Advertisment

தலைவெட்டி முனியப்பன் அல்ல புத்தர் சிலைதான்… தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பதால் என்ன பிரச்னை?

சேலம், பெரியேரியில், இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலை அல்ல, புத்தர் சிலைதான், அதை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் விரிவாக கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

author-image
Balaji E
New Update
Salem Thalaivetti Muniyappan, Buddha statue, தலைவெட்டி முனியப்பன் அல்ல புத்தர் சிலை, தொல்லியல் துறையிடம் புத்தர் சிலையை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு, Salem Thalaivetti Muniyappan is actually Buddha statue, Buddha statue goes under Archeology Dept, Stalin Rajangam critical view on Buddha statue maintain

சேலம் மாவட்டம், பெரியேரியில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலை அல்ல, புத்தர் சிலை என்பது உறுதியாகி உள்ளதால், அந்த இடத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தலைவெட்டி முனிப்பன் என்ற பெயரில், மக்கள் வழிபாடு செய்கிற சிலை புத்தர் சிலை என தொடரப்பட்ட வழக்கில், அது புத்தர் சிலைதான், அதை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் விவகாரம் கவனம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் விரிவாக கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், சேலம் பெரியேறி தலைவெட்டி முனிப்பன் சிலை புத்தர் சிலை என்று 2015 ஆம் ஆண்டே ஆய்வுக் கட்டுரை எழுதியவர்.

இந்திய புத்த சங்கத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன் 2011ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலம் மாவட்டம், பெரியேரி தலைவெட்டி முனியப்பன் சுவாமி புத்தர் சிலை என்று கூறி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “சேலம் மாவட்டம், பெரியேரி கிராமத்தில், அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தில், 'தலைவெட்டி முனியப்பன்' கோயில் உள்ளது. அங்குள்ள சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கோயிலில் உள்ளது புத்தர் சிலை. அந்த சிலை அமர்ந்த நிலையில் கைகளை மடியில் வைத்தபடி உள்ளது.

அதோடு சிலை மட்டுமின்றி, அங்குள்ள 26 சென்ட் நிலமும், புத்த சங்கத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தை மீட்டு, புத்தர் சங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

மேலும், இது குறித்து அறநிலையத் துறைக்கும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மனுவில் கூறியிருந்தார்.

அண்மையில், இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "சம்பந்தப்பட்ட இடத்தில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலையா? புத்தர் சிலையா? என ஆய்வு செய்து, தமிழக தொல்லியல் துறை அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்தல் அறிக்கையில், “கோயில் கட்டிடம் நவீன தோற்றம் உடையது. அங்குள்ள சிலை கடினமான கல்லாலானது. தாமரை பீடத்தில், 'அர்த்தபத்மாசனம்' எனப்படும் அமர்ந்த நிலையில் சிலை உள்ளது. கைகள், 'தியான முத்ரா' கொண்டு உள்ளன. புத்தருக்கான அடையாளங்கள், சிலையின் தலை பகுதியில் உள்ளன. தொல்பொருள் மற்றும் வரலாற்று சான்றுகளை கவனமாக ஆய்வு செய்ததில், அந்த சிற்பம் மகா லட்சணங்களை கொண்டுள்ள புத்தர் சிலை தான்” என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தலைவெட்டி முனியப்பன் சிலை எனக்கருதி, பக்தர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்துள்ளதால், அறநிலையத் துறை வசமே தொடர அனுமதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களுக்குப் பின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், பெரியேரியில் இருப்பது புத்தர் சிலை தான் என்பதை, தொல்லியல் துறை தெளிவாகவும், திட்டவட்டமாகவும், தன் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. அந்த சிற்பம் புத்தர் சிலை என முடிவுக்கு வந்த பிறகு, தவறான அடையாளங்களுடன் தொடர அனுமதிக்க முடியாது. அதாவது, 'தலைவெட்டி முனியப்பன்' சிலை என, அறநிலையத் துறை கருத அனுமதிக்க முடியாது.

எனவே, புத்தர் சிலை உள்ள இடத்தை, தமிழக தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அங்குள்ளது புத்தர் சிலை தான் என, அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். அந்த இடத்தில் பொதுமக்களை அனுமதிக்கலாம். ஆனால், புத்தர் சிலைக்கு பூஜை உள்ளிட்ட பிற சடங்குகள் செய்ய அனுமதிக்கக் கூடாது. இதை தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இது போல சில இடங்களில் புத்தர் சிலைக்கு வேறு பெயர்களில் இந்து மத முறையில் வழிபாடு நடத்தப்பட்டு வருவதாக பௌத்த ஆய்வாளர்கள் சில ஆண்டுகளாக தங்களுடைய கள ஆய்வுகள் மூலம் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

அயோத்திதாசரின் வாழும் பௌத்தம் நூலை எழுதியவர், ஆய்வாளர், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் 2015 ஆம் ஆண்டு சேலம் பெரியேரியில் உள்ள தலைவெட்டி முனியப்பன் சிலை புத்தர் சிலை என்று ஆய்வுக் கட்டுரை எழுதினார். இந்த நிலையில்தான், தலைவெட்டி முனியப்பன் அல்ல, அது புத்தர் சிலைதான் என்று தொல்லியல் துறையில் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நாள் வரை தலைவெட்டி முனியப்பன் என்ற பெயரில் மக்கள் வழிபாட்டில் இருந்த புத்தர் சிலை இனி தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பதால் என்ன நடக்கும் என்பது உள்ளிட்ட சில பண்பாட்டு பிரச்னைகள் தொடர்பாக ஸ்டாலின் ராஜாங்கம் நம்மிடம் பேசினார்.

அயோத்திதாசரின் பார்வையில் பௌத்தம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் பேசியதாவது:

“பௌத்த தலங்கள் சார்ந்து அரசாங்கம் ஏற்கெனவே தவறாக செயல்படுகிறது. ஊர்களிலோ மற்ற இடங்களிலோ சிலையாக இருக்கிற புத்தர் சிலைகளை, அருங்காட்சியகங்களுக்கு எடுத்துச் செல்கிறது. ஒரு விஷயத்தை அதனுடைய பண்பாட்டில் இருந்து பெயர்த்து எடுத்துப் போய், அதை வெறுமனே ஆவணமாக மாற்றுவதைத் தான் இந்த அருங்காட்சியகப் பண்பாடு செய்கிறது.

ஒரு சிலைக்கான மதிப்பு அதனுடைய பண்பாட்டு பின்புலத்தில்தான் கிடைக்கிறது. இங்கே பண்பாடு என்பது மக்களுடைய வழிபாட்டில் இருந்தால்தான், அதற்கு மதிப்பு. தொல்லியல் துறையைப் பொறுத்தவரையில், அதை ஒரு பண்பாட்டு விஷயத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்காமல், அதை ஒரு வரலாற்றுச் சான்றாக மட்டும் பார்க்கிறார்கள். அதனால், அந்த சிலையை அருங்காட்சியகத்தில் எடுத்துக்கொண்டு போய் வைக்கிறார்கள்.

அருங்காட்சியகத்தில் கொண்டுபோய் வைக்கும்போது என்னவாகிறது என்றால், சில நேரம் பராமரிக்கிறார்கள். இல்லையென்றால், அதைக் கட்டி வெளியே போட்டுவிடுகிறார்கள்.

உதாரணத்துக்கு நீங்கள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு போய் பார்த்தால், அருங்காட்சியகத்துக்குள் நிறைய புத்தர் சிலைகள் இருக்கிறது. அந்த எண்ணிக்கைக்கு இணையாக வெளியே குடோனில் நிறைய புத்தர் சிலைகள் கட்டிப் போடப்பட்டிருக்கிறது.

அந்த புத்தர் சிலைகளை அவர்கள் எங்கே எடுத்தார்களோ அங்கேயே விட்டுவைத்திருந்தால், மக்கள் அதை ஒரு பயன்பாட்டில் வைத்திருப்பார்கள். மக்கள் அவர்களுக்கு தெரிந்த வழியில் அதை வழிபாட்டுக்கு உரியதாக மாற்றி வைத்திருப்பார்கள். அதனால், தொல்லியல் துறை இந்த விஷயம் பற்றி மிகவும் தீவிரமாக யோசிக்க வேண்டும். இந்த புத்தர் சிலைகளை அவை புழங்கிய, பயன்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து கொண்டுவருவதன் மூலமாக, அதை நாம் எப்படி ஒரு மக்கள் பண்பாட்டில் இருந்து பிரித்து எடுத்துக்கொண்டு வருகிறோம் என்பதைப் பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டும். அந்த சிலை வெறும் வரலாற்றுச் சான்று மட்டும் கிடையாது. அது ஒரு பண்பாட்டு அடையாளம். அதையொட்டி அந்த ஊரில் ஒரு கதை இருந்திருக்கும். ஒரு வழிபாட்டு முறை இருந்திருக்கும். அதையொட்டி ஒரு கோயில் வழிபாடு இருந்திருக்கும். இந்த சிலையை நீங்கள் தனியா கொண்டுவருவதனால், எல்லாவற்றிலிருந்தும் பண்பாட்டு இணைப்புகளில் இருந்தும் அந்த சிலை பிரித்து எடுக்கப்படுகிறது. எனவே, தொல்லியல் துறையினர் இது போன்ற சிலைகளை, பழைய தடங்களை, அந்தந்த இடத்திலே வைத்து பாதுகாக்க முன் வரவேண்டும்.

சேலம் பெரியேரி புத்தர் சிலையையும் தொல்லியல் துறை அங்கேயே வைத்து பராமரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால, அந்த சிலைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றால், அந்த இடத்திலேயே அதற்கு ஒரு வழிபாட்டு விஷயத்தை உருவாக்கி தொல்லியல் துறையின் கண்காணிப்பில் அதை கொண்டுவர வேண்டும். அப்படி கொண்டுவந்தால்தான், அதை ஒரே நேரத்தில் ஒரு வரலாற்றுச் சான்றாகவும் காட்ட முடியும். அந்த வரலாற்றுச் சான்று எப்படி மக்களால் வழிபடக்கூடிய ஒரு பண்பாட்டு நிலையில் இருக்க முடியும் என்ற இரண்டு நோக்கமும் நிறைவேறும்.

பண்பாட்டு பின்புலத்தில் இருந்து அந்த சிலையைக் கொண்டுபோவதன் மூலமாக, அதை வெறுமனே ஒரு சிலையாக தேங்க வைக்கிறார்கள். அதனுடைய ஒரு பண்பாட்டு அம்சத்தை காலி பண்ணிவிடுகிறார்கள்.

அதனால், புத்தர் சிலை எங்கே கிடைக்கிறதோ அங்கேயே ஒரு மையத்தை ஏற்படுத்தி, ஒரு சுற்றுச்சுவரை அமைத்து அதை ஒரு வழிபாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது ஒரு அம்சம். இது தொல்லியல் துறை செய்ய வேண்டிய விஷயம்.

ஆனால், வழிபாடு என்பதில் ஒரு பிரச்னை இருக்கிறது. இந்த சிலைகளை வழிபாட்டில் வைப்பது அதற்கு செய்கிற நியாயம் என்று சொன்னாலும் கூட, அந்த வழிபாடு என்னவாக இருக்கிறது?

இன்றைக்கு புத்தருக்கு என்று ஒரு வழிபாட்டு மரபு இல்லாமல் பண்ணிவிட்டார்கள். அதனால், மக்கள் அவர்கள் இந்து மதத்துடன் புழங்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, அந்த சிலைகள் இந்து தெய்வங்களில் ஒன்றாக பாவித்து வணங்க ஆரம்பிக்கிறார்கள். அப்போது, தொல்லியலாளர்கள், புத்தர் சிலையை வெறும் வரலாறாகப் பார்த்து, அதனுடைய பண்பாட்டு அம்சத்தை காயடித்துவிட்டார்கள். வெகுமக்கள் பண்பாட்டில், அது என்னவாகிவிட்டது என்றால், பௌத்தம் வரலாற்று ரீதியாக எப்படி இருந்தது என்று மறந்துவிட்டு, பண்பாடு ரீதியாக மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள். அந்த பண்பாடு என்பது இன்றைய இந்துப் பண்பாடாக இருக்கிறது. அப்படி என்றால், இரண்டிலுமே பிரச்னை இருக்கிறது. ஆனால், அந்த சிலைக்கு இரண்டு அடையாளமும் முக்கியம். வரலாறாகவும் பார்க்க வேண்டும். வரலாற்று ரீதியாகப் பார்த்தால்தான், அதை இந்து மத மரபாக மாற்றாமல், ஒரு பௌத்த மரபாக தக்க வைக்க முடியும். அதே நேரத்தில், அதை பண்பாடாகவும் பார்க்க வேண்டும். தொல்லியல் துறை மற்றும் வெகுமக்கள் பண்பாடு ஆகிய இரு பிரிவுக்கும் இந்த இரண்டு புரிதலும் இருக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டு பிரிவினரும் ஏதாவது ஒரு அடையாளத்தை விட்டுவிட்டு ஒரு அடையாளத்தை பராமரிக்கும் போக்கு இருக்கிறது.

இந்த இடத்தில் நாம் அதை வெறும் வரலாறாக பார்க்காதீர்கள். பண்பாடாகப் பாருங்கள் என்று சொல்வதற்கு தொல்லியல் துறை இருக்கிறது. ஆனால், மையப்படுத்தப்பட்டவர்கள் இருந்தால்தானே இதை மக்களிடம் சொல்ல முடியும். அப்போது, இந்த இடத்தில் எங்கே பிரச்னை வருகிறது என்றால், புத்தர் கோயில் என்று கருத்து மீட்பதை, பௌத்தம் சம்பந்தமாக பேசுகிறவர்கள், எழுதுகிறவர்கள், செயல்படுகிறவர்களுக்கு இடையில், ஒரு விழிப்புணர்வு வேண்டும். இப்போது நாம் அந்த சிலையை புத்தர் சிலை என்று சொல்லிவிட்டோம். இதற்கு அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம்?

இந்த சிலை இந்து மத கடவுள் சிலை அல்ல, புத்தர் சிலை என்று மீட்கிற பல பேருக்கு, பண்பாட்டு ரீதியான பார்வை கிடையாது. அவர்கள் அரசியல் பௌத்தர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தெய்வ வணக்கமுறை தவறு என்று நினைக்கிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், இதை மீட்டெடுத்த பின்னால், அதை என்ன செய்வது என்ற ஒரு பார்வை இல்லாததால், பண்பாட்டு நெறிமுறைகளோ, வழிபாட்டு முறையோ, பூஜை முறையோ, அவர்களிடம் இல்லாமல் போனதால் என்ன செய்வது என்று தெரியாமல் போகிறார்கள்.

இது மாதிரி புத்தர் சிலைகளை மீட்கக்கூடிய புத்த குழுக்கள், இனிமேலாவது பௌத்த அடையாளங்களை வெறுமனே ஒரு வரலாற்றுச் சான்றாகப் பார்ப்பதோடு நிறுத்தாமல், அதை மக்கள் பண்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றால், அதற்கென்று ஒரு வணக்கமுறையை, வழிபாட்டு முறையைக் கொண்டுவர வேண்டும். அதற்கென்று இனிமேலாவது ஒரு வழிபாட்டு முறையை அவர்கள் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இதுபோல மீட்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

இந்த சிலைகள் தொல்லியல் துறைகளிடம் செல்வதால், அது பண்பாட்டு மதிப்புகளை இழந்து ஒரு கல்லாக மட்டுமே இருக்கும். அதை வெறும் வரலாற்றுச் சான்றாக மாற்றப் போகிறார்கள். தொல்லியல் துறை ஏற்கெனவே, கையில் எடுத்துக்கொண்ட கோயில்கள், வரலாற்று தலங்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் ஒழுங்காக முழுமையாகப் பராமரித்ததே கிடையாது.

அதனால், இந்த விஷயத்தில், புத்தர் சிலை இத்தனை நாள் மக்கள் வழிபாட்டில் இருந்ததனால்தான், இது ஒரு முக்கியமான இடமாக இருந்தது. அந்த சிலையைப் பண்பாடுதான் காப்பாற்றியது. ஆனால், மக்கள் வழிபாட்டு முறை, பண்பாடு என்னவாக இருக்கிறது என்றால், புத்தர் எதை சொன்னாரோ அதற்கு எதிரான பண்பாடாக இருக்கிறது. ஆனால், அந்த பெயரில் அந்த சிலை காப்பாற்றப்பட்டு வந்தது. அதனால், அது ஒரு பண்பாட்டு நிலையில் மக்கள் வழிபாட்டில் இருப்பதைத்தான் நான் ஆதரிப்பேன். புத்தர் சிலையை ஒரு பண்பாட்டு நிலையில் தக்கவைத்தது அந்த வழிபாடுதான்.

இன்றைக்கு அருங்காட்சியகத்தில் இருக்கிற எந்த புத்தர் சிலைக்காவது வரலாறு எழுத முடியுமா? தமிழ்நாட்டில் இருக்கிற எந்த புத்தர் சிலைக்கும் மக்கள் வழக்கில் புத்தர் என்று பெயர் கிடையாது. தமிழ்நாட்டில் இதுவரைக்கும் கிடைத்த எந்த புத்தர் சிலைக்காவது, என்ன பெயர் என்று கேட்டுப் பாருங்கள். முனியாண்டி, செட்டி, சிவனார் என்பார்கள். அந்த பெயருக்கு ஒரு அர்த்தம் இருந்தது. அந்தப் பெயரை ஏன் வழங்கினார்கள் என்பதற்கு ஒரு கதை இருக்கும்.

ஒரு ஊரில் மக்கள் புத்தர் சிலையை சாம்பவர் என்று வணங்குகிறார்கள். சாம்பவர் என்பது ஒரு சாதியின் பெயர். அப்போது, அந்த சமூகத்துக்கும் புத்தருக்கும் ஏதோ ஒருதொடர்பு இருப்பதை அந்த பெயர் தக்கவைத்திருக்கிறது. ஆனால், அதே சிலை, அருங்காட்சியகத்துக்கும், தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்கும் போய்விட்டால் அதற்கு என்ன பெயர் என்றால், புத்தர். தொல்லியல் துறையைப் பொறுத்தவரைக்கும் எல்லா சிலையுமே புத்தர் சிலைதான். ஆனால், மக்களைப் பொறுத்தவரைகும் அதற்கு உள்ளூரில் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் அது ஒரு பண்பாட்டு நிலையில் இருப்பதுதான் காரணம்.

எனவே புத்தர் சிலையை பண்பாட்டு நடைமுறையில் உயிர்ப்புடன் வைக்க வேண்டும் என்றால், பௌத்தம் பற்றி பேசக் கூடியவர்கள், புத்த சங்கத்தினர், இனிமேலாவது பௌத்தம் தொடர்பான சிலைகளையோ, அதை நடைமுறை பயன்பாட்டில் வைப்பதற்கான சில பொது விதிமுறைகளை அவர்கள் ஒன்று கூடி உருவாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம். அது ஒரு பண்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

பௌத்தம் தொடர்பாக எந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்கு பௌத்தத்தை நடைமுறையில் புழக்கத்தில் வைத்துக்கொள்வதற்கான விதிமுறைகளும் அது சார்ந்த விளக்கங்களும் கண்டுபிடித்தாக வேண்டியிருக்கிறது. இல்லையெனில், அது மீண்டும் ஒட்டடை படிந்து ஒரு வரலாற்றுச் சான்றாக மாறும். இல்லாவிட்டால், அது இந்து மத மரபாகக் கருதப்படும். அதனால், பௌத்தம் பற்றி பேசுகிறவர்கள் இனிமேல் இதைப் பற்றிதான் சிந்திக்க வேண்டும். இதில் என்ன பிரச்னை என்றால், தமிழ்நாட்டில் பௌத்தம் பற்றி பேசுகிறவர்கள் பெரும்பாலும் அரசியல் பௌத்தர்கள். அரசியல் ரீதியாக தங்களை பௌத்தர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்களே தவிர, பண்பாட்டு நிலையில் பௌத்தத்தைப் பற்றி யோசித்தவர்கள் கிடையாது. அதனால்தான், அதை ஒரு பண்பாட்டு நிலையில் எப்படி நடைமுறையில் புழக்கத்திற்கு கொண்டுவருவது என்பதைப் பற்றி யோசிக்காமலே விட்டுவிட்டார்கள். இதுவரைக்கும் நமக்கு ஒரு உதாரணம் இல்லை. முதல் முறையாக, முனியப்பன் சிலை கிடைத்திருக்கிறது. இப்போதுதான் அவர்களுக்கு இந்த நெருக்கடி வருகிறது.” என்று எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் விரிவாகப் பேசினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment