ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அனுமதி அளிக்க கோரி ஆளுனரை சந்திப்பதற்காக தமிழக அரசு அனுமதி கோரிய நிலையில், ஆளுநர் அதற்கு நேரம் ஒதுக்கவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுக்களால் பாமர மக்கள் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். சமீப ஆண்டுகளாக இந்த ஆன்லைன் ரம்மி தொடர்பான தற்கொலை சம்பவம் அதிகாரித்து வந்த நிலையில், இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு கடந்த செப்டம்பர் 26-ந் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி அக்டோபர் 19-ந் தேதி நடைபெற்ற பேரவையில், ஆன்லைன் ரம்மி மற்றும் இணையவழி விளையாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத தொடர்ந்து பேரவையில் இயற்றப்பட்ட அவசர சட்டம் ஆளுனர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டம் குறித்து ஆளுனர் எவ்வித முடிவும் எடுக்காத நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதித்த அவசர சட்டம் தற்போது காலாவதியாகிவிட்டது. இதனால் ஆன்லைன் ரம்மி முழு அளவில் விளையாடும் சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே ஆன்லைன் ரம்மி மற்றும் சூதாட்டங்களுக்கு தடைவிதித்து இயற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு அனுமதி அளிக்க கோரி ஆளுனரை சந்திக்க தமிழக அரசு அனுமதி கோரியது. ஆனால் ஆளுனர் அதற்கு கூட நேரம் ஒதுக்கவில்லை என்று கூறியுள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுனர் விரைவில் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து திமுக எம்பி கனிமொழி கூறுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காத நிலையில் அந்த சட்டம் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளுனர் பதவியே தேவையில்லாத ஒன்றுதான். அதுவும் காலாவதியான பதவிதான். ஆன்லைன் ரம்மியை பாதுக்காக ஏன் இவ்வளவு துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil