுக்கூட்டத்தில் வீர வசனம் பேசியிருக்கிறார். ஆக 1300 கோடி ரூபாயில் அடுத்த 'திட்டம்' ரெடி என்பதுதான் முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பிலிருந்து வெளிப்படுகிறது.

மழை பாதிப்பிலிருந்த மக்களைப் பாதுகாப்பதிலோ, மற்றா பணிகளை நேர்மையாக செய்து முடிப்பதில் அசாத்திய வேகம் காட்டுவதில்லை. அதனால்தான் 'பணிகள் எங்கே?' என்று ஸ்டாலின் கேட்ட வெள்ளை அறிக்கை பற்றி இதுவரை பதில் சொல்ல முடியவில்லை.

பொதுப்பணித்துறையைப் பொறுத்தமட்டில் இந்த 'இரட்டைக் குழல் துப்பாக்கிகள்' நீர் நிலைகள் தொடர்பான பணிகளுக்காக இப்போது அறிவித்துள்ள 1300 கோடி ரூபாயையும் சேர்த்து, இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள நிதி 5000 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. ஆனால் இன்றைக்கு சென்னையும், சென்னை புறநகரும் ஒரு மழைக்கே தத்தளித்து நிற்கிறது. சென்னை புறநகர் குளங்கள் நிரம்பிய குடியிருப்புகளாக காட்சியளித்து, அங்கு உள்ள மக்கள் எல்லாம் சொல்லொணாத் துயரத்தில் சிக்கி துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் முன் கூட்டியே எச்சரித்தும், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எவ்வித முன்னேற்பாடுகளையும் செய்யாமல் கோட்டையில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். மழை துவங்கிய பிறகே சில பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த எடப்பாடி பழனிசாமி அரசின் நிர்வாக லட்சணத்தை பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பியபோதும், இந்த 'இரட்டைக்குழல் துப்பாக்கிகள்' எங்கே ஓடி ஒளிந்திருந்தன?

ஆகவே, வடகிழக்குப் பருவமழை மட்டுமல்ல, நீர் நிலைகளை தூர் வாரி சீரமைத்து மக்களை பாதுகாக்கும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்வதிலும் இந்த இரட்டையர்கள் பொதுப்பணித்துறை அமைச்சர்களாகவும், முதல்வராகவும் இமாலயத் தோல்வியை கண்டுள்ளார்கள். எட்டிப் பார்த்து தேடிக் கண்டுபிடிக்க பிடிக்க முடியாத தோல்விப் பள்ளத்தில் அதிமுக அரசு விழுந்து கிடக்கிறது என்பதை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் பொதுப்பணித்துறையை நிர்வகித்தவன் என்ற தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, மக்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் ஸ்டாலினையும், அற்புதமான பல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைவேற்றித் தந்த திமுகவையும் குறை சொல்வதை நிறுத்திக் கொள்வதோடு, , அரசு கஜானாவில் இருந்து பணத்தை எடுத்து செலவிடுவதை இந்த 'இரட்டையர்கள்' உடனே கைவிட வேண்டும்.

மேலும் வெள்ள அபாயம், கன மழை அபாயம் போன்ற பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க இயலாத ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், 5000 கோடி ரூபாய் வரிப்பணத்திற்கு விரைவில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தே தீரும்.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Dmk Durai Murugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment