scorecardresearch

பிளஸ்-1 மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் மர்ம மரணம்: தண்டவாளத்தில் பிணமாக மீட்பு

கத்திகுத்து வாங்கி பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரின் 16 வயது மகள் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று பள்ளியில் இறுதித் தேர்வை எழுதி முடித்துவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். 

அப்போது  திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது, மாணவியை வழிமறித்த இளைஞர் ஒருவர் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞர் ஆத்திரத்தில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இதில் கழுத்து, தோள்பட்டை, முதுகு என சுமார் 10 இடங்களில் கத்திகுத்து வாங்கி பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பொத்தமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கேசவன் (22) என்னும் இளைஞர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றிருக்கிறார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையயத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் கேசவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த கேசவன், தொடர்ச்சியாக அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியிருக்கிறார்.

தொடர்ந்து `உன்னால தான் ஜெயிலுக்கு போய்ட்டு வந்துருக்கேன். நீயே என்னை வேணாம்னு எப்படி சொல்லலாம்’ என தொல்லை கொடுத்து வந்த கேசவன், சம்பவத்தன்று என்னை கட்டிக்கலைன்னா நீ ஏன் உயிரோட இருக்க, செத்துப் போ!’ என கூறி கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்தா மாணவி தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீசார்,  கேசவனை தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை கீழபூசாரிப்பட்டி இரயில்வே கேட் அருகில் இரயில் பாதையில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அந்த உடலைக் கைப்பற்றிய விசாரணை மேற்கொண்டன.

இந்த விசாரணையில், நேற்று மாலை பள்ளி மாணவியை கத்தியால் குத்தி விட்டு சென்ற கேசவன் தான் ரயில் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்ததை அடையாளம் கண்டனர். இதுகுறித்து அவனது தந்தையை வரவழைத்து அடையாளப்படுத்திய பின்பு பிரேத பரிசோதனைக்காக கேசவன் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கேசவன் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கேசவன் தப்பிச்செல்லும்போது ரயிலில் அடிபட்டு இறந்தானா? அல்லது யாரேனும் அவனை கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் போட்டுச்சென்றனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை துவக்கியிருக்கின்றனர்.

க.சண்முகவடிவேல்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu trichy youth death near railway track manapari police recover body

Best of Express