Advertisment

வியூகம் வகுத்து வெற்றிக்கு வித்திட்ட துரை வைகோவுக்கு பாராட்டு: மதிமுக மா.செ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

Tamilnadu News Update : சென்னை தலைமை தாயகத்தில் இன்று நடைபெற்ற மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வைகோ மகன் துரை வையாபுரிக்கு தலைமை கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
வியூகம் வகுத்து வெற்றிக்கு வித்திட்ட துரை வைகோவுக்கு பாராட்டு: மதிமுக மா.செ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

மதிமுகவில் பொதுக்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சி தலைமையை தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மதிமுக வேட்பாளர்களில் வெற்றிக்கு முக்கிய காரணம் துரை வையாபுரிதான் என்று தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கூறியிருந்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து மதிமுகவில் துரை வையாபுரிக்கு பொறுப்பு வழங்க வேண்டும்என்று தென்மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் தனது மகனுக்கு அரசியல் வேண்டாம் என்று கடந்த சில நாட்களாக கூறி வரும் பொதுச்செயலாளர் வைகோ துரை வையாபுரிக்கு பொறுப்பு வழங்க சம்மதிப்பாரா என்று கேள்வி எழுந்த நிலையில், கட்சி நிர்வாகிகள் அவரை வலியுறுத்த உள்ளதாகவும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் 20-ந் தேதி நடைபெறும் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்ற மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துரை வையாபுரிக்கு மதிமுகவில் தலைமை கழக செயலாளர் பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம் எண். 1



காஞ்சிபுரம், செங்கற்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில், அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டி வரலாறு படைத்து உள்ளது. மொத்தம் உள்ள 140 மாவட்டக்குழு உறுப்பினர்களில், 138-ஐ தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது; 1381 இடங்களுக்கு நடைபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில், 1027 இடங்களை வென்றுள்ளது.



கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குப் பேராதரவு வழங்கிய தமிழ்நாட்டு மக்கள், இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் மகத்தான வெற்றியை அளித்து இருக்கின்றனர். ஐந்து மாதங்களாக ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்றி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசின் செயல்பாடுகள், மக்கள் நலன் காக்கும் திட்டங்கள், தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்று இருப்பதை ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவு உறுதி செய்து இருக்கின்றது. இத்தேர்தல் முடிவுகள் மூலம் தி.மு.கழக அரசுக்கு நற்சான்று அளித்து இருக்கின்ற 9 மாவட்ட மக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.



மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் பொற்கால நல்லாட்சி தொடருவதற்கு இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.



தீர்மானம் எண்: 2



9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு மாவட்டக்குழு உறுப்பினர் இடங்களிலும், 16 ஒன்றியக்குழு உறுப்பினர் இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றது.



‘பம்பரம்’ சின்னத்தில் வெற்றி வாகை சூடிய மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கழகத்தினருக்கும், இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.



தீர்மானம் எண்: 3



ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தென்காசி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாவட்டக்குழு உறுப்பினரும், 13 ஒன்றியக்குழு உறுப்பினர்களும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ‘பம்பரம்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். குருவிகுளம் ஒன்றியத்தில் போட்டியிட்ட கழக வேட்பாளர்கள் எட்டுப் பேரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர். குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றுவதற்கு வியூகம் அமைத்து, தேர்தல் பணிகளைத் திட்டமிட்டு மேற்கொண்டு, தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டு வெற்றி வாகை சூட காரணமாக இருந்த துரை வைகோ அவர்களுக்கும், துணை நின்ற தென்காசி மாவட்டப் பொறுப்பாளர் தி.மு. இராசேந்திரன் மற்றும் பசி நோக்காமல், கண் துஞ்சாமல் கடமையாற்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துத் கொள்வதில் பெருமிதம் அடைகின்றது.



தீர்மானம் எண்: 4



ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாவட்டக்குழு உறுப்பினரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓர் ஒன்றியக்குழு உறுப்பினரும் வெற்றி பெறுவதற்குக் களப்பணி ஆற்றிய கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டப் பொறுப்பாளர்கள் மா.வை. மகேந்திரன், இ. வளையாபதி, ஊனை ஆர்.இ. பார்த்திபன் ஆகியோருக்கும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா ஓர் ஒன்றியக்குழு உறுப்பினர் வெற்றி பெற பாடுபட்ட கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே. மணி மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பாபு. கோவிந்தராஜன், க. ஜெய்சங்கர் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் இக்கூட்டம் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிக்கின்றது.



தீர்மானம் எண்: 5



ஒன்றிய பா.ஜ.க. அரசு, கடந்த ஆண்டு 2020 செப்டம்பரில் நிறைவேற்றிய மூன்று வேளாண் பகைச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி முதல் 11 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் பன்வீரபூர் பகுதியில் கடந்த அக்டோபர் 3-ஆம் நாள் விவசாயிகள் அறப்போராட்டம் நடத்தினர். அப்போது அப்பகுதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்க, உத்திரப்பிரதேச மாநிலத் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சென்றார். அவரோடு வாகன அணிவகுப்பில் சென்ற ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, அமைதியாகப் போராடிக் கொண்டு இருந்த விவசாயிகள் மீது தனது காரை ஏற்றி நான்கு விவசாயிகளைப் படுகொலை செய்து இருக்கின்றார்.



உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாசிச ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க. முதல்வர் யோகி ஆதித்யநாத், அடக்குமுறையை ஏவி வன்முறைகளைத் தூண்டி விடுவதும், சிறுபான்மையினர், தலித் மற்றும் விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடுவதும் தொடர் நிகழ்வுகள் ஆகி விட்டன. அதன் உச்சகட்டமாகவே விவசாயிகள் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்யும் கொடுமை அரங்கேறி இருக்கின்றது.



இத்தகைய கொடூரச் செயல்களைக் கண்டிக்காமல், ஒன்றிய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அமைதி காக்கின்றார். விவசாயிகள் மீது கொலை வெறி வன்முறைகளை ஏவுவதற்குக் காரணமாக இருக்கும் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்கும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் வன்முறைக் கூட்டத்திற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.கொலைக் குற்றவாளிகளைச் சட்ட நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும்; பா.ஜ.க. அரசு மூன்று வேளாண் பகைச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.



தீர்மானம் எண்: 6



ஒன்றிய பா.ஜ.க. அரசு, அக்டோபர் 2-ஆம் நாள் வனப் பாதுகாப்புச் சட்டம் (1980) திருத்த வரைவை வெளியிட்டு இருக்கின்றது.



தற்போது உள்ள சட்டப்படி, தனியார் காடுகள் மற்றும் வருவாய்க் காடுகள் உள்ளிட்ட நிலங்களை வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்த வனத் துறையின் அனுமதி தேவை. அதை முற்றிலும் நீக்கவே இச்சட்டத் திருத்தம் முனைகின்றது.



வனக்காடுகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வன உரிமைச் சட்டம் 2006-இன்படி காப்புக்காடுகள் உள்ளிட்ட எந்தக் காட்டு நிலமாக இருந்தாலும் அதைக் காடு சாராத பயன்பாட்டுக்கு அரசு வழங்கி விட முடியாது. அதற்கு, பழங்குடிகளின் கிராம சபை ஒப்புதல் தேவை. இந்த உரிமையைக் கிராம சபைக்கு வன உரிமைச் சட்டம்-2006 வழங்கி உள்ளது. ஆனால், தற்போது வெளியிட்டுள்ள புதிய வனப் பாதுகாப்பு சட்ட முன்வரைவு, கிராம சபைக்கு வழங்கப்பட்டு இருக்கும் உரிமையை நீர்த்துப் போகச் செய்கின்றது.



தமிழ்நாடு அரசின் தனியார் வனப் பாதுகாப்புச் சட்டம்-1949, காடுகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தருகின்றது. ஆனால், பொதுப் பட்டியலின் கீழ் வனத்துறை இருப்பதால் தற்போது ஒன்றிய அரசின் புதிய சட்ட முன்வரைவு, மாநில அரசின் வனப் பாதுகாப்புச் சட்டத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றது.



காடுகளில் தன் அதிகாரத்தை நிறுவ பிரிட்டீஷ் அரசு வனப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது அதை முதலில் எதிர்த்தது அப்போதைய சென்னை மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நீதிக்கட்சி அரசு. எனவே, தற்போது ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புதிய வனப் பாதுகாப்புச் சட்ட முன் வரைவை, தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும், இச்சட்டத் திருத்தத்திற்கு எதிராக வலுவான குரல் எழுப்ப வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.



தீர்மானம் எண்: 7



இந்திய இராணுவத் தளபதி முகுந்த நரவணே, நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக அக்டோபர் 13-ஆம் நாள் இலங்கைக்குச் சென்றார். இலங்கை அதிபர் கோத்தபாய இhஜபக்சே, பிரதமர் மகிந்த இராஜபக்சே, இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசி உள்ளார். இந்தியப் படைத் தளபதி கலந்து உரையாடிய அனைவருமே, 2009-ஆம் ஆண்டு தமிழ் ஈழ மக்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்திட காரணமாக இருந்தவர்கள் என்பதை மறைத்து விட முடியாது.



இலங்கை இறுதிப் போரின்போது, 58-ஆவது இலங்கை இராணுவப் படைப்பிரிவின் தளபதியாக இருந்து அப்பாவி ஈழத்தமிழ் மக்களைக் கொன்று ஒழித்த சவேந்திர சில்வா, தற்போது சிங்களக் கொலைகார அரசின் படைத் தளபதியாக இருக்கின்றார்.



இந்திய-இலங்கைப் படைத் தளபதிகள் சந்திப்பின்போது, இந்தியாவில் ஆண்டுக்கு 1000 சிங்களப் படை வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், கூடுதலாக 50 அதிகாரிகளுக்குச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சியை அளிக்கவும் தீர்மானித்து இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்து இருக்கின்றது.



ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்தது சிங்கள இனவாத அரசுதான் என்பதை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உறுதி செய்துள்ளது. இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றத்திற்காக, பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டிய இலங்கை அதிபர் கோத்தபய இராஜபக்சே, பிரதமர் மகிந்த இராஜபக்சே, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோருடன், இந்தியப் படைத் தளபதி பேசுவதும், இலங்கைப் படையினருக்கு, இந்தியாவில் பயிற்சி அளித்திட உடன்படிக்கை செய்வதும், தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் சூட்டுக்கோலைத் திணிக்கும் செயல் ஆகும்.



தமிழக மக்களுக்குப் பச்சைத் துரோகம் இழைத்து வரும் பாசிச பா.ஜ.க. அரசு, இனப் படுகொலை நடத்திய இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதையும் நிதி உதவி மற்றும் கூட்டுப் படைப் பயிற்சி நடத்துவதையும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாகக் கண்டிக்கின்றது. ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழக மக்களின் உணர்வுகளுடன் உரசிப் பார்க்க வேண்டாம்; உடனடியாக இத்தகைய முயற்சிகளைக் கைவிட வேண்டும் என இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.



தீர்மானம் எண்: 8



வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைப்பதற்கான அறிவிப்பை, அக்டோபர் 6-ஆம் நாள் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.



புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில்,  புலம் பெயர்ந்த தமிழர்களின் தரவுத்தளம் ஏற்படுத்துதல்; விபத்து, வாழ்நாள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுத் திட்டம், அடையாள அட்டை வழங்குதல், பணியின்போது உயிர் இழக்க நேரிட்டால் குடும்பத்தினருக்கு உதவுதல்; கல்வி, திருமண உதவித் தொகை அளித்தல், புலம்பெயர்வோருக்குப் பயணப் புத்தாக்கப் பயிற்சி அளித்தல், கட்டணம் இல்லாத் தொலைபேசி வசதி, வலைதளம், அலைபேசிச் செயலி அமைத்துத் தருதல்; தனிச் சட்ட உதவி மையம்; கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகப் பணி இழந்து தாயகம் திரும்பியவர்களுக்குக் குறுந்தொழில் நடத்திட நிதி உதவி; பாதுகாப்பான சேமிப்பு முதலீடுத் திட்டங்கள்; ஜனவரி 12-ஆம் நாள் ‘புலம் பெயர்ந்த உலகத் தமிழர் நாள்’ எனக் கொண்டாடுதல் போன்ற அறிவிப்புகளுடன் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்ற ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைத்திட ஆணையிட்ட, தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.



தீர்மானம் எண்: 9



தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை, டிசம்பர் மாதத்திற்குள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. எனவே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள், உடனடியாக மாநகர் பகுதிக் கழக, பேரூர்க் கழக, நகரக் கழகக் கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திடத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சியில் கழகம் போட்டியிடுவதற்கான இடங்களைத் தேர்வு செய்து,  பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.



தீர்மானம் எண்: 10



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 118 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அதில், எ°.சவுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ் மகன் ராஜ்கிரண்(30), சுதாகர் மகன் சுகந்தன்(30), அருளானந்தன் மகன் சேவியர்(32) ஆகிய 3 பேரும் கடலில் சுமார் 17 கடல் மைல் தொலைவில் நேற்று மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.



அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தங்களது ரோந்து படகு மூலம் மீனவர்களின் படகு மீது இடித்தனர்; அதில், படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, 3 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். இவர்களுள், சுகந்தன், சேவியர் ஆகிய 2 பேரை மட்டும் இலங்கை கடற்படையினர் மீட்டு, காங்கேசன்துறை கடற்படை தளத்தில் ஒப்படைத்தனர். மற்றொரு மீனவர் ராஜ்கிரணைக் காணவில்லை. அவரது நிலை என்ன என்று தெரியவில்லை.



இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை மீட்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இதுபோன்ற தொடர் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment