திருமுருகன் காந்தியை விடுவிக்க லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் : இந்திய தூதரக சுவரில் நோட்டீஸ் ஒட்டினர்

திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை மெரினா கடற்கரையில் கடந்த மே மாதம் 21-ந்தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை மே 17, தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் ஒருங்கிணைத்து நடத்தின. இதற்கு போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. பின்னர் தடையை மீறி நிகழ்ச்சி நடத்தியதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பிறகு இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து திருமுருகன், டைசன், இளமாறன் ஆகியோர் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களை விடுவிக்கக் கோரி, தமிழகத்தில் சில அரசியல் இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்தில் அந்தப் போராட்டங்கள் ஓய்ந்தாலும், கடல் கடந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் இன்னமும் போராட்டங்கள் நீடிக்கின்றன.
அண்மையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய தூதரகம் எதிரே தமிழ் இளைஞர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேற்படி அமைப்பின் துணைத்தலைவர் கிரிஷ் சபா இதற்கு தலைமை தாங்கினார். குண்டர் சட்டத்திற்கு எதிராகவும், மேற்படி நால்வரையும் விடுவிக்க கோரியும் அதில் கோஷமிட்டனர். பிறகு தங்கள் கோரிக்கை அடங்கிய நோட்டீஸை தூதரக சுவரின் ஒட்டிச் சென்றார்கள். ஈழத்தமிழர்கள் உள்பட சுமார் 30 பேர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

×Close
×Close