வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழக அரசு தோல்வி: ராமதாஸ் குற்றச்சாட்டு

பத்தாண்டுகளில் 1.40 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால், இரண்டரை லட்சம் பேருக்கு மட்டுமே அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும் மிகவும் அவசியமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான் அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், இவ்விசயத்தில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என்பது தான் உண்மை.

தமிழக அரசின் வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 81.18 லட்சம் பேர் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்.

2007-ஆண்டுக்குப் பிறகு கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட 1.40 கோடி பேர் வேலை கேட்டு புதிதாக பதிவு செய்துள்ளனர். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இரண்டரை லட்சம் பேருக்கு மட்டுமே அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் லட்சனம் இப்படித்தான் இருகிறது.

கடந்த 2007-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருந்தோரின் எண்ணிக்கை 49,64,285 ஆகும். அதன்பின் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையைக் கூட்டி, வேலை பெற்றோரின் எண்ணிக்கையை கழித்தால் வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 1.87 கோடியாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், 81.18 லட்சம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பகங்களில் காத்திருப்பதால், ஒரு கோடியே ஆறு லட்சம் பேர் தமிழக அரசால் தங்களுக்கு வேலை வழங்க முடியாது என்ற அவநம்பிக்கையில் வேலைவாய்ப்பக பதிவை புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர் என்பதை உணர முடிகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழக அரசு தோல்வியடைந்ததற்கு இதைவிட சிறந்த சாட்சியம் தேவையில்லை.

ஒருபுறம் தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் அனைத்தும் தமிழகத்தில் நிலவும் ஊழல் காரணமாக கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆந்திரத்தின் ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கும், தெலுங்கானா மாநிலத்திற்கும் செல்கின்றன.

அம்மாநிலங்களில் தொழில் தொடங்க கையூட்டு தர வேண்டியதில்லை என்பதாலும், விண்ணப்பித்த 2 வாரங்களில் அனுமதி கிடைப்பதுமே இதற்கு காரணமாகும். தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவதில்லை.

தமிழகத்தில் இயங்கும் என்.எல்.சி, சென்னை பெட்ரோலிய நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம், தெற்கு தொடர்வண்டித்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் வட இந்தியர்களுக்கே வேலை வழங்குகின்றன.

தனியார், பொதுத்துறை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் குறிப்பிட்ட அளவு பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்வதை கட்டாயமாக்குவதன் மூலம் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்ய முடியும். ஆனால், தமிழகத்தை ஆளும் அதிமுகவுக்கு அதற்கான துணிச்சலோ, செயல்திறனோ கிடையாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு தாராளமாக வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சூழலை பா.ம.க. ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close