Advertisment

மாணவியின் மரணத்தை அரசியலுக்காக திசை திருப்புவது வருத்தமளிக்கிறது – பள்ளி நிர்வாக சபை விளக்கம்

மதமாற்ற நடவடிக்கை என குற்றம் சாட்டுவதற்கு எங்கள் நிறுவனங்களில் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை என அரியலூர் மாணவி படித்த பள்ளியின் நிர்வாக சபை விளக்கம்

author-image
WebDesk
New Update
Tamilnadu news in tamil: Mangadu school student commits suicide; Case filed against college student in 3 sections

Thanjavur school management denies allegations of religious conversion: தஞ்சாவூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தும் பள்ளியில் படித்த பன்னிரண்டாம் மாணவியின் மரணத்தை அரசியல் காரணங்களுக்காகத் திசைதிருப்பும் முயற்சிகள் வருத்தம் அளிப்பதாக பள்ளி நிர்வாக சபையின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

புதுச்சேரியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தூய இருதய மரியன்னை சபையின் சுப்பீரியர் ஜெனரல் பாத்திமா பவுலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

எங்களது தூய இருதய மரியன்னை சபை, கடந்த 180 ஆண்டுகளாக கல்விப்பணி செய்து வருகிறது. எங்கள் அமைப்பு, பெண் கல்வி மற்றும் பெண் விடுதலைக்கு பங்களிப்பதில் முன்னணியில் உள்ளது. கிராமங்களிலும், குக்கிராமங்களிலும் தமிழ்வழிப் பள்ளிகளை நடத்தி, சமூகத்தால் கல்வி மறுக்கப்பட்ட, பட்டியல் வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் அனைவருக்கும் மதச்சார்பற்ற கல்வியை வழங்குகிறோம், யாருடைய மத நம்பிக்கைகளிலும் தலையிட மாட்டோம். அனைவரின் நம்பிக்கையையும் நாங்கள் மதிக்கிறோம், இதுவே எங்கள் பொது வாழ்வின் அடிப்படையாக இருக்கிறது.

எங்கள் நிறுவனங்களில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் இதற்கு சாட்சியாக நிற்கிறார்கள். எங்களது பள்ளிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலும், மனிதநேயத்தின் அடிப்படையிலும், நமது மாணவர்களின் மத அடையாளங்களுக்கு மேலாக உயர்ந்து இயங்குகின்றன. எங்கள் சமூகப் பொறுப்பை இழிவுபடுத்துவதும், எங்கள் நிறுவனங்களை பொய்யாகக் குற்றம் சாட்டுவதும் வருந்தத்தக்கது.

இச்சபையின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் 160 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி தொடங்கப்பட்டது. மாணவிகளின் நலன் கருதி 90 ஆண்டுகளாக அங்கு விடுதியும் செயல்படுகிறது.

இந்நிலையில், கடந்த 19-ம் தேதி பள்ளியில் படித்து வந்த மாணவி உயிரிழந்து வருத்தமளிக்கிறது. அவருக்கு பெற்றோர், உறவினர்கள், சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 489 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். விடுமுறை நாட்களில் கூட, அவள் வீட்டிற்கு செல்லாமல் எங்களுடன் இருக்க விரும்பினாள். அவள் எங்கள் குழந்தையாக வளர்ந்தாள், அவளுடைய மரணம் எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு.

உயிரிழந்த மாணவி, தன்னுடைய இறுதி வாக்குமூலத்தில், விடுதிக் காப்பாளர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். காவல்துறைக்கும், கல்வித் துறைக்கும், சட்ட விசாரணைகளுக்கும் எப்போதும் நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம். அதே சமயம், இச்சம்பவத்தை தங்கள் அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் கையில் எடுத்து திசை திருப்புவதும், பொய்களை விதைப்பதும், எங்களை அவதூறு செய்வதும் என பல வழிகளில் தொடர்வது வருத்தமாக உள்ளது.

எங்கள் சபை மீது இதுபோன்ற குற்றச்சாட்டு இதுவரை எழுந்தது இல்லை. ஒவ்வொரு குழந்தையின் ஆளுமையை, சுதந்திரத்தை, தனித்தன்மையை பெரிதும் மதிக்கிறோம். மதமாற்ற நடவடிக்கை என குற்றம் சாட்டுவதற்கு எங்கள் நிறுவனங்களில் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Thanjavur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment