Advertisment

Tamil News Today Live : DRDO தயாரித்த 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து நாளை முதல் விநியோகம்

இன்று ஞாயிறு என்பதால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, வெளியில் சுற்றித் திரிவோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Tamil News Today Live : DRDO தயாரித்த 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து நாளை முதல் விநியோகம்

Tamil News Today Live : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

இன்று முழு ஊரடங்கு :

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், மளிகை, பலசரக்கு, மீன், இறைச்சிக் கடைகள் என அனைத்தும் 10 மணிக்கே மூடப்பட்டன. இன்று ஞாயிறு என்பதால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, வெளியில் சுற்றித் திரிவோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

ரெம்டெசிவிரை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் :

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் நுரையீரல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், அவற்றை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு விதிகளை மீறி ரம்ஜான் கொண்டாட்டம் :

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டதாக ராயப்பேட்டை, மந்தைவெளிபாக்கம் பகுதிகளை சார்ந்த 125 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு குவியும் உதவிகள் :

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொது நிவாரண நிதிக்கு உதவி கோரியிருந்த நிலையில், திரைப்பிரபலங்கள், ஆளுநர் என பலரும் ஆதரவளித்து வருகின்றனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 1 கோடி ரூபாயும், நடிகர் ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன் என பலரும் உதவி வழங்கி வருகின்றனர்.

18+ தடுப்பூசி திட்டம்; தற்போதைய நிலை?

மே 1 முதல் இந்தியாவில் 18+ அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி, கடந்த 16 நாள்களில் 18-45 வயதுக்கு உள்பட்டவர்களில் 42 லட்சத்து 58 ஆயிரத்து 756 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)



  • 21:44 (IST) 16 May 2021
    DRDO தயாரித்த 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து நாளை முதல் விநியோகம்

    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) தயாரித்த கொரோனா சிகிச்சை மருந்துபொடி ‘2டிஜி’ 10 ஆயிரம் பாக்கெட்டுகள் நாளை (மே 17) விநியோகம் செய்யப்படுகிறது. கொரோனா நோயாளிகள் இந்த பொடியை தண்ணீரில் கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். ‘2டிஜி’ நோயாளிகள் வேகமாக குணமடைவதுடன் ஆக்ஸிஜன் தேவையும் குறையும் என டி.ஆர்.டி.ஓ தகவல் தெரிவித்துள்ளது.



  • 20:56 (IST) 16 May 2021
    தமிழகத்தில் இன்று புதிதாக 33,181 பேருக்கு கொரோனா; 311 பேர் பலி

    தமிழகத்தில் இன்று புதிதாக 33,181 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 311 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 21,317 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் வீடு திரும்பினர். தற்போது 2,19,342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



  • 20:48 (IST) 16 May 2021
    வழக்கறிஞர்கள் கறுப்பு கோட், கறுப்பு கவுன் அணிய தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

    கொரோனா பரவாமல் தடுக்க, மெட்ராஸ் பார் அசோசியேஷன் அளித்த கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர்கள் செப்டம்பர் 7 முதல் கறுப்பு கோட், கறுப்பு கவுன் அணிய தேவையில்லை; வெள்ளை சட்டையுடன் கழுத்து பட்டை அணிந்து மட்டும் நேரடி விசாரணைக்கு ஆஜராகலாம் என்று அனுமதி அளித்துள்ளது.



  • 19:50 (IST) 16 May 2021
    கொரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் ஆலோசனைக் குழு - தமிழக அரசு அறிவிப்பு

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளுக்கும் குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த குழுவில் திமுகவில் இருந்து டாக்டர் எழிலன், அதிமுகவில் விஜய பாஸ்கர், காங்கிரஸில் இருந்து முனிரத்தினம், பாமகவில் இருந்து ஜி.கே.மணி, பாஜகவில் இருந்து நயினார் நாகேந்திரன், மதிமுகவில் இருந்து டாக்டர் சதன் திருமலைக்குமார், விசிகவில் இருந்து எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ராமசந்திரன், மமக-வில் இருந்து ஜவாஹிருல்லா கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியில் இருந்து ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இருந்து வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சியில் இருந்து ஜெகன் மூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



  • 18:26 (IST) 16 May 2021
    அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

    செய்தி ஊடக ஆசிரியர்கள் உடனான கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூல் என புகார் வரவே, கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது; ஆனால், 108 ஆம்புலன்ஸுக்கு கட்டணம் என செய்தி பரவுகிறது; ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது; ஆனால், ரூ.6 விலை உயர்த்தி ரூ.3 குறைக்கப்படுவதாக செய்தி பரவுகிறது. அதனால், அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள்.” என்று கூறினார்.



  • 16:48 (IST) 16 May 2021
    18ம் தேதி கரையை கடக்கிறது டவ்-தே புயல்

    அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து குஜராத் அருகே 18ம் தேதி டவ்-தே புயல் கரையை கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • 16:08 (IST) 16 May 2021
    2 வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி 84 நாட்களுக்கு பிறகே வழங்கப்படும் - மத்திய அரசு

    2 வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைன் பதிவுக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கோவிஷீல்டின் இரண்டு டோஸ்களுக்கான கால இடைவெளி 90 நாட்களாக அதிகரித்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.



  • 15:55 (IST) 16 May 2021
    சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி நிதியுதவி

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக, முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.



  • 14:58 (IST) 16 May 2021
    தடுப்பூசி செலுத்தினால் இறப்பு அபாயம் இருக்காது - மாநகராட்சி ஆணையர்

    தடுப்பூசி செலுத்தினால் இறப்பு அபாயம் இருக்காது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.



  • 14:40 (IST) 16 May 2021
    தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாக இயக்குனராக ராஜேஷ் லக்கானி நியமனம்

    தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2016 தேர்தலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணிபுரிந்தவர்.



  • 13:45 (IST) 16 May 2021
    டெல்லியில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு

    கொரோனா பரவலால் தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவாரம் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.



  • 13:43 (IST) 16 May 2021
    தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்

    தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து,மே 18 முதல் விநியோகம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.



  • 13:37 (IST) 16 May 2021
    தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்

    தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து,மே 18 முதல் விநியோகம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.



  • 13:34 (IST) 16 May 2021
    தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு

    தமிழகத்திற்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை 3.50 லட்சமாக அதிகரித்திருக்கிறது மத்திய அரசு. மேலும், அனைத்து மாநிலங்களுக்கான மொத்த ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு 76 லட்சமாக அதிகரித்திருக்கிறது.



  • 13:32 (IST) 16 May 2021
    24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது.



  • 13:01 (IST) 16 May 2021
    நீலகிரி மாவட்டத்தில் வரும் 20ஆம் தேதி வரை கனமழை பெய்யும்

    டவ்-தே புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் வரும் 20-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.



  • 11:47 (IST) 16 May 2021
    ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு என பதிவிட்ட 3 பேர் கைது

    சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளதாக சமூகவளைதலத்தில் பதிவிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வங்கதேசத்தில் இருந்து மருந்தை இறக்குமதி செய்து கள்ளச்சந்தையில் ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. மேலும், 2 ரெம்டெசிவிர் குப்பி மற்றும் ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



  • 11:28 (IST) 16 May 2021
    காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.ராஜீவ் சதாவ் கொரோனாவால் மரணம்!

    காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சாதவ் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 47.



  • 10:56 (IST) 16 May 2021
    இயக்குநர் சங்கர் 10 லட்சம் நிதியுதவி!

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவி வழங்கிட, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இயக்குநர் சங்கர் 10 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.



  • 10:53 (IST) 16 May 2021
    மயானப் பணியாளர்களும் முன்களப் பணியாளர்களே; அமைச்சர் மா.சு!

    மயானங்களில் பணியாற்றுவோரும் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மாயானப் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.



  • 10:14 (IST) 16 May 2021
    இந்தியாவில் கொரோனா நிலவரம்!

    இந்தியாவில் நேற்று இரு நாளில் மட்டும் 3,11,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4077 பேர் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.



  • 10:10 (IST) 16 May 2021
    புதிய கல்விக் கொள்கை கூட்டம்; கல்வித்துறை அமைச்சர்களையும் அழைக்க வேண்டும்!

    புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக நாளை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில், மாநிலங்களின் கல்வித்துறை செயலாளர்களை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாநில கல்வி அமைச்சர்களையும் கூட்டத்தில் பங்கேற்க அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 10:03 (IST) 16 May 2021
    காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை குத்தகைக்கு வாங்கும் தமிழக சுகாதாரத்துறை!

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் போதிய அளவிலான ஆக்சிஜன் சேமிப்பு வசதிகள் இல்லாததால், சிப்காட் உள்ளிட்ட தொழில்நிறுவனங்களில் இருந்து, முதல் கட்டமாக 10,000 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை குத்தகை முறையில் வாங்க தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.



  • 09:40 (IST) 16 May 2021
    உருமாறிய கொரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் ஸ்புட்னிக் வி!

    ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, உருமாறிய கொரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளதாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் குடாஷேவ் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் ஒரு ஆண்டிற்குள் 850 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து உருவாக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



  • 09:33 (IST) 16 May 2021
    அவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு!

    ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில், அத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.



Tamilnadu Live News Udpate Tamilnadu News Update Tamilnadu Latest News Tamilnadu Covid 19 Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment