Advertisment

சென்னை 2-வது விமான நிலையம்; இறுதி அறிக்கை ரெடி: தமிழக அரசு!

அறிக்கையின் அடிப்படையில், பொருத்தமான இடம் இறுதி செய்யப்பட்டு, புதிய விமான நிலையத்தை நிறுவுவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

author-image
WebDesk
New Update
Tamilnadu

Tamilnadu plans new international airport near chennai

சென்னை அருகே ஒரு புதிய பன்னாட்டு விமான நிலையத்தை நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழக சட்டப்பேரவையில் நேற்று(ஏப்.19) கனிம வளங்கள் துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சித்துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது’ தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

அதிகரித்து வரும் விமானப் பயணிகள் போக்குவரத்தை கையாளுவதற்காக, புதிய விமான நிலையம் அமைக்கும் பொருட்டு, டிட்கோ நிறுவனம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையமும் இணைந்து தற்போதைய வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம், சென்னை விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் விமானப் போக்குவரத்தில் எதிர்கால தேவையென மதிப்பிட்டுள்ளதை எதிர்கொள்வதற்கும், நீண்டகால அடிப்படையில் விமானப் போக்குவரத்து சேவைகளுக்கான உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்கும், சென்னை அருகே ஒரு "புதிய பன்னாட்டு விமான நிலையத்தை" நிறுவ மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது.

இப்புதிய பன்னாட்டு விமான நிலையத்தை உருவாக்குவதற்கு சாத்தியமுள்ள இடங்களை அடையாளம் காணுவதற்கான பணியை அரசு, டிட்கோவிடம் ஒப்படைத்திருக்கிறது. இதன்படி, சாத்தியமுள்ள நான்கு இடங்களை டிட்கோ தேர்வு செய்து, இவ்விடங்களில் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்தை கேட்டுக்கொண்டது.

இந்த நான்கு இடங்களையும் இந்திய விமான நிலைய ஆணைய (AAI) அதிகாரிகளின் குழு பார்வையிட்டு, அதன் சாத்தியக்கூறு அறிக்கையை சமர்பித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பொருத்தமான இடம் இறுதி செய்யப்பட்டு, புதிய விமான நிலையத்தை நிறுவுவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் தொழில் துறையில் வளர்ச்சி, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி,சுற்றுலா, தனி மனித வருவாய் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஓசூர் பகுதியில் ஒரு புதிய விமான நிலையத்தை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூர் பகுதி தொழிற்சாலைகளுக்கான மையமாக இருப்பதால், ஒசூரில் ஒரு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு இப்பகுதியை சுற்றியுள்ள விமான போக்குவரத்து மற்றும் அதன் வளர்ச்சி விகிதம், சந்தை தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சாத்தியக்கூறு உள்ள இடங்களை ஆய்வு செய்யுமாறு ‘டிட்கோ’வை அரசு பணித்துள்ளது.

அரசின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட ஆய்வை மேற்கொள்வதற்கான ஒரு ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் ‘டிட்கோ’ ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment