Tamilnadu Water Resources Minister Duraimurugan Tamil News : 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், மேகதாது அணை, காவிரி நதிநீர் பிரச்சனை, மார்கண்டேய அணை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்,
அமைச்சர் மிக அந்நியோன்யமாகப் பழகினார். அதைவிடச் சிறப்பு நாங்கள் கொண்டுபோன பிரச்சினையை மிகத் தெளிவாக ஏற்கெனவே அவர் புரிந்து வைத்துள்ளார். அதுதான் ஆச்சர்யம். நாங்கள் பல பிரச்சினைகளைக் கிளப்பினோம். இதில் முதலில் எங்களுக்கு இவ்வளவு டி.எம்.சி தண்ணீர் கொடுக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரையில் கிடைக்கவேண்டிய 40, 50 டி.எம்.சியில் 8 டிஎம்.சி கூட கிடைக்கவில்லை. அதனால் உடனடியாக கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தி தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரை விடச் சொல்லுங்கள் என்று கேட்டேன். உடனடியாகப் பேசுவதாகச் சொன்னார்.
இரண்டாவது பிரச்சினை காவிரியில் மேகதாது பிரச்சினை. எந்த ஒரு உத்தரவு என்றாலும் கர்நாடக அரசு காவிரியில் நிறைவேற்றுவதாக இருந்தாலும் அண்டை மாநிலமான தமிழகத்திடம் கேட்டுத்தான் செய்யவேண்டும் என்று உத்தரவு உள்ளது. ஆனால், எங்களிடம் எதுவும் கேட்காமல், பேசாமல் நேரடியாக மத்திய அரசிடம் விரிவான அறிக்கையைத் தயாரிக்கவும் அனுமதி பெற்றுள்ளார்கள். இது மத்திய அரசைப் பொறுத்தவரை சரியான அணுகுமுறை அல்ல என்பது எங்களது வாதம். எத்தனையோ திட்ட அறிக்கை அளிப்பதால் அணை கட்டிவிட முடியாது. மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தைக் கேட்காமல் அனுமதி அளிக்க மாட்டோம். இரு தரப்பையும் அழைத்துப் பேசித்தான் எதுவும் நடக்கும் என்று தெரிவித்தார்.
3-வது மார்கண்டேய நதியில் ஒரு அணை கட்டியுள்ளார்கள். மேகதாது அணை கட்டவாவது டிபிஆர் அனுமதிக்கு உங்களிடம் வந்தார்கள். ஆனால், மார்கண்டேய அணையைக் கட்ட எங்களிடமும் கேட்கவில்லை. உங்களிடமும் டிபிஆர் அனுமதி கேட்கவில்லை. தன்னிச்சையாக அணை கட்டுகிறார்களே. இதற்கு என்ன பொருள். நாங்கள் உச்ச நீதிமன்றம் சென்றோம். 2017ஆம் ஆண்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டது. அதை அமைக்க உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டோம். உடனடியாகத் நடுவர் மன்றம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அடுத்து காவிரி ஆணையம் நீண்டகாலம் போராடிப் பெற்ற ஒன்று. ஆணையம் இருக்கிறதே தவிர முழு நேரத் தலைவர் இல்லை. மத்திய நீர்வளத்துறை தலைவர் இதற்குத் தற்காலிகத் தலைவர். அவர் எங்களிடம் பேசுவதே இல்லை. எங்கள் குறையைத் தலைவர் என்று ஒருவர் இருந்தால்தானே கூற முடியும் என்று சொன்னோம், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்துக்குத் தலைவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அடுத்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்துப் பேசினோம். மத்திய அரசு கூறிய அனைத்தையும் செய்துவிட்டோம். ஆனால் தற்போதுவரை எங்களுக்கு 142 ன் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு கேட்டபோது அருகில் பேபி டேம் உள்ளது. அதை நீங்கள் கட்டிவிட்டால் 152 கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால் அந்த பேபி டேம் கட்ட கேரளா தடுத்து வருகிறது. இதற்கு காரணம் என்ன சொலகிறார்கள் என்றால் அந்த பேபி டேம் கட்டும் இடத்தில் 4 மரங்கள் உள்ளது. அந்த மரத்தை வெட்டக்கூடாது என்று கூறுகிறார்கள். எங்களிடம் அணை இருக்கும்போதே கேரளா பிரச்சினை செய்கிறது. கேரளாவிடம் அணை முழுதும் போனால் எங்களை விடவேமாட்டார்கள் என்று சொன்னேன்.
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், 1974-ல் டிபிஆர் தயார் செய்தார்கள், இதனால் 220 டிம்சி தண்ணீர் கிடைக்கும் என்று கூறினார்கள். அதன்பிறகு இதுவரை இருக்கிறதா? இல்லையா என்றே தெரியவில்லை. நீங்கள் இணைக்கிறீர்களோ, இல்லையோ எங்களுக்கு மாநிலத்துக்குள் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் செய்ய உள்ளோம் அதற்கு நீங்கள் நிதி உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
தாமிரபரணி ஆறு திட்டம் 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டோம். அனைத்தையும் புரிந்து வைத்துள்ளார். எங்களுக்கு ஆச்சர்யப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் அனைத்துப் பிரச்சினைகளையும் அழகாகத் தெரிந்து வைத்துள்ளார். அதுதான் எங்கள் மனத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்தது” என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil