அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் தந்தை வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் கடந்த சில நாள்களுக்கு முன்பு காலமானார். இவரின் திரு உருவப் படத்தை திறந்து வைக்க அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 28) தூத்துக்குடி வந்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை பாலியல் கொடுமை அன்றாட நிகழ்வாக நடந்து வருகிறது. கொலை நடக்காத நாளே கிடையாது. கடந்த ஜனவரி 1 முதல் தற்போது வரை 595 கொலைகள் நடந்துள்ளது.
இன்று கடலூரில் அதிமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் போதையால் கொலைகள் அதிகரித்து வருகின்றன. அரசியல் பிரமுகர்கள், பெண்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளே இல்லை.
இன்று தமிழகம் கொலை மாநிலம் ஆக மாறி உள்ளது. அன்றாட சம்பவமாக கொலைகள் இன்று நடந்து வருகிறது. இந்த அரசு காவல்துறையை ஏவல் துறையாக வைத்துள்ளது. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்காத அரசாக உள்ளது. இனியாவது முதலமைச்சர் காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். ஆடுகளை வெட்டுவதுபோல மனிதர்களை வெட்டுகின்ற நிலையாக மாறி உள்ளது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா. கஞ்சா போதையில் கொலை அதிகரித்து வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா தமிழகத்திற்கு வருவதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலைசெய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலைசெய்யப்பட்டுள்ளார். இதில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் கொலைசெய்யப்படுவதும் சர்வ சாதாரணமாக தமிழகத்தில் நடந்து வருகிறது, இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இன்று தமிழகத்தில் தி.மு.க மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. இதை மறைக்க தி.மு.க நேற்று போராட்டத்தை நடத்தி உள்ளது. இதுதான் உண்மை. 13 ஆண்டுக்காலம் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதும் மக்களை பற்றிச் சிந்திக்கவில்லை" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“