தஞ்சை பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

அரசு பேருந்தும், மினி லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் இரும்பு கம்பிகள் ஏற்றிக்கொண்டு முன்னால் சென்றுகொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதில் எட்டு பெண்கள் உள்பட மொத்தம் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான அரசு பேருந்து திருப்பூரில் இருந்து கும்பகோணம் சென்று கொண்டிருந்தது. பல்லடத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (45) அரசு பேருந்தை ஓட்டிவந்தார். நேற்று இரவு 7.30 மணியளவில் தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, திருச்சியிலிருந்து தஞ்சைக்கு இரும்புக்கம்பிகள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ எந்தவித சமிக்ஞையும் காட்டாமல் திடீரென இடதுபக்கம் திரும்பியது.

விபத்தில் சிக்கிய பஸ்சில் இருந்து பயணிகளை மீட்கிறார்கள்.

இதை சற்றும் எதிர்பாராத ரவிச்சந்திரன் பேருந்தை நிறுத்த முயன்றார். எனினும் பேருந்து அவரது கட்டுப்பாட்டை இழந்து சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் சரக்கு ஆட்டோவில் பின்புறம் வெளியே நீட்டிக்கொண்டிருந்த இரும்புக் கம்பிகள் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பயணிகள் மீது குத்தியது. இதில் வலி தாங்க முடியாமல் பயணிகள் அலறினர். மேலும் பேருந்து மோதிய வேகத்தில் சரக்கு ஆட்டோவை சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்றது. பேருந்தின் முன்பக்க டயரும் வெடித்தது. இவ்விபத்தில் சரக்கு ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. பேருந்தின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்தது.

இவ்விபத்தில் பல்லடத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ரவிச்சந்திரன், திருச்சி உறையூரைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் சதீஷ்குமார் (32) மற்றும் ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், இரண்டு பெண்கள் நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இன்று அதிகாலை புவனா (21) என்ற ஒரு பெண் உயிரிழந்தார்.

மீட்பு பணிகள்

இவ்விபத்தில் உயரிழந்தவர்கள் விபரம் வருமாறு:

அரசு பேருந்து ஓட்டுநர் ரவிச்சந்திரன் (45), சரக்கு ஆட்டோ ஓட்டுநர் சதீஷ்குமார் (32), கும்பகோணத்தைச் சேர்ந்த பூங்குழலி (46) மற்றும் அருள்மொழி (38), அரியலூர் மாவட்டம் த. பழூர் ஒன்றியம் இருக்கையூர்யுர் கிராமத்தைச் சேர்ரந்த மாலினி (19), மன்னார்குடியை அடுத்துள்ள பரவாக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தி (21), தஞ்சாவூர் தேவி நகரைச் சேர்ரந்த ஹேமலதா (25), நீடாமங்கலத்தைச் சேர்ரந்த துர்ரகாதேவி (24), ஒரத்தநாடு அடுத்துள்ள கூவத்தூரைச் சேர்ந்த தமிழ்ப்பிரியா (19) மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த புவனா (24).

பயணிகளை மீட்கும் பொதுமக்கள்

விபத்துக் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். தகவலறிந்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தஞ்சாவூர்வு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து சென்று அங்கு சிகிச்சைப்பெற்றுவரும் பயணிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவனையில் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

×Close
×Close