காவிரி வழக்கின் தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்!

தீர்ப்பு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

சுமார் 120 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்த காவிரி வழக்கு இன்று (16.2.18) முடிவுக்கு வந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் அமித்வ ராய், கான் வில்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இறுதி தீர்ப்பை வழங்கியது.

இதில், தமிழ்நாட்டுக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை ஆண்டு தோறும் காவிரியில் கர்நாடகம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,கர்நாடகாவுக்கு கூடுதலாக 14 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவிடுவதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவை விட, தமிழகத்திற்கு 14 டி.எம்.சி தண்ணீரை குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதை அரசியல் தலைவர்கள் பலர் கடுமையான விமர்சித்துள்ளனர்.

தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந் நிலையில், காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கூறியிருக்கும் கருத்துக்கள்.

பாஜக  மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்:

”காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவை விட, தமிழகத்திற்கு 14 டி.எம்.சி தண்ணீரை குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதை  பாஜக அரசு வரவேற்கவில்லை.  தீர்ப்பில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. இதில் மகிழ்ச்சி அடைய ஒன்றுமில்லை. அதே நேரத்தில் தமிழ்நாட்டுக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை ஆண்டு தோறும் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  கூறியிருப்பதை கர்நாடகா அரசு, உடனே செயல்படுத்த வேண்டும்.  இதற்கு முன்னாள்  இருந்த தீர்ப்பை அம்மாநில அரசு மதிக்காமல் நடந்தது போல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலும் செயல்பட கூடாது. இதில் தமிழக அரசு தலையிட்டு, நமது உரிமையை பாதுகாக்க வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

ஜி. ராமகிருஷ்ணன்: ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்)

“காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக விவசாயிகளின் நலுனுக்கு எதிராக உள்ளது.  காவிரி வழக்கில் மேல்முறையீடு செய்ய முடியாது என்பதை ஏற்க முடியாது. அதே நேரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக  அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது சற்று ஆறுதலாக உள்ளது” என்றார்.

அதிமுக எம்பி நவநீதிகிருஷ்ணன்:

“தமிழகத்திற்கு  தண்ணீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. 14டிஎம்சி நீர் குறைக்கப்பட்டது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகள் மரணமடைகின்றனர். இதற்கு  தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர்   திருநாவுக்கரசர்:

”காவிரி வழக்கில் தமிழகத்திற்கு தண்ணீர் குறைக்கப்பட்டது மனவருத்தம் தருகிறது. காவிரி  வாரியம் அமைத்து இருந்தால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது. காவிரி தீர்ப்பை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும்.” என்றார்.

துரைமுருகன்:(தி.மு.க முன்னாள் அமைச்சர்)

”தமிழகத்தின் உரிமை பாதிக்கப்பட்டிருக்கிறது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிமுக அரசு காவிரி நதி நீர் பங்கீடு வழக்கை முறையாக வாதாடவில்லை என்றே நினைக்க வைத்துள்ளது.” என்று தெரிவிக்த்துள்ளார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: 

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு தண்ணீரைப் பெற்றுத் தரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கண்ணீரை மட்டுமே பெற்றுத் தந்துள்ளது.

டிடிவி தினகரன்: 

தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீரின் அளவையாவது கர்நாடக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். அதனை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன்: 

”காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஏமாற்றம் அளித்துள்ளது. மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். இதற்கு கர்நாடக அரசு ஒத்துழைக்க வேண்டும்.” என்று கூறினார்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close