Advertisment

Tamilnadu News Today: தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
High Rainfall updates in Tamilnadu Rain Forecast Tamil News

High Rainfall updates in Tamilnadu Rain Forecast Tamil News

Rain Update: தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே பகுதியில் தொடர்ந்து நீடிக்கிறது. காற்று உந்துதல் குறைந்ததால், அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பில்லை இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிகக் கனமழை பெய்யும்.  மேலும் தூத்துக்குடி, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, மதுரை, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் கடலோரப் பகுதிகளுக்கு வரும் 27 ஆம்தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும் வருகிற 29ஆம் தேதி தெற்கு அந்தமான் அருகே, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

School, College Leave: தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, புதுக்கோட்டை,ராமநாதபுரம், விருதுநகர், அரியலூர், தஞ்சாவூர்,திண்டுக்கல்,திருச்சி, தேனி, பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், சிவகங்கை, மதுரை, கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவண்ணாமலை திருவள்ளூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று மற்றும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Petrol, Diesel Price: பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.



  • 21:43 (IST) 26 Nov 2021
    தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

    தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 14 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சை, அரியலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் சென்னை நாகை பெரம்பலூர், செங்கல்பட்டு ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:44 (IST) 26 Nov 2021
    நாட்டின் வளர்ச்சியை சிலர் விரும்பவில்லை - பிரதமர் மோடி

    நமது இளைஞர்கள் நாட்டை வளர்சசிப்பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். நாட்டின் வளர்ச்சியை சிலர் விரும்பவில்லை. அவர்களுக்கு சரியான பலன் நிச்சயம் கிடைக்காது நடுத்தர மக்களுக்கு அனைத்து வசதிகளும் தற்போது கிடைக்கிறது என்று அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.



  • 19:41 (IST) 26 Nov 2021
    இதுவரை 9 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு

    நாகை பெரமபலூர் அரியலூர் காஞ்சிபுரம் திருவள்ளூர், தூத்துக்குடி திருவாரூர் புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:38 (IST) 26 Nov 2021
    சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை

    சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அண்ணா சாலை, தி.நகர், நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது .



  • 19:01 (IST) 26 Nov 2021
    அரசியல் சாசன தின விழாவில், பிரதமர் மோடி உரை

    அரசியல் சாசனத்தின் படி, குடிமகனின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்றும், ஆண், பெண் இருபாலரையும் சமமாக கருத வேண்டும் - அரசு இதனை சரியாக கடைபிடிக்கிறது என்று அரசியல் சாசன தின விழாவில், பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.



  • 18:58 (IST) 26 Nov 2021
    ஜீ.வி.பிரகாஷின் 'ஜெயில்' தடை கோரி வழக்கு

    ஜீ.வி.பிரகாஷின் 'ஜெயில்' திரைப்படத்துக்கு விநியோக உரிமையை மாற்றியதாகவும் இதனால் படத்திற்கு தடை விதிக்கக்கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 18:56 (IST) 26 Nov 2021
    ராணுவ சொத்துக்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் யோசனை

    ராணுவ சொத்துக்களை குத்தகைக்கு விடுவதற்கு பதிலாக ராணுவ உள்கட்டமைப்புக்காக பயன்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. வணிக பயன்பாட்டை விட, பாதுகாப்புத்துறைக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது.



  • 18:54 (IST) 26 Nov 2021
    டிசம்பர் 15-ந் தேதி முதல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை

    டிசம்பர் 15-ந் தேதி முதல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளை 3 வகையாக பிரித்து அதற்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 18:46 (IST) 26 Nov 2021
    தொடர் மழை காரணமாக நாகை பெரம்பலூர் மாவட்டத்திற்கு விடுமுறை

    தொடர்மழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிக்கப்பட்டுள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது



  • 17:33 (IST) 26 Nov 2021
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

    தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 17:00 (IST) 26 Nov 2021
    100 அடியை எட்டியது மணிமுத்தாறு அணை!

    நெல்லையில் தொடர்மழை காரணமாக 100 அடியை எட்டியது மணிமுத்தாறு அணை. இன்று ஒரேநாளில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது.

    அணைக்கு 14 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 16:58 (IST) 26 Nov 2021
    கான்பூர் டெஸ்ட்: 2வது நாளில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் சேர்ப்பு

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 345 ரன்கள் சேர்த்த நிலையில், தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடி வரும் நியூசிலாந்து அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்களை சேர்த்துள்ளது.

    நியூசிலாந்து அணி இந்திய அணியை விட 216 ரன்கள் பின்தங்கியுள்ளது. தொடக்க வீரர்கள் வில் யங் 50 ரன்களுடனும், டாம் லாதம் 75 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • 16:34 (IST) 26 Nov 2021
    திருவாரூர், தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

    தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக திருவாரூர், தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்த மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.



  • 16:27 (IST) 26 Nov 2021
    மணிகண்டனுக்கு ஒருநாள் போலீஸ் காவல்

    திருச்சி நவல்பட்டு எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்ட நிலையில், கீழமை நீதிமன்றம் மணிகண்டனுக்கு ஒருநாள் போலீஸ் காவல் அனுமதி வழங்கியுள்ளது.



  • 16:21 (IST) 26 Nov 2021
    தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    சேலம் ஏற்காட்டில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் அமைக்க கட்டட்டுமான தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதை நிறுத்திவிட்டு கொடைக்கானலில் தற்போது கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் அமைக்கப்பட்டு வருவது தொடர்பாக தொடுக்கப்பட்டிருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனத்தை அமைப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்" என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 15:51 (IST) 26 Nov 2021
    முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு!

    முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கவும், பலப்படுத்தவும் கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வல்லக்காடு - முல்லைப் பெரியாறு சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் இந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.



  • 15:45 (IST) 26 Nov 2021
    மோதல் வழக்கில் இருந்து வானதி சீனிவாசன் விடுதலை!

    கடந்த 2016 தேர்தலின்போது நடந்த மோதல் வழக்கில் இருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உட்பட 7 பேரை விடுதலை பெய்தது கோவை குற்றவியல் நீதிமன்றம்.



  • 15:19 (IST) 26 Nov 2021
    புகழ்பெற்ற பச்சைக் கண்கள் ஆப்கான் அகதி பெண் இத்தாலியில் தஞ்சம்!

    1985 ஆம் ஆண்டு நேஷனல் ஜியோகிராபிக் இதழின் அட்டை படத்தில் இடம் பெற்று புகழ்பெற்ற பச்சைக் கண்கள் கொண்ட “ஆப்கன் பெண்” ஷர்பத் குல்லா . தற்போது இவர் இத்தாலியில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை தொடர்ந்து மேற்கு நாடுகள் அங்கு தஞ்சம் அடைந்துள்ள ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அந்த பச்சைக்கண் “ஆப்கன் பெண்” இத்தாலிக்கு வந்துள்ளார். இதனை இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.



  • 15:09 (IST) 26 Nov 2021
    தென்னாப்பிரிக்காவில் புதிய கொரோனா வைரஸ் பரவல்

    தென்னாப்பிரிக்காவில் அச்சுறுத்தும் வகையில் புதிய கொரோனா உருமாற்றம் பரவி வருகிறது. எனவே அந்நாட்டில் இருந்து பயணிகள் ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது



  • 15:07 (IST) 26 Nov 2021
    நடிகர் கமல்ஹாசனின் உடல் நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை

    அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் கமல்ஹாசனின் உடல் நிலை சீராக உள்ளது என அம்மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.



  • 15:04 (IST) 26 Nov 2021
    சென்னை கனமழை

    ஆலந்தூர், பெருங்குடி, தரமணி, மீனம்பாக்கம், பரங்கிமலை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், மணலி, கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், வானகரம், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம் பகுதிகளில் கனமழை



  • 14:19 (IST) 26 Nov 2021
    அடுத்த 2 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழை

    அடுத்த 2 மணி நேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது



  • 13:50 (IST) 26 Nov 2021
    9 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

    சென்னை, திருவள்ளூர், காஞ்சி, மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.



  • 13:50 (IST) 26 Nov 2021
    செல்லூர் ராஜூ வரவேற்பு

    மக்களுக்கு உணவு கிடைக்கும் என்பதால் கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம்... வாழ்த்துகிறோம் என்று முன்னாள் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு. ஓ. பன்னீர் செல்வம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் செல்லூரின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது



  • 13:26 (IST) 26 Nov 2021
    தூத்துக்குடியில் 31 செ.மீ மழை

    தூத்துக்குடியின் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய தூத்துக்குடி விரைந்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி



  • 13:24 (IST) 26 Nov 2021
    தூத்துக்குடியில் 31 செ.மீ மழை

    தூத்துக்குடியின் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய தூத்துக்குடி விரைந்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி



  • 13:23 (IST) 26 Nov 2021
    தமிழகத்தில் இயல்பைக் காட்டிலும் 70% அதிக மழை பெய்துள்ளது

    தமிழகத்தில் இயல்பைக் காட்டிலும் 70% அதிக மழை பெய்துள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் வழங்கப்பட்டுள்ளது.



  • 13:21 (IST) 26 Nov 2021
    500 சமுதாய உணவகங்களுக்கு கலைஞர் உணவகம் என்று பெயர் - ஓ.பி.எஸ். கண்டனம்

    500 சமுதாய உணவகங்கள் 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைக்கப்படும் என்ற அமைச்சர் சக்கரபாணியின் அறிவிப்புக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தை இந்த அறிவிப்பு கொண்டுள்ளது. எனவே அம்மா உணவகம் என்ற பெயரே நிலைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.



  • 12:57 (IST) 26 Nov 2021
    குடும்ப அரசியல் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது - பிரதமர் மோடி

    குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்றும் குடும்ப அரசியல் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேற வேண்டும், அம்பேத்கரின் பெயரை நாம் காப்பாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



  • 12:15 (IST) 26 Nov 2021
    தொடர் கனமழையால் கர்நாடக அணையிலிருந்து காவிரி நீர் திறப்பு அதிகரிப்பு

    கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கான தண்ணீர் திறப்பு 13,900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையின் உயரம் 124.80 அடியாக இருக்கையில், நீர் இருப்பும் 124.80 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 11,062 கன அடியாக உள்ளது.



  • 11:56 (IST) 26 Nov 2021
    கனமழையால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பால், தரைப்பாலம் மூடப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 10:51 (IST) 26 Nov 2021
    அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம்: ஷ்ரேயாஸ் ஐயர் அசத்தல்!

    இந்தியா, நியூசிலாந்துக்கு இடையே முதல் டெஸ்ட் தொடர் கான்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியின் மூலம் ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, நேற்றைய ஆட்ட முடிவின்போது, 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 75 ரன்களுடனும், ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், 2ம் நாளான இன்றைய ஆட்டம் தொடர்ந்தது. டிஎம் செளதியின் பந்துவீச்சில் ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமலே அவுட் ஆனார். ஆனால் ஜாமிசனின் பவுலிங்கில் பவுண்டரிகளை தெறிக்கவிட்ட ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுக டெஸ்ட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம், அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் விளாசிய 16-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஷ்ரேயஸ் அய்யர் பெற்றார்.



  • 10:35 (IST) 26 Nov 2021
    ரஷ்யா நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து: 50 பேரின் கதி என்ன?

    ரஷ்யா சைபீரியா பகுதியில் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இதில் சுமார் 300 பேர் வேலை செய்து வந்தனர். இதனிடையே திடீரென சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பணியாளர்கள் உயிரிழந்தனர். அவர்களை மீட்க சென்ற மீட்பு படையினர் மூவரும் இதில் பலியாகினர். இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. சுரங்கத்தில் 6 மணி நேரத்துக்கான ஆக்சிஜன் மட்டுமே இருந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கியிருந்த 50 பணியாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.



  • 10:25 (IST) 26 Nov 2021
    வங்க தேசத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

    வங்க தேசத்தில் இன்று அதிகாலை, 6.3- ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதேபோல மியான்மரிலும் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவானதாக நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (center for seismology) தெரிவித்துள்ளது.



  • 10:18 (IST) 26 Nov 2021
    சென்னை உள்பட 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

    தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் மழைக்கொட்டித் தீர்த்து வருகிறது. இதனிடையே இந்திய வானிலை மையம், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 10:13 (IST) 26 Nov 2021
    வெளிமாநிலங்களில் இறக்குமதி: தக்காளி விலை கிலோ ரூ.30 வரை குறைந்தது!

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிலோ ரூ. 150க்கும் மேல் விற்கப்பட்டு வந்தது. இதனால் இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் கவலையில் இருந்தனர். மழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுவதால், தக்காளி விலை குறைந்து வருகிறது. அதன்படி சென்னை சென்னை கோயேம்பேடு மார்க்கெட்டில், இன்று தக்காளி கிலோவுக்கு, ரூ.3 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.



  • 10:03 (IST) 26 Nov 2021
    தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை!

    தமிழகத்தில் கனமழை காரணமாக அடுத்த 6 மணி நேரத்துக்கு, 7 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி விட்டன. மேலும் பல இடங்களில் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதனிடையே இந்திய வானிலை மையம் இன்று தமிழகம் ம்ற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கனமழை காரணமாக அடுத்த 6 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்படலாம் என மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.



  • 09:54 (IST) 26 Nov 2021
    தமிழகம், புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட்: வானிலை மையம் தகவல்!

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.



  • 09:46 (IST) 26 Nov 2021
    கடலூர் தொழுதூர் அணையிலிருந்து 8,062 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்!

    கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தொழுதூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே அணையில் இருந்து 8,062 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வெல்லிங்டன் நீர்த்தேக்கம் நிரம்பியதால் அதற்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழுதூர் அணையிலிருந்து நீர்வெளியேற்றம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



  • 08:58 (IST) 26 Nov 2021
    சென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை!

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பலத்தமழை பெய்தது. அடையாறு, பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. விடியவிடிய பெய்த மழையால், தாழ்வான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனிடையே சென்னையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.



  • 08:51 (IST) 26 Nov 2021
    தூத்துக்குடியில் ஒரே நாளில் 25 செ.மீ மழைப்பதிவு: வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி!

    தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்றுமுதல் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர் கனமழையால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. இந்நிலையில் தூத்துக்குடியில் மட்டும் நேற்று ஓரே நாளில், 25 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.



  • 08:48 (IST) 26 Nov 2021
    புதுவகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு: மத்திய அரசு அலர்ட்!

    தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பி.1.1.529 பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து வரும் பயணிகளை மிகத் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்த மாநில அரசுகளை, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.



  • 08:32 (IST) 26 Nov 2021
    Corona Update: தமிழகத்தில் 739 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!

    தமிழகத்தில் புதிதாக 739 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 23 ஆயிரத்து 245 ஆக உள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை, 36 ஆயிரத்து 432 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரில் 764 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 8 ஆயிரத்து 442 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கோவையில் 112 பேரும், சென்னையில்107 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.



Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment