Advertisment

அதிகாலை 4 மணிக்கே டாஸ்மாக் சரக்கு விற்பனை: தமிழகத்தில் பெருகிவரும் 'சந்து கடை'களுக்கு சங்கு ஊதப்படுமா?

தமிழகத்தில் அதிகரிக்கும் விதவைப் பெண்கள், இளம்வயதிலேயே கல்வியை இழக்கும் குழந்தைகள் என டாஸ்மாக்கால், எதிர்காலமே சிதைந்துவிடுகிறது.

author-image
D. Elayaraja
New Update
Tamil news

Tamil news live

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்தது போல் உயிரை குடிக்கும் மதுக்கடைகளுக்கும் தடை விதிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 45க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கேட்டதை தொடர்ந்து அந்த சட்டம் இன்று நிறைவேறிவிட்டது. ஆன்லைன் சூதாட்டத்திலாவது பணத்தை இழந்த ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். ஆனால், தினந்தோறும் டாஸ்மாக் கடைகளில் குடித்துவிட்டு, மிகவும் தரம் குறைந்த மதுபானங்களை அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்கள் வாங்கி குடிப்பதனால் வருடத்திற்கு தோராயமாக ஆயிரக்கணக்கானோர் இறந்து விடுகின்றனர்.

இதனால் இளம்பெண்கள் விதவையாகி நடுத்தெருவிற்கு வந்துவிடுகின்றனர். எனவே, தமிழகத்தில் மதுபானத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அரசியல் கட்சியினர் மத்தியில் வலுத்து வருகிறது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒருமனதாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற, அந்த மசோதாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த தகவல் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு அனுப்பப்பட்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தால் விதிக்கப்படும் தண்டனைகள் விவரம் அறிவிக்கப்பட்டு விட்டது.

அதாவது, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

மேற்கண்டவாறு சட்டமும் உடனடியாக இயற்றப்பட்டு அதுவும் அரசிதழில் பதிவேற்றமாகி விட்டது. ஆன்லைன் விளையாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இறப்பு சதவீதம் அதிகரித்திருக்கின்றது என்பது உண்மைதான். அதேநேராம், தமிழகத்தில் அதிகரிக்கும் விதவைப் பெண்கள், இளம்வயதிலேயே கல்வியை இழக்கும் குழந்தைகள் என டாஸ்மாக்கால், எதிர்காலமே சிதைந்துவிடுகிறது. எனவே, டாஸ்மாக்கிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் வலுத்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்; ‘‘சார், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க காட்டிய வேகத்தை, டாஸ்மாக் விவகாரத்திலும் காட்டினால்தான் தமிழக அரசை மனதார பாராட்ட முடியும். இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குடியினால் கெட்டுப் போகும் குடும்பங்கள் அதிகம். சராசரியாக குடியினால் மட்டுமே உயிரிழப்பு என்பது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

காரணம், இன்றைக்கு குக்கிராமங்களில் கூட ‘டாஸ்மாக்’ கடை வந்துவிட்டது. ‘டாஸ்மாக்’ கடை இல்லாத கிராமங்களில் ‘சந்துக்கடை’ வந்து விடுகிறது. அதற்கும் டாஸ்மாக் பார் நடத்துபவர்களிடம் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் கப்பம் கட்டவேண்டும். இதெல்லாம் ஆளும் கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள், சேர்மன்களுக்கு சென்று விடுகிறது.

குறிப்பாக, சென்னை, திருச்சி, விழுப்புரம், மதுரை, கோவை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மார்க்கெட், பேருந்து நிலையங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும், ‘சந்துக்கடை’யின் வாயிலாக தினந்தோறும் 25 லட்சத்திற்கும் மேல் வசூலாகிறதாம். அதாவது, சந்துக்கடை என்றால் விடியற்காலை 4 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை சரக்கு விற்பதுகப்படும் கடைக்குப் பெயர்தான் "சந்துக்கடை".

இந்த சந்துக்கடைகள் மூலம் நாளொன்றுக்கு அரசின் வருவாயை தாண்டி பல லட்சக்கணக்கில் லாபத்தைப் பார்க்கிறார்கள் ஆளும்கட்சிப் பிரமுகர்கள். இப்படி விடியற்காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்தால், ஒருவர் ஆறு மாதத்திற்கு மேல் உயிர்வாழ முடியாது. இது தெரிந்தும் சந்துக்கடைகளை தி.மு.க.வினர் அதிகப்படுத்தியிருக்கின்றனர். (இந்த செய்திக்கெல்லாம் புலனாய்வு செய்யத் தேவையில்லை. நீங்கள் டாஸ்மாக் கடைக்கு விடியற்காலை 4 மணிக்கு சென்றாலே சைடிஷ்ஷுடன் சரக்கு கிடைக்கும்)

குறிப்பாக இந்த சந்துக்கடையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் முதற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் வரை ‘கப்பம்’ நீள்கிறது. எனவே, குஜராத், பீகார் போல் தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் விற்பனையாகும் பெரும்பாலான மதுபான ஆலைகளின் உரிமையாளர்களாக ஆளும் கட்சியை சார்ந்தவர்களே இருப்பது வேதனையாக இருக்கின்றது. மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் அமைச்சருக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து ஒரு பெட்டிக்கு இவ்வளவு எனச்சொல்லி மாதம் தோறும் கோடிகள் சென்றடைகின்றது என்றனர்.

எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தொடர்ந்து, மதுவினால் வாழ் விழந்து நடுத்தெருவில் நிற்கும் குடும்பங்களையம், மதுவால் தொடர்ந்து சீரழிந்து வரும் குடும்பங்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும் மது விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் மட்டும்தான் உயிர்போகிறதா..? ‘குடி’யினால் தினம்தோறும் உயிர் பலியாகவில்லையா? என்பதை வாய்கிழிய பேசும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் மன்றத்தில் வந்து பேசவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment