Advertisment

கூடாநட்பு... பயம்... கூண்டுக்கிளி..! அதிமுக.வை விளாசும் தமிமுன் அன்சாரி

Thamimun Ansari MLA about CAA Protest: என்.பி.ஆர். கணக்கெடுக்க வருகிற அதிகாரிக்கு தேனீர், குடிநீர் கொடுத்து உபசரிப்போம். ஆனா, ஆவணங்களை கொடுக்க மாட்டோம்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
dmk - salaimariyal - tamimun ansari

thamimun ansari Exclusive interview

சி.ஏ.ஏ., என்.பி.ஆர் எதிர்ப்புப் போராட்டங்களை தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்பவர்களில் முக்கியமானவர், தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.! அதிமுக.வின் இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்தவர். எனினும் கொள்கைப் பயணத்திற்கு அது தடையாக இருக்கும் என்றால், எம்.எல்.ஏ. பதவி அவசியமில்லை என வெளிப்படையாக அறிவித்து, தனிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.

Advertisment

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரான அவரிடம், சி.ஏ.ஏ. என்.பி.ஆர். எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து பேசியதில் இருந்து...

“இந்தப் போராட்டத்தின் நோக்கம், ஈழத்தமிழர்கள் உள்பட அண்டை நாடுகளில் இருந்து வருகிறவர்களை பாகுபாடு இன்றி அனுமதிக்க வேண்டும். என்.பி.ஆர்.-ல் சர்ச்சைக்குரிய 6 கேள்விகளை தவிர்த்துவிட்டு, எஞ்சிய 15 கேள்விகளை அமுல்படுத்துவதில் தவறில்லை. மத்திய அரசு இதை ஏற்கும்வரை, தமிழகத்தில் என்.பி.ஆர்.-ஐ அமல்படுத்த மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்கலாம். என்.பி.ஆர்.ஐயும் வாஜ்பாய், மன்மோகன்சிங் காலத்தில் கொண்டுவரப்பட்ட நடைமுறைப்படி அமுல்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை. புதிதாக 6 கேள்விகளை என்.பி.ஆர்.-ல் திணித்ததுதான் பிரச்னை. ‘இவற்றை தமிழ்நாட்டில் அமுல்படுத்த மாட்டோம். தமிழகத்திற்கு விதிவிலக்கு வேண்டும்’ என வருகிற 9-ம் தேதி கூடவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

publive-image Thamimun Ansari MLA About CAA Protest And AIADMK

அண்டை நாடுகளில் மெஜாரிட்டியாக வசிக்கும் இஸ்லாமியர்கள் இங்கு அகதிகளாக வரத் தேவையில்லாத சூழலில், சி.ஏ.ஏ.வில் அவர்களை சேர்க்கவேண்டிய அவசியம் என்ன?

ஒரு வாதத்திற்கு அதை வைத்துக்கொண்டாலும், ஈழத்தமிழர்கள் யார்? ஈழத்தமிழர்கள் மதத்தால், மொழியால், இனத்தால் மும்முனைப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியக் குடியுரிமைக் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து, குடியுரிமை கேட்பவர்கள் எண்ணிக்கை மொத்தமே முப்பத்தைந்தாயிரத்திற்கும் குறைவுதான். இவர்களை சேர்க்கையில், ஈழத்தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை? எனக் கேட்கிறோம்.

நேபாளம், பூடானில் இருந்து மத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி வருகிற கிறிஸ்தவர்களை அதில் ஏன் இணைக்கவில்லை என கேட்கிறோம். பர்மாவில் ரோஹிங்யாக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை ஏன் சேர்க்கவில்லை? எனக் கேட்கிறோம். யாருக்கும் குடியுரிமை கொடுக்கக்கூடாது என நாங்கள் கூறவில்லை. இவர்களுக்கும் கொடுங்கள் என்கிறோம்”.

இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“தமிழ்நாடு அரசுக்கு உள்ளுக்குள் மக்களின் எண்ணங்களை மதிக்கணும்ங்கிற எண்ணம் இருக்கு. ஆனா மத்திய பாஜக அரசுக்கு பயந்துகிட்டு நடவடிக்கை எடுக்காம இருக்காங்க. ஆட்சிதான் முக்கியம்னு நினைச்சாங்கன்னா, அவங்க கட்சி தோல்வியை சந்திச்சுரும். கட்சிதான் முக்கியம்னு நினைச்சாங்கன்னா, மீண்டும் அவங்க ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கு. கட்சியின் எதிர்காலம் முக்கியமா, ஓராண்டுகால ஆட்சி முக்கியமா? என தீர்மானிக்கிற இடத்திற்கு அதிமுக வரவேண்டும். பாலுக்கும் காவல், பூனைக்கும் காவல் என்கிற நிலைப்பாடை அதிமுக எடுக்கக்கூடாது”.

ஆட்சி போயிடும்னு உண்மையிலேயே பயப்படுறாங்களா?

‘பயந்து போய்தான் நிக்குறாங்க. ஏற்கனவே நீட், உதய், ஜி.எஸ்.டி., கல்வி உரிமை விட்டுக் கொடுக்கிறது, மாநில உரிமையை விட்டுக் கொடுக்கிறது... என அதிமுக.வுக்கு கெட்டப் பெயர். இந்த விஷயத்துல (சிஏஏ, என்.பி.ஆர்.) கோபம் இன்னும் பெருகிடுச்சு. அதிமுக தொண்டர்களே இந்த விஷயத்துல அதிமுக தலைமை மீது வருத்தத்துல இருக்காங்க’

ஒரு ஆட்சியை கலைப்பது இன்று அவ்வளவு சுலபமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அப்புறம் எப்படி அந்த பயத்தில் இருப்பார்கள்?

“அதுதான் எங்களுக்கும் ஆச்சரியமா இருக்கு. பிஜேபி-யில இருந்து மிரட்டுறாங்க. ஆட்சியைக் கலைப்போம் என ஹெச்.ராஜா போன்றவர்கள் பேசுகிறார்கள். இவங்க அதுக்கு ரீயாக்‌ஷன் கொடுக்கணுமா, இல்லையா? ஏன் இப்படி பயந்து நடுங்குறாங்க. பயப்பட, பயப்பட தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்னியப்படுறாங்க.”

publive-image

ஆட்சியைக் கலைக்க முடியாது என செல்லூர் ராஜூ மாதிரி அமைச்சர்கள் பதில் கொடுத்திருக்காங்க..

‘கீழ இருக்கிறவங்க பேசுறது வேறு. முதல்வரும், துணை முதல்வரும் உரிய பதிலடி கொடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா, இல்லையா? அதை ஏன் செய்ய மாட்டுக்குறாங்க.”

கோவையில் இருந்து இஸ்லாமிய அமைப்பினர் முதல்வரை பார்த்திருக்காங்க. இவங்களுக்கு என்ன மாதிரியான பதில் கிடைக்கிறது?

“மக்களின் போராட்டத்தில் நியாயம் இருக்கிற காரணத்தால்தான் அவர் சந்திக்கிறார். அவங்க கோரிக்கையை ஏற்கிற முதல்வர், அதை ஏன் செயல்படுத்த மாட்டேங்கிறார்? அப்ப என்ன பயம்? அதனால்தான் சொல்கிறோம்... கூண்டுக்குள் சிக்கிய கிளி கதையாகிவிட்டது அதிமுக.வின் நிலை.”

டெல்லி மாதிரி நிலை இங்கு இல்லை. போராட்ட உரிமைகளை இந்த அரசு வழங்குகிறது என்பதை ஏற்கிறீர்களா?

“அது உண்மை. போராட்டம் நடத்த அனுமதிக்கிறார்கள். வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட ஓரிரு இடங்களில் காவல்துறையால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலும், பெரும்பாலான இடங்களில் காவல்துறை ஒத்துழைப்பு தருகிறது. அதை மறுப்பதற்கில்லை.

அதிமுக.வை நினைத்து நாங்க பரிதாபப்படுகிறோம். வாக்கு வங்கியே இல்லாத ஒரு கட்சிக்கு பயந்துகிட்டு, சிறுபான்மை சமூக வாக்கு வங்கியை இழக்கிறாங்க. சிறுபான்மை வாக்கு வங்கியில் சராசரியாக 30 முதல் 40 சதவிகித வாக்கு வங்கி அதிமுக.வுக்கு இருந்தது. அதை இழந்துட்டாங்க. இதுக்கு காரணம், கூடா நட்பு.”

தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என முதல்வர் கூறுவதில் நம்பிக்கை இல்லையா?

“முதல்வரின் நல்ல எண்ணத்தை நாங்க மதிக்கிறோம். ஆனா அதிமுக.வையே பாஜக.விடம் இருந்து உங்களால பாதுகாக்க முடியலையே. உங்களையே பாதுகாக்க முடியாத ஒரு பரிதாப நிலையில் இருக்கும்போது, நீங்க எப்படி அடுத்தவங்களை பாதுகாப்பீங்க? இதுக்கு என்ன பதில்?”

அப்படிச் சொல்ல முடியுமா? நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 5 சீட்களைத்தான் அதிமுக.விடம் இருந்து பாஜக.வால் பெற முடிந்தது. இன்று வரை ஒரு ராஜ்யசபா சீட் கூட கேட்டுப் பெற முடியவில்லை...

“அதிமுக அரசியலை இப்போது தீர்மானிப்பது டெல்லியில் உள்ள பாஜக சக்திகள்தான். இது ஊரறிந்த உண்மை. அதேசமயம் பாஜக.வை வளர்த்து விட்டுறக் கூடாது என்பதிலும் சிலசமயம் தெளிவா இருக்காங்க. அதேசமயம், பாஜக.வை தூக்கி எறியவும் முடியலை. அந்த ரெண்டும் கெட்டான் நிலையில் நிக்குது அதிமுக.”

அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி ஆகியோர் சி.ஏ.ஏ. எதிர்ப்பு தீர்மானம் தொடர்பாகவே அமித்ஷாவை சந்தித்ததாக செய்திகள் வருகிறதே?

“சரியாகத் தெரியாமல் அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை.”

எதிர்க்கட்சிகளின் தூண்டுதல்தான் இந்தப் போராட்டங்களுக்கு காரணம் என்கிற விமர்சனம் பற்றி?

“மக்கள் நடத்தும் போராட்டத்தில், எதிர்க்கட்சிகள் கலந்து கொள்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இதே பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக இதற்கு எதிராக தீர்மானம் போட்டிருக்கிறது. நிதிஷ்குமார் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார். சிரோன்மணி அகாலிதளம் தீர்மானம் போட்டிருக்காங்க. ராம்விலாஸ் பாஸ்வானும் எதிர்க்கிறார். பாஜக கூட்டணியிலேயே இவ்வளவு பேர் எதிர்க்கையில், எதிர்க்கட்சி தூண்டுதல் என்பது அர்த்தம் இல்லாதது.”

அதிமுக அணியில் இன்னமும் இருக்கிறீர்களா?

“ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் கூடா நட்பை எதிர்த்து வெளியேறிவிட்டோம். இப்போது இருப்பது, பரஸ்பரம் எல்லாக் கட்சிகளுடனும் இருக்கும் நட்பு; ஒரு மரியாதை நிமித்தமான தொடர்பு, அவ்வளவுதான். அரசியல் கூட்டணி எப்பவோ முடிந்துவிட்டது.”

ஒருவேளை வருகிற சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிஏஏ, என்.பி.ஆர். எதிர்ப்புத் தீர்மானங்களை நிறைவேற்றாவிட்டால்?

“அடுத்து, ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை அறிவிப்போம். என்.பி.ஆர். கணக்கெடுக்க வருகிற அதிகாரிக்கு தேனீர், குடிநீர் கொடுத்து உபசரிப்போம். ஆனா, ஆவணங்களை கொடுக்க மாட்டோம்.”

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Aiadmk Thamimun Ansari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment