ஸ்டாலின் முதல்வராவதைத் தடுக்கும் சக்தி ரஜினியா? தமிழருவி மணியன் ட்வீட்டின் பின்னணி என்ன?

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரும், ரஜினியின் அரசியல் வருகையை ஆதரிப்பவருமான தமிழருவி மணியன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்வீட், திமுகவினரை உஷ்ணமாக்கும் வகையில் உள்ளது

தமிழருவி மணியன் ட்வீட்
தமிழருவி மணியன் ட்வீட்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த இரண்டு அறிக்கைகள் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அனைத்து மீடியாக்களிலும் விவாதப் பொருளாக மாறியது. முதல் அறிக்கையில், ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை கலந்த அறிவுரையை ரஜினி வழங்கியிருந்தார். அதில், “30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது.

முதலில் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள். அரசியல் எல்லாம் அப்புறம் தான். கட்சிக்காக செலவு செய்யுங்கள் என்று யாரிடமும் நான் சொன்னதில்லை. அதனால் யாராவது என்னிடம் வந்து நான் மன்றத்திற்காக செலவு செய்தேன் என்று சொன்னால் அதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.” என்று தெரிவித்தார்.

ரஜினியின் இந்த அறிக்கை, அவரது ரசிகர்களிடையே சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. இவ்வளவு காலம் ரசிகர் மன்றத்திற்காக உழைத்து, செலவு செய்தால், பதவி கிடையாது என தலைவர் சொல்கிறாரே என சில ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

ரசிகர்களின் இந்த விரக்தியை கப்பென்று பிடித்துக் கொண்ட திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி, ரஜினியின் அறிக்கை குறித்து, ‘ஹூ ஈஸ் த பிளாக் ஷீப்’ என்ற தலைப்பில், ஒரு ரஜினி ரசிகன் கேள்வி கேட்பது போல விமர்சித்து கட்டுரை வெளியிட்டது. இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாய் அமைந்தது.

முரசொலியின் இந்த கட்டுரை வெளியான உடனேயே, மறு அறிக்கை ஒன்றை ரஜினி வெளியிட்டார். அதில், “உங்களைப் போன்ற ரசிகர்களை அடைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும் உங்களையும், யாராலும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்தப் பாதையில் போனாலும் அந்தப் பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்குத் துணை இருப்பான்” என்று அதிருப்தி ரசிகர்களை சமாதானப்படுத்த முயன்றார் ரஜினி.

ஆனால், இந்த விவகாரத்தில் செய்யப்பட்ட அரசியல் என்ன தெரியுமா? ’30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது’ என்று ரஜினி சொன்னதை மட்டும் எடுத்துக் கொண்டு ரஜினி ரசிகர்களை உசுப்பிவிட்டது தான்.

ஆனால், அதே அறிக்கையில், “மன்றத்திற்காக உண்மையாக உழைப்பவர்களை நான் நன்கு அறிவேன். அந்த உழைப்பு வீண் போகாது” என்று ரஜினி சொன்னது மறைக்கப்பட்டது. இதனை அரசியல் அறிந்த ரஜினி ரசிகர்கள் உணர்ந்தாலும், மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

விவகாரம் இவ்வாறாக சென்றுக் கொண்டிருக்க, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரும், ரஜினியின் அரசியல் வருகையை ஆதரிப்பவருமான தமிழருவி மணியன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்வீட், திமுகவினரை உஷ்ணமாக்கும் வகையில் உள்ளது.

அவர் தனது ட்வீட்டில், “ஸ்டாலின் முதல்வராவதை தடுக்கக்கூடிய சக்தி ரஜினி மட்டும்தான்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இது உடன்பிறப்புகளை தற்போது ஆத்திரமடைய வைத்துள்ளது.

அதுசரி… ஸ்டாலின் முதல்வராவதை தடுக்கும் சக்தி ரஜினி என்றால், அப்போ ஸ்டாலின் தான் அடுத்த முதல்வராவதற்கு வாய்ப்பு உள்ளது என தமிழருவி மணியன் இப்போது உணருகிறாரா? என்பது தெரியவில்லை.

ஆனால், இதற்கு வேறொரு காரணமும் இருக்கலாம். பிரபல வட இந்திய சேனல் ஒன்று, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற தலைப்பில் மக்கள் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதில், ஸ்டாலின் 41% சதவிகிதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். இதில், ரஜினிகாந்த் 6% ஆதரவு பெற்று 7வது இடத்தையே பிடித்தார்.

எனவே, தமிழருவி மணியனின் இந்த ட்வீட், முரசொலியின் கட்டுரை, தனியார் சேனலின் வாக்குப்பதிவு போன்றவற்றிற்கு, ரஜினி சார்பில் ரசிகர்களுக்கு தடவப்பட்ட ஆறுதல் மருந்து என்றே கூறப்படுகிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamizharuvi maniyan tweet about rajinikanth

Next Story
இனப்படுகொலைக் குற்றவாளி பதவியேற்பு… தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் – வைகோ அறிக்கைபோர் குற்றவாளி மகிந்த ராஜபக்சே, வைகோ அறிக்கை, இலங்கை புதிய பிரதமர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com