தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் காற்றுடன் பெய்த கனமழையில் பள்ளிக்கூடம் வளாகத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து மாணவிகள் மீது விழுந்ததில் பத்தாம் வகுப்பு மாணவி உயிர் இழந்தார். படுகாயத்துடன் ஒரு மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்த மாணவிகளின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை கண்டகரயம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்- பத்மா தம்பதியினரின் மகள் சுஷ்மிதா. கணபதி அக்ரஹாரம் தட்டாரத் தெருவை சேர்ந்த கணபதி மகள் ராஜேஸ்வரி.
இருவரும் பசுபதிகோவில் காபிரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று மாலை வகுப்பு முடிந்து வீட்டிற்கு செல்ல வகுப்பறையை விட்டு வெளியே வந்துள்ளனர்.
அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில், பள்ளி வளாகத்தில் இருந்த தூங்கு மூஞ்சி மரம் வேரோடு சாய்ந்து இவர்கள் மீது விழுந்தது.
படுகாயத்துடன் மரத்தின் அடியில் சிக்கி இருந்த மாணவிகள் இரண்டு பேரையும் பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி சுஷ்மிதா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மற்றொரு மாணவி ராஜேஸ்வரிக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவி உயிர் இழந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் தஞ்சை கும்பகோணம் இடையிலான சாலையில் அய்யம்பேட்டை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் அவர்கள் கலைந்து சென்றனர்.
முன்னதாக, மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த மாணவி சுஷ்மிதா சென்னின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
மாணவி சுஷ்மிதாஷென்னை இழந்து வாடும் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வி ராஜேஸ்வரிக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிதியதவி வழங்கவும் உத்திரவிட்டுள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.