சொந்த நாட்டிலேயே தமிழக மாணவ – மாணவிகள் அகதிகளா? அநாதைகளா? - வைகோ ஆவேசம்

சோதனை என்ற பெயரால் மேலாடைகளையும் சோதனையிடுகிறோம் என்று அலங்கோலப்படுத்திய அக்கிரமம் சகிக்க முடியாதது

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக் கல்லூரி படிப்புக்கும், பல் மருத்துவக் கல்வி படிப்புக்கும் நீட் தேர்வு எனும் சமூக நீதிக்கு குழிபறிக்கும் அநீதியான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. கிராமப்புற குடும்பத்துப் பிள்ளைகள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் தமிழக அரசு கல்வித் திட்டத்தில் பள்ளி இறுதித் தேர்வை எழுதி, மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்று உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களாக சேவை செய்து வருகிறார்கள். இந்த நிலையை நிர்மூலமாக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டமன்றம் மசோதா கொண்டு வந்தும், அந்த மசோதாவுக்கு அனுமதி கொடுக்க மத்தியில் ஆளும் மோடி அரசு ஏற்பாடு செய்யவே இல்லை.

இந்த நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில், தமிழக மாணவ – மாணவிகள் நீட் தேர்வு எழுதுவதற்கு கேரள மாநிலத்துக்கும், ராஜஸ்தான் மாநிலத்துக்கும் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தபோது, மத்திய அரசு அதனை ஏற்காமல் உச்சநீதிமன்றத்தை அணுகி தடையை நீக்கியது. இதனால் 5600 மாணவ – மாணவிகள் கேரளத்திலும், ராஜஸ்தானிலும் தேர்வு எழுதச் சென்று விவரிக்க இயலாத இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். தங்குவதற்கு இடம் கிடைக்காமல், உணவு கிடைக்காமல், அல்லல்பட்டனர்.

மேலும் அதிர்ச்சி தரத்தக்க செய்தி ஒன்று வந்துள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ராயநல்லூர் – விலக்குடியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவன் தன் தந்தை கிருஷ்ணசாமியோடு நேற்று எர்ணாகுளத்திற்குச் சென்று ஏர்லைன்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்து இன்று தேர்வு எழுதச் சென்றுள்ளார். ஏற்பட்ட மனஉளைச்சசலால் அவரது தந்தை கிருஷ்ணசாமி அவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே மாரடைப்பால் உயிர் நீத்தார்.

இந்தச் செய்தியை அறிந்தவுடன், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களோடு நான் தொடர்புகொள்ள முயன்றேன். தொடர்பு கிடைக்காததால், கேரளா ஆளுநர் மாண்புமிகு சதாசிவம் அவர்களுக்கு தகவல் தந்தேன். ஆளுநர் உடனே ஆவன செய்வதாகக் கூறினார். எர்ணாகுளம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆளுநர் தகவல் தந்து, அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

எர்ணாகுளத்தில் உள்ள என் நண்பர்களிடம் கூறி, அம்மாணவனுக்குத் தேறுதல் கூறி, அவரது தந்தையின் சடலத்தை ஊருக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டுள்ளேன்.

தமிழக மாணவ – மாணவிகள் சொந்த நாடு என்று சொல்லப்படும் இந்தியாவிலேயே அகதிகளாக, அநாதைகளாக மத்திய அரசால் ஆக்கப்படுகிறார்களா? என்ற கேள்விதான் முன் நிற்கிறது.

தமிழக மாணவிகள் நீட் தேர்வு மையங்களுக்குச் சென்றபோது, சோதனை என்ற பெயரால் அவர்களது மேலாடைகளையும் சோதனையிடுகிறோம் என்று அலங்கோலப்படுத்திய அக்கிரமம் சகிக்க முடியாதது; மன்னிக்க முடியாதது. இத்தகைய மனவேதனையுடன் மாணவர்கள் எப்படி தேர்வு எழுத முடியும்?” என்று தனது அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close