By: WebDesk
Updated: October 29, 2018, 12:42:18 PM
Tamil News Today Live : முதல்வர் போட்ட ட்வீட்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது 713.34 கோடியாக உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கான நிதி 1515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த பணிக்கான ஒப்பந்தம் முதலமைச்சரின் உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போன்று திருநெல்வேலி – செங்கோட்டை கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்தும் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சேகர்ரெட்டி நாகராஜன், பி. சுப்ரமணியம் ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
வண்டலூர் முதல் வாலாஜா சாலை வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் “எஸ்.பி.கே அன்ட் கோ” நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், கிருஷ்ணகிரி , பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஐந்து வருடங்களான 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” விற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சுமார் 4800 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் உறவினர் பி. சுப்பிரமணியம் மற்றும் நாகராஜன் செய்யாத்துரை, சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அன்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்.பி.கே அன்ட் கோ நிறுவனங்களுக்கே சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதன் மூலம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை கொடுத்ததன் மூலமும் சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளார். ஆகவே முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பொது ஊழியர் என்ற முறையில் 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 ன் கீழ் உள்ள அனைத்து உட்பிரிவுகளின்படியும் தண்டனைக்கு உள்ளாகும் குற்றம் புரிந்துள்ளார்.
ஆகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சுமார் 4800 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழல் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையில் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே நான் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புதுறைக்கு உத்தரவிட வேண்டும் மேலும் இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகாரை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கடந்த 12ம் தேதி உத்தரவிட்டார்.
சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தங்களை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்க கூடாது என தி.மு.க. சார்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் ஒரு மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “இந்த வழக்கில் தி.மு.க.வின் ‘லெட்டர் பேடில்’ புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே தாக்கல் செய்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை அடங்கிய ‘சீல்’ வைக்கப்பட்ட உறையை ஐகோர்ட் திறந்து கூட பார்க்கவில்லை. முக்கியமான இந்த அறிக்கையை பார்க்காமல் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது முற்றிலும் தவறானதாகும். எனவே எந்த விதமான ஆதாரமும், முகாந்திரமும் இன்றி இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது .
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘டெண்டரில் முறைகேடு என்றால், டெண்டரை ரத்து செய்வதை விடுத்து, முதல்வருக்கு எதிராக ஏன் மனு தாக்கல் செய்தீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்கள். இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.