Advertisment

தடையை மீறி சேவல் சண்டை... அதிரடியாக நுழைந்த போலீஸ்... கரூரில் பதற்றம்

ஒரே கூண்டில் அடைக்கபபட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி குணம் இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தடையை மீறி சேவல் சண்டை... அதிரடியாக நுழைந்த போலீஸ்... கரூரில் பதற்றம்

தமிழக கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது.  ஜல்லிக்கட்டு காளைகளை எப்படி பொங்கல் பண்டிகைக்கு முன்பு இருந்து தயார்படுத்துகிறார்களோ அதேபோல சண்டை சேவல்களையும் தயார்படுத்துகின்றனர். பொதுவாகவே சேவல்களுக்குள் சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடைக்கபபட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி குணம் இருக்கும்.

Advertisment

அதனால் அவற்றை சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சேவல் சண்டையானது சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ப வெவ்வேறு விதிகளோடு பல்வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது. சேவல் கட்டுக்கு சேவல்களை கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, உள்ளிட்ட ஊட்டச்சத்து தானியங்களை உணவாக கொடுத்து வளர்ப்பார்கள். அப்படி வளர்க்கப்படும் சேவல்கள் பொங்கல் பண்டிகை நேரத்தில் சண்டைக்கு விடப்படுவது வழக்கம்.

publive-image

அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் நடைபெறும் இச்சேவல் சண்டையில் அண்டை மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சேவல்களை கொண்டு வந்து இந்த கிராமத்தில் சேவல் சண்டையில் பங்கேற்பார்கள். இவற்றை வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர்.

போட்டியில் தோற்றுப் போகும் சேவலை வெற்றி பெற்ற சேவல் உரிமையாளருக்கு கொடுத்து விடுவர். இந்த சேவல் கோச்சை என்று அழைக்கப்படுவதுடன் கறி விருந்திற்கு பயன்படுத்தப்படும். இந்த சேவல்கள் விற்பனைக்கும் வரும். அதனை ஆயிரக்கணக்கில் விலை கொடுத்தும் வாங்குவார்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான, சேவல் சண்டை போட்டிகளை நடத்த கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசு கிராமத்தில் தீவிரம் காட்டி வந்தனர். கடந்த முறை சேவல் சண்டையின்போது கரூர் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த அண்டு சேவல் சண்டைக்கு நீதிமன்றம் தடைஆணை விதித்த அனுமதி மறுக்கப்பட்டது.

publive-image

இதனை அடுத்து பூலாம்வலசு கிராமத்தில் இன்று காலை முதல் தடுப்புகள் ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திடீரென்று அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக போட்டி நடைபெறும் பகுதியில் ஏராளமான வாகனங்களில் வந்த சேவல் சண்டை ஆர்வலர்கள் மைதானத்திற்கு முன்பு குவிந்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் முறையான அனுமதி வழங்கப்படாத நிலையில், தடையை மீறி சேவல் சண்டை போட்டி நடத்தும் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனர். இதனால் விழாக் கமிட்டியினரை ஏராளமானோர் சூழ்ந்து கொண்டு ஆரவாரத்துடன் கூச்சலிடத் தொடங்கியதால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையிலான அதிவிரைவு படை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து கூட்டத்தை விரட்டி அடித்தனர். இதன் காரணமாக அங்கு கூடியிருந்த சேவல் சண்டை ஆர்வலர்கள் அப்பகுதியில் இருந்து தலை தெறிக்க ஓடினர். இதன் காரணமாக கரூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

publive-image

முன்னதாக, சேவல் சண்டை நடத்த இரு மாவட்டங்களுக்கு மட்டுமே நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது. ஈரோடு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டைக்கு அனுமதி அளித்துள்ளதுடன், கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேவல்களை துன்புறுத்தவோ, மது கொடுக்கவோ, காலில் கத்தியை கட்டவோ கூடாது என்றும், நிபந்தனைகளை மீறினால் காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது சேவல் சண்டை போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும் சேவல் சண்டை ஆர்வலர்களுக்கும் பீதியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment