கோட்டையை முற்றுகையிட்ட தமிழக காவல்துறை குடும்பங்கள்!

இவர்களோடு சேர்ந்து, ஓய்வு பெற்ற போலீசாரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மாதம் ஜூன் 14–ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 14 நாட்கள் பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், காவல் மற்றும் தீயணைப்பு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் ஒரு நாள் மட்டுமே நடைபெற்றது. ஆனால், இம்முறை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. அதாவது, இன்றும், நாளையும் காவல் மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

வரும் 8–ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் கேள்வி நேரம் கிடையாது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரை இடம்பெறுகிறது. மேலும், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை தொடர்பான புதிய அறிவிப்புகளையும் அன்று அவர் வெளியிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் அளிக்கிறார். மேலும், தனது துறை தொடர்பான புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.

இந்த நிலையில், இன்று காவல்துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கோட்டையை முற்றுகையிட வந்தனர். ஆனால், அவர்களை போலீசார் பாதியிலேயே வழிமறித்து, காவல்துறை வாகனங்களில் ஏற்றி, அருகிலுள்ள வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தினம் எட்டு மணி நேரம் வேலை, ஊதிய உயர்வு, வாரம் ஒருநாள் விடுமுறை, காவல்துறைக்கு என தனியாக சங்கம் உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றையும் அளிக்க வந்திருந்தனர். இதனால், கோட்டையைச் சுற்றி பாதுகாப்பு பணிக்கு 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் தான் காவல்துறையினருக்கு குறைவாக சம்பளம் கொடுக்கப்படுகிறது. முதல் இடத்தில் கேரளாவும், இரண்டாம் இடத்தில் ஆந்திராவும் உள்ளன. பெங்களூரு மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பதவி உயர்வு பெற்ற தலைமைக் காவலருக்கு 38,000 ரூபாய் ஊதியமும், 33 வருடங்களாக உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவருக்கு 59,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close