தஞ்சை பேருந்து விபத்து: முதல்வர் நிவாரண நிதி அறிவிப்பு

தஞ்சை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் இருந்து கும்பகோணத்திற்கு பயணிகள் சுமார் 60 பேருடன் அரசு பேருந்தும், இரும்பு கம்பி ஏற்றி வந்த சரக்கு மினி லாரியும் மோதி தஞ்சை வல்லம் அருகே விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பல்லடத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ரவிச்சந்திரன், திருச்சி உறையூரைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் சதீஷ்குமார் மற்றும் ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், இரண்டு பெண்கள் நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இன்று அதிகாலை மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்த விபத்து செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சோகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேபோல், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்றும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

×Close
×Close