கூட்டுறவு சங்க தேர்தல் முடிவு அறிவிக்கப்படாத சங்கங்களின் அன்றாட பணிகளை கூட்டுறவு வங்கிகளின் மாவட்ட மேலாளர், தொடக்க கூட்டுறவு வங்கி மேலாளர் இணைந்து மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 5 கட்டங்களாக கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியினர் முறைகேடுகள் ஈடுபட்டதாகவும், தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரிய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தலாம் ஆனால் அதன் முடிவுகளை வெளியிட கூடாது என்றும் தேர்தல் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரித்து ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பல்வேறு சங்களை சேர்ந்த சுமார் 500 வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரனைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளுங்கட்சியின் முறைகேடுகள் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பாக 7000 கோடி ரூபாயை மத்திய அரசு கூட்டுறவு சங்கங்களுக்கு ஒதுக்கியதன் காரணமாகவே உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் அவசர அவசரமாக கூட்டுறவு தேர்தல் நடத்தப்பட்டதாக வாதிட்டனர்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தேர்தலில் பிரச்சனை என்றால் தேர்தல் முடிந்தவுடன் கூட்டுறவு சங்க தேர்தல் தீர்ப்பாயத்தில் மட்டுமே வழக்கு தொடர முடியும் என்றும் வாதிட்டார். தேர்தல் தகராறுகளை தீர்ப்பாயத்தில் மட்டுமே தீர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை வரும் புதன்கிழமை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட தலைமை நீதிபதிகள், கூட்டுறவு சங்க தேர்தல் முடிவு அறிவிக்கப்படாத சங்கங்களின் அன்றாட பணிகளை கூட்டுறவு வங்கிகளின் மாவட்ட மேலாளர், தொடக்க கூட்டுறவு வங்கி மேலாளர் இணைந்து மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை என உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர்.