Advertisment

'சாதாரணமான ஆண்- பெண் செய்யும் வேலைகளை இவர்களுக்கு ஏன் இந்த சமூகம் வைக்கவில்லை?

சாதாரணமாக ஒரு ஆண் பெண் செய்யும் வேலைகளையும், சமூகத்தில் அவர்களுக்கு வைக்கும் இடத்தையும், திருநங்கை/ திருநம்பிகளுக்கு ஏன் அளிக்கவில்லை என்ற கேள்விக்கான பதில் இன்று வரை முழுமையாக கிடைக்கவில்லை.

author-image
WebDesk
New Update
'சாதாரணமான ஆண்- பெண் செய்யும் வேலைகளை இவர்களுக்கு ஏன் இந்த சமூகம் வைக்கவில்லை?

Janani Nagarajan

Advertisment

நம்நாட்டில் பெண் இலக்கியம், தலித் இலக்கியம் பேசுவதற்கு ஆட்கள் பலர் இருக்கிறார்கள், ஆனால் திருநங்கையர்களை பற்றி பேசுவதற்கு மக்கள் தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. கி.மு. 4-ம் நூற்றாண்டிலேயே தொல்காப்பியத்தில் திருநங்கையர்களை "பால் திறந்தவர்கள்" என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளனர். அப்படி பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே திருநர் சமூகத்தின் குறிப்பீடு வரலாற்றில் இருந்தும், அதைப்பற்றி பேசுவதற்கு ஆட்கள் யாரும் முன்வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இந்த அவல நிலையை மாற்றுவதற்காக, இந்தியாவிலேயே திருநங்கைகளுக்கான பதிப்பகமும், திருநர் இலக்கியம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தோன்றியதுதான் ட்ரான்ஸ் பப்பிளிகேஷன்ஸ்.

ட்ரான்ஸ் பப்பிளிகேஷன்ஸ் வெளியீட்டில் பிரியா பாபு எழுதிய "இடையினம் - திருநங்கையர் வாழ்வும் வரலாறும்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் எழும்பூரிலுள்ள இக்சா மையத்தில் நவம்பர் 20, (சனிக்க்கிழமை) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெண், திருநங்கை, ஆண், திருநம்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

publive-image

இந்நிகழ்ச்சியில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ம. இராசேந்திரன், கவிஞரும் எழுத்தாளருமான ஆண்டாள் பிரியதர்ஷினி, பேராசிரியரும் அரங்க கலைஞருமான அ. மங்கை, எழுத்தாளரான பாக்கியம் சங்கர், பத்திரிகையாளரான கவிதா முரளிதரன், எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளரானஅர. க. விக்ரம கர்ண பழுவேட்டரையர், ட்ரான்ஸ் நியூஸ் மின்னிதழின் இணை ஆசிரியையும் "இடையினம்" நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பாளரான மகாலெட்சுமி ராகவன், சமூக செயற்பாட்டாளரான ரேகா நாயர், ஜீவா ரெங்கராஜ், எழுத்தாளரான ஷான் கருப்பசாமி, ஜீவகரிகாலன், வி. ராம், பத்மா, சோ. பாலகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நெட்ப்பிலிக்ஸில் வெளிவந்த பாவக்கதைகள் என்ற படத்தில் "தங்கம்" என்ற தொகுப்பின் கதாசிரியரான ஷான் கருப்பசாமி, பெண் உடைகளிலும், பெண்கள் போலவே தன்னை பாவித்துக்கொள்பவர்கள் மட்டுமே திருநங்கைகள் என்ற பிம்பத்தை "தங்கம்" என்ற கதையின் மூலம் உடைத்திருந்தார். மேலும், திருநங்கையர்களின் வாழ்க்கையில் நிகழும் காதல் தோல்விகளையும், சமூக புறக்கணிப்பையும் மிகவும் அழகாக தன் கதையின் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் பேசிய அவர் கூறுகையில்,

"தங்கம் என்ற சிறுகதை எனக்குள் ஆறு வருடங்களுக்கு முன் தோன்றிய ஒன்று. 1900களில் நான் பள்ளிப்பருவத்தில் இருந்தபோது, பெண் தன்மையுடன் இருப்பவர்களை நகைப்புக்குரியவர்களாக பார்க்கும் அறியாமை நிறைந்த மனநிலையில் இருந்த என் வாழ்க்கையில் நடந்த உண்மை கதை தான் இது. என் குற்றஉணர்ச்சித்தான் இன்று கதையாக மாறிவிட்டது. முதன்முதலில் இக்கதையை "தங்கம்" இயக்குனரான சுதா கொங்கராவிடம் காண்பித்தபொழுது அவர் கண்கலங்கிய நிலையில் இந்த கதையை ஒப்புக்கொண்டார். இது போல எத்தனை திருநங்கையர்கள் இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் இந்த படத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து போற்ற வேண்டும் என்று முடிவு செய்தோம். இந்த பயணத்தில் திருநர் சமூகத்தைப்பற்றி பல தகவல்களை நான் தெரிந்துகொண்டேன்.

திருநங்கையர்களைப்பற்றி பள்ளிப்பாட புத்தகத்தில் சேர்க்கவேண்டும்; அப்போது தான் சமூகத்திற்கு இவர்களைப்பற்றி புரிந்துகொள்வதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும். நாற்பது ஐம்பது வருடங்களாக திரைத்துறைகளில் திருநங்கைகளை தவறாகவே சித்தரிக்கின்றனர்; அவர்களை எப்போதுமே கேலிக்குரியவர்களாகவும், பாலியல் சம்மந்தப்பட்டவர்களாகவும் காட்சிப்படுத்தி சமூகத்தில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பல இடங்களில் இதைப்பற்றி விழிப்புணர்வு உருவாக்க வேண்டிய நிலையில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

publive-image

என் மகள் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். அவளுடைய பாடப்புத்தகத்தில் LGBTQ+ சமூகத்தைப்பற்றி விளக்கக்காட்சி செய்து வருமாறு ஆசிரியர் சொல்லியிருக்கிறார்; அதற்கு ஒருசில பெற்றோர்கள் "இவையெல்லாம் எங்கள் குழந்தைகள் தெரிந்துகொள்ள கூடாது" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். வளர்ந்து வரும் அடுத்த தலைமுறைகளுக்கு தடையாக பெற்றோர்களே இருப்பதை எண்ணி கவலைக்குள்ளாகின்றேன்.

"இடையினம்" என்ற புத்தகத்திலிருந்து நிறைய தகவல்களை தெரிந்துகொண்டேன். வரலாற்று சார்ந்து, மதம் சார்ந்து, கட்டிடக்கலை மற்றும் கோவிலிலுள்ள சிற்பக்கலைகள் உள்ளிட்ட அனைத்திலும் திருநங்கையர்களின் பங்கு இருந்திருக்கிறது என்று தெரியப்படுத்தியிருக்கிறார், பிரியா பாபு. ஆனாலும், அவர்களுக்கான நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்ட இடம் என்று எதுவும் அமையவில்லை. அந்த காலத்தில் ஒரு சில இடங்களில் கடவுளாகவும் மற்ற இடங்களில் அந்தப்புரத்தில் வசிப்பவர்களாகவும் வைத்திருக்கிறார்கள்.

சாதாரணமாக ஒரு ஆண் பெண் செய்யும் வேலைகளையும், சமூகத்தில் அவர்களுக்கு வைக்கும் இடத்தையும், திருநங்கை/ திருநம்பிகளுக்கு ஏன் அளிக்கவில்லை என்ற கேள்விக்கான பதில் இன்று வரை முழுமையாக கிடைக்கவில்லை.

தீண்டாமை ஒரு பெரும் குற்றம், செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, அதை வலியுறுத்த பல சட்டங்கள் நம் நாட்டில் இருக்கிறது. எல்லா பாடப்புத்தகத்திலும் "தீண்டாமை பெருங்குற்றம், அதற்கு தண்டிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது. அதை சாதி வைத்து மட்டும் இல்லாமல், பிறப்பால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று எண்ணுவதற்கு சேர்த்து கருதும் நிலையில், திருநர் சமூகத்தை ஒதுக்குவதற்கு பெயரும் தீண்டாமையே. தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை இவர்களுக்கு ஆதரவாகவும் மாற்றி திருநர் சமூகத்தை காக்கவேண்டியது நம் கடமை.” என்று கூறியுள்ளார்.

மேலும் ஜீவகரிகாலன், தமிழகத்தில் மிகப்பெரிய திருநங்கையர்/ திருநம்பிகளுக்கான இடைக்கால தங்கும் விடுதியை நடத்தி வருகிறார்; இவரின் விடுதியில் 25 திருநங்கைகள் கல்லூரிகளில் பிடித்துக்கொண்டும், ஐ.ஏ.எஸ். பதவிக்கு பயின்றுக்கொண்டும், பல மதிப்பிற்க்கூறிய இடங்களில் வேலை செய்வதும் பெருமையளிக்கிறது.

“இந்தியாவிலேயே முதல் பதிப்பகம் என்பதற்கு பெருமைக்கொள்வதா, அல்லது இவ்வளவு தாமதமாக வருகிறதே என்று வருத்தம் கொள்வதா என்று தெரியவில்லை; இதனாலேயே திருநர் சமூகத்தின் தேவை என்னவென்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நம்மூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் கூட கட்டடங்களில் முழுமையாக வராத நிலையில், திருநர் சமூகத்திற்காக நடக்கும் இந்த முயற்சி வெற்றிப்பெறுவதற்கு ஆண்டுகள் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”

மேலும், "திருநர் சமூகத்தைப்பற்றி வெளிவரும் புத்தகங்களை மாணவர்களாலும் வாசகர்களால் எல்லா இடங்களிலும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்ற காரணத்தினால் சென்னையில் திருநங்கையர்களுக்கான நூலகத்தை உருவாக்க வேண்டும்; மேலும்  அடுத்த வருடம் சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பிரத்தியேகமாக ட்ரான்ஸ் பப்பிளிகேஷன்ஸ் விற்பனையகத்தை கொண்டுவர வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறோம்." என்று கூறியுள்ளார்.

பேராசிரியரும் நாடக பயிற்சியாளருமான அ. மங்கை, நூற்றிற்கும் மேற்பட்ட இடங்களில் திருநங்கையர்களுக்காக நாடகங்கள் நடத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் பிரியாவையும் சபீனாவையும் 2004 ஆண்டில் சந்தித்தேன்; திருநங்கையர்களைப்பற்றி மக்கள், ஹச்.ஐ.வி போன்ற நோய்ப்பரவளின் 'High Risk Category' என்ற பிரிவில் தான் அவர்களை கவனிக்கத் தொடங்கினார்கள்.அந்த நேரத்தில் திருநர் சமூகத்தை சென்றவர்கள் பலரும் பணியாற்றினார்கள். அப்போது பிரியாவும் சபீனாவும் என்னிடம் கூறியது, "இதைப்பற்றி பேச வரவில்லை; எங்கள் வாழ்க்கையை பற்றி பேசவேண்டும்" என்பது தான்;

எங்கள் நாடகத்திற்கு 'கண்ணாடி' என்று பெயர் வைத்ததற்கு திருநர் குழு கூறிய காரணம் "இந்த பெயரின் காரணம், எங்களை உங்களுக்கு காட்டுவதற்காக இல்லை; நீங்கள் எங்களை எப்படி நடத்துறீர்கள் என்பதை உங்களுக்கே காட்டுவதற்காக தான்" என்று கூறினார்கள்; "திருநர்  என்பது எங்களுடைய அடையாளம் தான்; ஆனால் அந்த அடையாளத்திற்குள்ளே மட்டும் அடங்கி நிற்க நாங்கள் தயாராக இல்லை" என்று சொல்லக்கூடிய பல்வேறு திருநர் சமூகத்தை சேர்ந்தவர்கள், ஓரினசேர்க்கையாளர்கள் இருக்கிறார்கள்;

publive-image

தமிழகத்திலும் கர்நாடகத்திலும் இருக்கக்கூடிய குயர் சமூகத்தின் போராட்டங்கள், பெற்ற வெற்றிகள், எடுத்துரைக்கும் விஷயங்கள், வடமாநிலங்களில் இருக்கக்கூடிய திருநர்  சமூகத்தை விட வித்தியாசமானது. அவர்கள் சார்ந்த வர்க்கத்திலும், கல்வி சார்ந்த அனுபவ வெளிப்பாடுகள் ஆகிய அனைத்திலும் சிக்கல் இருக்கக்கூடிய பரந்துபட்ட சமுதாயத்தினரை சேர்த்து ஒரு இயக்கமாக இங்கு இருக்கக்கூடிய திருநர்  இயக்கம் என்பது வந்தது; அதுமட்டுமல்லாமல் இங்கே இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய முற்போக்கு சிந்தனை சார்ந்த இடதுசாரி இயக்கங்களாக இருந்தாலும் சரி, திராவிட இயக்கங்களாக இருந்தாலும் சரி, பெரியாரிய சிந்தனைகளாக இருந்தாலும் சரி, பெண்ணிய போராட்டங்களாக இருந்தாலும் சரி, அத்தனை இயக்கங்களோடும் இணைந்து நிற்கக்கூடிய ஒரு சமூகம் என்றால், அது திருநர் சமூகம் மட்டும்தான்.

பிரியா அவர்கள் கடந்த ஏழு-எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்த உழைப்பின் அடிப்படையில் மதுரையில் உருவாகியிருக்கக்கூடிய ஆராய்ச்சி மையம், அங்கு அமைந்துள்ள தாக்கல் அமைப்பு, எந்த தகவலாக இருந்தாலும் எளிதில் அணுகக்கூடிய, விதத்தில் அந்த அலுவலகத்தை கண்டு ஆச்சரியப்பட்டேன். அதையொட்டி ஒரு நூலகமும் ஒரு விற்பனையாகமும் சென்னையில் உருவாக்கவேண்டும் என்ற ஒரு கனவுக்கான ஒரு அடிக்கல்லாகத்தான்  இந்த நூலை நான் பார்க்கிறேன்.  இனவரைவியல், வாணிலாவியல், சமூகவியல், கலை வரலாறு (ஓவியம், சிற்பம், கோவில் கலை), இலக்கியம், சட்டம் மற்றும் நீதித்துறை, தத்துவவியல் ஆகிய பல்வேறு துறைகள் சார்ந்த ஒரு தேடலாகத்தான் இந்த புத்தகம் நம்முன் வந்திருக்கிறது; ஒரு பரந்துபட்ட ஒரு வரையெல்லையை நம்முன் காட்டியதாக தான் இந்த நூலை நான் பார்க்கிறேன்; இந்த நூல் திருநர் சமூகத்தின், காலங்காலமாக சந்தித்திருக்கக்கூடிய சமூக வரலாற்று இலக்கிய தடங்கலையும் இருப்பையையும் பதிவு செய்திருக்கின்றன.”

இந்நிகழ்வில்  "இடையினம்"  எழுத்தாளரான பிரியா பாபு கூறுகையில்:

பல்வேறு அரசாட்சிகளில் குறிப்பிட்டுள்ள திருநங்கையர்களின் வரலாறு இன்று தெருவிற்கு வந்ததற்கான காரணம் 300 வருட பிரிட்டிஷ் ஆட்சியே. அவர்களுடைய குற்ற பரம்பரை சட்டம் தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம், அதற்கான ஆவணங்களை இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறோம்; அந்த அவல நிலையிலிருந்து மீண்டு எழுந்த மாநிலங்களில் தமிழ்நாடு முன்னொடி மாநிலம் என்பதை மறுக்கவே முடியாத ஒன்று.

சமூகத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு முதல் மாற்றத்தை கல்வியில் வைப்பதே சமர்த்தியமானது; திருநர் சமூகத்திற்கு கல்வியை கொடுத்துவிட்டால் அவர்கள் தெருவிற்கு வரும் நிலையை தவிர்த்துவிடலாம்; வருங்காலத்தில் வரும் குழந்தைகளுக்கு பாலியல் மாறுபாடுகளைப்பற்றி புரியவைத்தால் சமூகத்தில் நடக்கும் பெரியக்குழப்பங்களுக்கு தீர்வு கண்டுவிடலாம். தற்போது மிகப்பெரிய நூலகம், இணைய இதழ், ட்ரான்ஸ் மீடியா என்ற யூடியூப் சேனல் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இம்முயற்சியால் குடும்பங்களும் சமூகமும் ஒப்புக்கொள்வது, ஏற்றுக்கொள்வதைத் தாண்டி திருநர் சமூகத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment