கள்ளத் துப்பாக்கிச் சந்தையாக மாறும் தமிழகம் : சிபிஐ விசாரணை கோருகிறார் ராமதாஸ்

தமிழகம் கள்ள துப்பாக்கிச் சந்தையாக மாறிவருகிறது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகம் கள்ள துப்பாக்கிச் சந்தையாக மாறிவருகிறது. கள்ள துப்பாக்கி விற்பனையில் பல மாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம் பெற்று இருப்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

சென்னை மற்றும் திருச்சியில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 7 கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் கள்ள ரூபாய் தாள்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. தமிழகத்தில் அதிக அளவில் கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும், இதில் காவலரே சம்பந்தப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் செல்லும் தொடர்வண்டியில் திருவொற்றியூர் வந்த இருவரிடமிருந்து 5 கள்ளத்துப்பாக்கிகளும், ரூ.14 லட்சம் கள்ளரூபாய் தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், திருச்சியில் ஒரு விடுதியில் பதுங்கியிருந்த இருவரிடமிருந்து 2 கள்ளத்துப்பாக்கிகளும், 10 துப்பாக்கிக்குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த காவலர் என்றும் தெரியவந்திருக்கிறது.

தலைநகர் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக விற்கப்படுகின்றன என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. சென்னை மற்றும் திருச்சியில் கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது எதேச்சையான நிகழ்வுகள் அல்ல. சென்னையிலும், திருச்சியிலும் கள்ளத் துப்பாக்கிகளுடன் சிலர் நடமாடுவது குறித்து அவர்களின் போட்டிக் குழுவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் இவர்கள் கைது செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அப்படியானால் தமிழகத்தில் தொழில்முறையிலான துப்பாக்கிக் கடத்தல் மற்றும் விற்பனை கும்பல்கள் அதிக எண்ணிக்கையில் செயல்படுகின்றன என்று தான் பொருள். தமிழகம் கள்ளத் துப்பாக்கிகளின் சந்தையாக மாறி வருவது தமிழகத்தின் அமைதிக்கும், சட்டம், ஒழுங்குக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகரித்து வருவது குறித்து கடந்த காலங்களில் பலமுறை நான் எச்சரிக்கை விடுத்திருக்கிறேன். கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை கோயம்பேட்டில் கள்ளத் துப்பாக்கிகளை விற்பனை செய்ததாக ஒரு கும்பலை காவல்துறையினர் கைது செய்தார்கள். அந்த கும்பல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டது. அப்போது நடந்த விசாரணையில் தெரியவந்தது. அதற்கு முன் 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காமேஷ் என்பவர் அவருடன் பயணம் செய்த ஒருவரால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பயன்படுத்தியது கள்ளத்துப்பாக்கி என்று காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை கோயம்பேடு, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் வட இந்திய மாணவர்கள் சிலர் துப்பாக்கிகளுடன் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியான போதே தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வலியுறுத்தினேன். தமிழக அரசும், காவல்துறையும் அந்த விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் இப்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதோ, இங்கிருந்து தான் பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பதோ காவல்துறையினருக்கு தெரியாத உண்மை இல்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரிந்து தான் கள்ளத்துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தை ஆளும் கட்சி, இதற்கு முன் ஆண்ட கட்சிகளைச் சேர்ந்த சிலரும் இந்த கும்பல்களிடமிருந்து கள்ளத் துப்பாக்கிகளை வாங்கியிருப்பதாகவும், அவர்களின் ஆதரவு இந்த கடத்தல் கும்பலுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிக் கடத்தல் கும்பல்கள் அனைத்தும் சட்டத்தின் துணை கொண்டு வீழ்த்தப்பட வேண்டும். துப்பாக்கிக் கடத்தலுக்கு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஆதரவளித்ததாகக் கூறப்படுவதாலும், இது பல மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதாலும் இது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close